அப்போஸ்தலருடைய
நடபடிகள்
௧
லூக்காவின் இரண்டாவது புத்தகம்
௧ அன்பான தேயோப்பிலுவே, நான் எழுதிய முதல் புத்தகத்தில் இயேசு செய்தவைகளையும், கற்பித்தவைகளையும் எல்லாம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.
௨ நான் இயேசுவின் வாழ்க்கை முழுவதையும் தொடக்கத்திலிருந்து இறுதியில் அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது வரைக்கும் எழுதியிருந்தேன். இது நடக்கும் முன் இயேசு தான் தேர்ந்தெடுத்த அப்போஸ்தலர்களிடம் பேசினார். பரிசுத்த ஆவியின் வல்லமையால் அப்போஸ்தலர்கள் செய்யவேண்டியவற்றை இயேசு அவர்களுக்குக் கூறினார்.
௩ இது இயேசுவின் மரணத்திற்குப் பின்னர் நிகழ்ந்தது. ஆனால் அவர் அப்போஸ்தலருக்குத் தான் உயிரோடிருப்பதைக் காட்டினார். வல்லமைமிக்க செயல்கள் பலவற்றைச் செய்து இயேசு இதை நிரூபித்தார். இயேசு மரணத்தினின்று எழுந்த பின்பு 40 நாட்களில் அப்போஸ்தலர்கள் பலமுறை இயேசுவைப் பார்த்தனர். தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றி இயேசு அப்போஸ்தலர்களிடம் பேசினார்.
௪ ஒருமுறை இயேசு அவர்களோடு உணவு உட்கொண்டு இருக்கும்போது எருசலேமை விட்டுப் போக வேண்டாமென அவர்களுக்குக் கூறினார். இயேசு, “பிதா உங்களுக்குச் சிலவற்றைக் குறித்து வாக்குறுதி அளித்துள்ளார். இதைக் குறித்து முன்னரே நான் உங்களுக்குக் கூறினேன். இங்கேயே எருசலேமில் இந்த வாக்குறுதியைப் பெறுவதற்காகக் காத்திருங்கள்.
௫ யோவான் மக்களுக்கு, தண்ணீரால் ஞானஸ்நானம் வழங்கினான். ஆனால் ஒரு சில நாட்களில் நீங்கள் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்” என்று சொன்னார்.
இயேசுவின் பரமேறுதல்
௬ அப்போஸ்தலர்கள் எல்லோரும் ஒருமித்துக் கூடியிருந்தார்கள். அவர்கள் இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீங்கள் யூதர்களுக்கு அவர்களது இராஜ்யத்தை மீண்டும் கொடுக்கும் காலம் இதுவா?” என்று வினவினார்கள்.
௭ இயேசு அவர்களை நோக்கி “நாட்களையும் நேரத்தையும் பற்றிய முடிவெடுக்கும் அதிகாரம் உடையவர் பிதா ஒருவரே. உங்களால் இந்தக் காரியங்களை அறிந்துகொள்ள முடியாது.
௮ ஆனால் பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வருவார். வரும்போது நீங்கள் வல்லமையைப் பெறுவீர்கள். நீங்கள் எனது சாட்சிகளாக இருப்பீர்கள். மக்களுக்கு என்னைப்பற்றிக் கூறுவீர்கள். முதலில் எருசலேமின் மக்களுக்குக் கூறுவீர்கள். பின் யூதேயா முழுவதும். சமாரியாவிலும், உலகத்தின் எல்லாப் பகுதியிலும் நீங்கள் மக்களுக்குக் கூறுவீர்கள்” என்றார்.
௯ இயேசு அப்போஸ்தலர்களுக்கு இந்தக் காரியங்களைக் குறித்துக் கூறிய பிறகு வானிற்குள்ளாக அவர் மேலே எடுத்துச் செல்லப்பட்டார். அப்போஸ்தலர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அவர் மேகத்திற்குள்ளாகச் சென்றார். பின்னர் அவர்களால் அவரைப் பார்க்க முடியவில்லை.
௧௦ இயேசு மேலே போய்க்கொண்டிருந்தார். அப்போஸ்தலர்கள் வானையே நோக்கிக்கொண்டிருந்தனர். திடீரென வெண்ணிற ஆடை அணிந்த இருவர் அவர்களுக்கு அருகே நின்றனர்.
௧௧ அவ்விருவரும் அப்போஸ்தலர்களை நோக்கி, “கலிலேயாவிலிருந்து வந்துள்ள மனிதர்களே, ஏன் நீங்கள் வானத்தைப் பார்த்தவாறே நின்றுகொண்டிருக்கிறீர்கள்? இயேசு உங்களிடமிருந்து பரலோகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதை நீங்கள் கண்டீர்கள். நீங்கள் பார்த்தபோது சென்றதைப் போலவே அவர் திரும்பவும் வருவார்” என்று கூறினர்.
