௫
சுவரின் மேல் எழுதிய கை
௧ அரசனான பெல்ஷாத்சார் தனது அதிகாரிகளில் 1,000 பேருக்கு விருந்து கொடுத்தான். அரசன் அவர்களோடு திராட்சைரசம் குடித்துக் கொண்டிருந்தான்.
௨ பெல்ஷாத்சார் திராட்சைரசம் குடித்துக்கொண்டிருக்கும்போதே அவன் தனது வேலைக்காரர்களுக்குத் தங்கத்தாலும் வெள்ளியாலுமான கிண்ணங்களைக் கொண்டுவரக் கட்டளையிட்டான். இந்தக் கிண்ணங்கள் அவனது தந்தையான நேபுகாத்நேச்சாரால் எருசலேமின் ஆலயத்திலிருந்து எடுத்துக் கொண்டு வரப்பட்டவை. அரசனான பெல்ஷாத்சார், தனது பிரபுக்களும், மனைவிகளும், அடிமைப் பெண்களும் அந்தக் கிண்ணங்களிலிருந்து குடிக்க வேண்டும் என்று விரும்பினான்.
௩ எனவே அவர்கள் எருசலேமின் தேவாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்டக் கிண்ணங்களைக் கொண்டு வந்தனர். அரசனும், அவனது அதிகாரிகளும், மனைவிகளும், அடிமைப் பெண்களும் அவற்றில் குடித்தனர்.
௪ அவர்கள் குடித்துக்கொண்டே தங்கள் விக்கிரக தெய்வங்களைப் போற்றினார்கள். அவர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு, கல், மண் போன்றவற்றால் செய்யப்பட்ட வெறும் சிலைகளைப் போற்றினார்கள்.
௫ பிறகு திடீரென்று ஒரு மனிதக் கை தோன்றி சுவரில் எழுதத் தொடங்கியது. விரல்கள் சுவரிலுள்ள சாந்துபூச்சின் மீது எழுதிற்று. அந்தக் கை அரசனது அரண்மனையில் விளக்குக்கு எதிராயிருந்த சுவரில் எழுதியது. அரசன் அந்தக் கை எழுதும்போது கவனித்துக்கொண்டிருந்தான்.
௬ அரசனான பெல்ஷாத்சார் மிகவும் பயந்தான். அவனது முகம் பயத்தால் வெளிறிற்று. அவனது முழங்கால்கள் நடுங்கி இடித்துக்கொண்டன. அவனால் எழுந்து நிற்க முடியவில்லை. ஏனென்றால் அவனது கால்கள் அவ்வளவு பலவீனமாக இருந்தன.
௭ அரசன் ஜோசியர்களையும், கல்தேயர்களையும் தன்னிடம் வருமாறு அழைத்தான். அவன் அந்த ஞானிகளிடம், “இந்த எழுத்தை வாசித்து இதன் பொருளை எனக்கு விளக்கும் எவருக்கும் நான் பரிசளிப்பேன். அவனுக்கு இரத்தாம்பர ஆடை அணிவித்து, அவன் கழுத்தில் பொன்மாலை அணிவிப்பேன். நான் அவனை எனது இராஜ்யத்தில் மூன்றாவது நிலையில் உள்ள ஆளுநராக ஆக்குவேன்” என்றான்.
௮ எனவே, அரசனின் எல்லா ஞானிகளும் உள்ளே வந்தனர். அவர்களால் அந்த எழுத்துக்களை வாசிக்கமுடியவில்லை.
௯ பெல்ஷாத்சாரின் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர். அதோடு அரசன் மேலும் பயந்து கவலைப்பட்டான். அவனது முகம் அச்சத்தால் வெளிறியது.
௧௦ பிறகு அரசனின் தாய் விருந்து நடைபெற்ற அந்த இடத்திற்கு வந்தாள். அவள் அரசன் மற்றும் அவனது அதிகாரிகளின் குரல்களைக் கேட்டபின்: “ஓ அரசரே நீர் என்றென்றும் வாழ்க. நீர் பயப்பட வேண்டாம். உனது முகம் பயத்தால் வெளிறவேண்டாம்.