புதிய அப்போஸ்தலர்
௧௨ பின்பு ஒலிவ மலையிலிருந்து அப்போஸ்தலர்கள் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர். (இம்மலை எருசலேமிலிருந்து சுமார் ஒன்றரை மைல் தூரத்தில் உள்ளது)
௧௩ அப்போஸ்தலர்கள் நகரத்திற்குள் சென்றனர். அவர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றார்கள். அந்த அறை மாடியிலிருந்தது. பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலொமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகனாகிய யாக்கோபு, செலோத்தே எனப்படும் சீமோன் மற்றும் யாக்கோபின் மகனாகிய யூதாஸ் ஆகிய அப்போஸ்தலர்கள் அங்கிருந்தனர்.
௧௪ அப்போஸ்தலர்கள் அனைவரும் சேர்ந்திருந்தனர். ஒரே குறிக்கோள் உடையோராக விடாது பிரார்த்தனை செய்துகொண்டேயிருந்தனர். இயேசுவின் தாயாகிய மரியாளும் அவரது சகோதரர்களும் சில பெண்களும் அப்போஸ்தலரோடு கூட இருந்தனர்.
௧௫ சில நாட்களுக்குப் பிறகு விசுவாசிகளாக அவர்கள் ஒன்று கூடினர். (சுமார் 120 பேர் அக்கூட்டத்தில் இருந்தனர்.) பேதுரு எழுந்து நின்று,
௧௬-௧௭ “சகோதரர்களே! வேதவாக்கியங்களில் பரிசுத்த ஆவியானவர் சில காரியங்கள் நடக்கும் என்று தாவீதின் மூலமாகக் கூறினார். நமது கூட்டத்தில் ஒருவனாகிய யூதாஸைக்குறித்து அவன் கூறியுள்ளான். யூதாஸ் நம்மோடு கூட சேவையில் ஈடுபட்டிருந்தான். இயேசுவைச் சிறைபிடிக்க யூதாஸ் மனிதர்களுக்கு வழிகாட்டுவான் என்பதை ஆவியானவர் கூறியிருந்தார்,” என்றான்.
௧௮ (இதைச் செய்வதற்கு யூதாஸிற்குப் பணம் தரப்பட்டது. ஒரு நிலத்தை வாங்குவதற்கு அப்பணம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் யூதாஸ் தலைகுப்புற வீழ்ந்து அவன் சரீரம் பிளவுண்டது. அவனது குடல் வெளியே சரிந்தது.
௧௯ எருசலேமின் மக்கள் அனைவரும் இதை அறிந்தனர். எனவேதான் அந்நிலத்திற்கு “அக்கெல்தமா” என்று பெயரிட்டனர். அவர்கள் மொழியில் அக்கெல்தமா என்பது “இரத்த நிலம்” எனப் பொருள்படும்.)
௨௦ “சங்கீதத்தின் புத்தகத்தில் யூதாஸைக்குறித்து இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
“ ‘மக்கள் அவனது நிலத்தருகே செல்லலாகாது,
யாரும் அங்கு வாழலாகாது.’ சஙகீதம் 69:25
மேலும் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
‘இன்னொருவன் அவன் பணியைப் பெறட்டும்.’ சங்கீதம் 109:8
௨௧-௨௨ “எனவே இன்னொருவன் நம்மோடு சேர்ந்துகொண்டு இயேசு உயிரோடு எழுந்ததற்கு சாட்சியாக இருக்கட்டும். ஆண்டவராகிய இயேசு நம்மோடு இருந்தபோது எப்போதும் நம்மோடு கூட இருந்த மனிதர்களில் ஒருவனாக அவன் இருத்தல் வேண்டும். யோவான் ஞானஸ்நானம் கொடுக்கத் தொடங்கியதிலிருந்து இயேசு பரலோகத்திற்கு அழைத்துக்கொள்ளப்பட்டது வரைக்கும் நம்மோடு இருந்தவனாக அவன் இருக்க வேண்டும்” என்றான்.
௨௩ அப்போஸ்தலர்கள் கூட்டத்திற்கு முன் இருவரை நிறுத்தினர். ஒருவன் யோசேப்பு பர்சபா என்பவன். அவன் யுஸ்து என அழைக்கப்பட்டான். மற்றவன் மத்தியா என்பவன்.
௨௪-௨௫ அப்போஸ்தலர்கள், “ஆண்டவரே, நீர் எல்லா மனிதர்களின் உள்ளங்களையும் அறிந்தவர். இந்த இருவரில் உம் சேவைக்கு நீர் யாரைத் தேர்ந்தெடுக்கிறீர் என்பதை எங்களுக்குக் காட்டும். யூதாஸ் இதனைவிட்டு நீங்கித் தனக்குரிய இடத்திற்குச் சென்றுவிட்டான். ஆண்டவரே, எந்த மனிதன் அப்போஸ்தலனாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டும்!” என்று பிரார்த்தனை செய்தார்கள்.
௨௬ பின்னர் அப்போஸ்தலர்கள் அந்த இருவரில் ஒருவனைத் தேர்ந்தெடுக்க சீட்டுகள் எழுதிப் போட்டனர். அதன்படி ஆண்டவர் விரும்பியவராக மத்தியாவை சீட்டுகள் காட்டின. எனவே அவன் மற்ற பதினொருவரோடும் கூட ஓர் அப்போஸ்தலன் ஆனான்.