௧௧ உனது இராஜ்யத்தில் ஒருவன் இருக்கிறான். அவனிடம் பரிசுத்தமான தேவர்களின் ஆவி உள்ளது. உன் தந்தையின் நாட்களில் அவனால் பல இரகசியங்களைச் சொல்லமுடிந்தது. அவன் தன்னைச் சுறுசுறுப்பும் ஞானமும் உள்ளவனாகக் காட்டினான். அவன் இவ்விஷயங்களில் தேவர்களைப் போன்றிருந்தான். உன் தந்தையான நேபுகாத்நேச்சார் அந்த மனிதனை ஞானிகளுக்கெல்லாம் பொறுப்பதிகாரியாக வைத்திருந்தார். அவன் ஜோசியர்களையும், கல்தேயர்களையும் ஆண்டான்.
௧௨ நான் சொல்லிக்கொண்டிருக்கிற அவனுடைய பெயர் தானியேல். அரசர் அவனுக்கு பெல்தெஷாத்சார் என்று பெயரிட்டார். பெல்தெஷாத்சார் மிக சுறுசுறுப்புடையவன். அவனுக்குப் பல செய்திகள் தெரியும். அவனால் கனவின் பலன்களும், இரகசியங்களின் விளக்கமும், கடினமான விஷயங்களுக்குத் தீர்வுகளும் தெரியும். தானியேலைக் கூப்பிடு, அவனால் சுவர் மேல் எழுதியுள்ளவற்றுக்கு விளக்கம் சொல்லமுடியும்” என்றாள்.
௧௩ எனவே அவர்கள் தானியேலை அரசனிடம் அழைத்துவந்தனர். அரசன் தானியேலிடம் உனது பெயர் தானியேல்தானா? யூதாவிலிருந்து என் தந்தையால் சிறை பிடிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டவர்களில் நீ ஒருவனா?
௧௪ தேவர்களின் ஆவி உன்னிடம் இருப்பதாக நான் அறிந்தேன். அதோடு நீ இரகசியங்களைப் புரிந்துகொள்ளக் கூடியவன், வெளிச்சமும், புத்தியும், ஞானமும் கொண்டவன் என்றும் உன்னைப் பற்றி நான் கேள்விப்பட்டேன்.
௧௫ ஞானிகளும், சோதிடர்களும் என்னிடம் அழைத்துவரப்பட்டு சுவரில் எழுதப்பட்டவற்றை வாசிக்கச் சொன்னேன். இந்த எழுத்துக்களின் பொருள் என்னவென்று அம்மனிதர்கள் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவர்களால் சுவரில் எழுதப்பட்டுள்ளவற்றுக்கான விளக்கத்தை எனக்குச் சொல்ல முடியவில்லை.
௧௬ ஒவ்வொரு பொருளின் அர்த்தத்தையும் உன்னால் விளக்க முடியும் என்றும் மிகச் கடினமான பிரச்சனைகளுக்கும் உன்னால் பதில் சொல்ல முடியும் என்றும் நான் உன்னைப்பற்றிக் கேள்விப்பட்டேன். உன்னால் இச்சுவரில் எழுதப்பட்டுள்ளவற்றை வாசித்து அதன் பொருளை எனக்கு விளக்க முடியுமானால் நான் உனக்கு இரத்தாம்பர ஆடையைக் கொடுப்பேன். நான் உனது கழுத்தில் பொன் மாலையை அணிவிப்பேன். பிறகு நீ இந்த இராஜ்யத்தின் மூன்றாவது உயர் ஆளுநராக ஆகலாம் என்றான்.
௧௭ தானியேல் அரசனிடம், “பெல்ஷாத்சார் அரசரே, உமது அன்பளிப்புகளை நீர் உம்மிடமே வைத்துக்கொள்ளும். அல்லது நீர் உமது பரிசுகளைவேறு யாருக்காவது கொடும். ஆனால் நான் உமக்காகச் சுவரில் எழுதப்பட்டுள்ளவற்றை வாசிப்பேன். நான் அதன் பொருள் என்னவென்றும் உமக்கு விளக்குவேன்.
௧௮ “அரசே, உன்னதமான தேவன், உமது தந்தையான நேபுகாத்நேச்சாரை சிறப்பும், வல்லமையும் கொண்ட அரசராக ஆக்கினார். தேவன் அவரை மிக முக்கியமானவராக ஆக்கினார்.
௧௯ பல நாடுகளில் உள்ள ஜனங்களும், பலமொழி பேசும் ஜனங்களும் நேபுகாத்நேச்சாருக்கு அஞ்சினார்கள். ஏனென்றால் உன்னதமான தேவன் அவரை மிக முக்கியமான அரசராக்கினார். நேபுகாத்நேச்சார் ஒருவன் மரிக்கவேண்டும் என்று விரும்பினால் உடனே அவனைக் கொன்றுவிடுவார். அவர் ஒருவன் வாழவேண்டும் என்று விரும்பினால், அவனை வாழவிடுவார். அவர் ஜனங்களை முக்கியப்படுத்த வேண்டும் என்று விரும்பினால் அவர்களை முக்கியப்படுத்துவார். அவர் ஜனங்களை முக்கியமற்றவர்களாக்க வேண்டும் என்று விரும்பினால் அவர்களை முக்கியமற்றவர்களாக்குவார்.
௨௦ “ஆனால் நேபுகாத்நேச்சார் அகந்தையும் கடின மனமும் கொண்டவரானர். எனவே, அவரது வல்லமை அவரிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. அவரது இராஜ சிங்காசனம் பறிக்கப்பட்டது. அவருடைய மகிமை அகற்றப்பட்டது.
௨௧ பிறகு நேபுகாத்நேச்சார் ஜனங்களைவிட்டு வெளியேறும்படி வற்புறுத்தப்பட்டார். அவருடைய மனது மிருகத்தின் மனது போலாயிற்று. அவர் காட்டுக் கழுதைகளோடு வாழ்ந்து பசுவைப்போன்று புல்லைத் தின்றார். அவர் பனியில் நனைந்தார். அவர் தனது பாடத்தைக் கற்றுக் கொள்ளும்வரை இவை நிகழ்ந்தன. பின்னர் அவர் உன்னதமான தேவன் மனிதர்களின் இராஜ்யங்களை ஆளுகிறார். அதோடு உன்னதமான தேவன் தான் விரும்புகிற எவரையும் இராஜ்யத்தை ஆளவைப்பார் என்பதைக் கற்றுக்கொண்டார்.
௨௨ “ஆனால் பெல்ஷாத்சாரே, உமக்கு ஏற்கனவே இவை தெரியும். நீர் நேபுகாத்நேச்சாரின் மகன். ஆனாலும் நீர் உம்மை இன்னும் பணிவுள்ளவராக்கிக்கொள்ளவில்லை.
௨௩ இல்லை, நீர் பணிவுள்ளவராகவில்லை. அதற்குப் பதிலாக பரலோகத்தின் கர்த்தருக்கு எதிராகத் திரும்பினீர். கர்த்தருடைய ஆலயத்திலுள்ள கிண்ணங்களைக் குடிப்பதற்குக் கொண்டுவரும்படிக் கட்டளையிட்டீர். நீரும், உமது அரசு அதிகாரிகளும், உமது மனைவியரும், அடிமைப்பெண்களும், அக்கிண்ணங்களில் திராட்சைரசத்தைக் குடித்தீர்கள். நீர் பொன்னாலும், வெள்ளியாலும், வெண்கலத்தாலும், இரும்பாலும், மரத்தாலும், கல்லாலும் ஆன தெய்வங்களைப் போற்றினீர். அவை உண்மையில் தெய்வங்கள் அல்ல. அவற்றால் பார்க்கவோ, கேட்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது. ஆனால் உமது வாழ்க்கை மீதும், உமது செயல்கள் மீதும் அதிகாரம் படைத்த தேவனை நீர் மகிமைப்படுத்தவில்லை.
௨௪ அதனால், தேவன் சுவர்மேல் எழுதுகிற கையை அனுப்பினார்.
௨௫ சுவரில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் இவைதான்:
மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின்.
௨௬ “இதுதான் அவ்வார்த்தைகளின் பொருள்:
“மெனே:
உன் ஆளுகை முடியும் நாட்களைத் தேவன் எண்ணி வைத்திருக்கிறார்.
௨௭ தெக்கேல்:
நீ தராசிலே நிறுக்கப்பட்டுக் குறைவாய் காணப்பட்டாய்.
௨௮ உப்பார்சின்:
உன் ஆளுகை உன்னிடமிருந்து எடுக்கப்பட்டு,
அது மேதியருக்கும் பெர்சியருக்கும் பங்கிட்டுக் கொடுக்கப்படும்” என்றான்.
௨௯ பின்னர் பெல்ஷாத்சார் தானியேலுக்கு இரத்தாம்பரத்தை அணிவித்து, அவனது கழுத்தில் பொன் மாலையைப் போட்டான். அவன் இராஜ்யத்தின் மூன்றாம் ஆளுநராக உயர்த்தப்பட்டான்.
௩௦ அதே இரவில் பாபிலோனின் அரசனான பெல்ஷாத்சார் கொல்லப்பட்டான்.
௩௧ தரியு என்னும் மேதியன் புதிய அரசனானான். தரியு 62 வயதுடையவனாக இருந்தான்.