௨௭
ஜனங்களுக்கான கல் நினைவுச் சின்னங்கள்
௧ மோசேயும் இஸ்ரவேலின் மூப்பர்களும்
(தலைவர்கள்) இஸ்ரவேல் ஜனங்களுடன் பேசினார்கள். மோசே, “இன்று நான் கொடுக்கிற அனைத்து கட்டளைகளுக்கும் கீழ்ப்படியுங்கள்.
௨ உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காக கொடுத்திருக்கிற நாட்டிற்குள் போகும்படி நீங்கள் விரைவில் யோர்தான் ஆற்றைக் கடப்பீர்கள். அந்த நாளில் நீங்கள் பெரிய கற்களை நாட்டவேண்டும். அக்கற்களைச் சாந்து பூசி மூடி
௩ பிறகு அக்கற்களின் மேல் இந்த கட்டளைகளையும், போதனைகளையும் எழுத வேண்டும். நீங்கள் யோர்தான் ஆற்றைக் கடந்தவுடன் இதனைச் செய்யவேண்டும். பிறகு நீங்கள் அந்த நாட்டிற்குள் போகலாம். அதை உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகக் கொடுத்திருக்கிறார். அந்நாடு பல நன்மைகளால் நிறைந்தது. உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் இந்த நாட்டை உங்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்தார்.
௪ “யோர்தான் ஆற்றைக் கடந்து நீங்கள் போனதும், நான் இன்று கட்டளையிடுகின்றவற்றை நீங்கள் செய்யவேண்டும். அக்கற்களை நீங்கள் ஏபால் மலையின் மேல் நாட்ட வேண்டும். நீங்கள் இக்கற்களைச் சாந்து பூசி மூடவேண்டும்.
௫ அதோடு சில கற்களைப் பயன்படுத்தி, உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்ட வேண்டும். கற்களை வெட்டுவதற்கு இரும்புக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம்.
௬ உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலிபீடம் கட்டும்போது செதுக்கின கற்களைப் பயன்படுத்த வேண்டாம். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு இப்பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகன பலிகளைச் செலுத்துங்கள்.
௭ நீங்கள் சமாதான பலிகளையும் அங்கே செலுத்தி அதனை உண்ணவேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அவற்றைச் சேர்ந்து உண்டு உங்களுக்குள் மகிழுங்கள்.
௮ நீங்கள் நாட்டிய கற்களில் இந்தப் போதனைகளையெல்லாம் தெளிவாக எழுதவேண்டும். அதனால் அவற்றை வாசிக்க சுலபமாக இருக்கும்” என்றான்.
சட்டத்தின் சாபங்களை ஜனங்கள் ஒப்புக்கொள்கிறார்கள்
௯ மோசேயும், ஆசாரியர்களும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரிடமும் பேசினார்கள். மோசே, “அமைதியாக இருந்து கவனியுங்கள். இன்று உங்கள் தேவனாகிய கர்த்தருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்.
௧௦ எனவே நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் சொன்னபடியே எல்லாவற்றையும் செய்ய வேண்டும். நீங்கள் அவரது கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் கீழ்ப்படிய வேண்டும். இன்று அவற்றை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்றான்.
௧௧ அதே நாளில் மோசே ஜனங்களிடம் இதையும் சொன்னான்,
௧௨ “யோர்தான் ஆற்றை நீங்கள் கடந்து போனபிறகு, ஜனங்களுக்குரிய ஆசீர்வாதங்களை வாசிக்க சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் ஆகியோரின் கோத்திரங்கள் கெரிசீம் மலையின் மீது நிற்பார்கள்.
௧௩ ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி ஆகியோரின் கோத்திரங்கள் ஏபால் மலைமீது நின்று சாபத்தை வாசிப்பார்கள்.
௧௪ “லேவியர் உரத்தக் குரலில்:
௧௫ “ ‘பொய்த் தெய்வங்களைச் செய்து இரகசியமான இடத்தில் அதனை ஒளித்து வைப்பவன் சபிக்கப்பட்டவன். அந்த பொய்த் தெய்வங்கள் எல்லாம் சித்திரவேலைக்காரர்களால் மரத்தாலும் கல்லாலும் அல்லது உலோகத்தாலும் செய்யப்பட்ட சிலைகள். கர்த்தர் அவற்றை வெறுக்கின்றார்!’ என்று அவர்கள் சொல்லும்போது,
“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.
௧௬ “லேவியர்கள், ‘தன் தகப்பனுக்கும் தாய்க்கும் மரியாதை செய்யாமலிருக்கிறவன் சபிக்கப்பட்டவன்’ என்று சொல்லும்போது,
“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று பதில் சொல்லவேண்டும்.
௧௭ “லேவியர், ‘தனது அயலானின் எல்லைக் கல்லை மாற்றிப் போடுகிறவன் சபிக்கப்பட்டவன்’ என்று சொல்லும்போது,
“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று பதில் சொல்லவேண்டும்.
௧௮ “லேவியர், ‘குருடனை வழிதப்பச் செய்பவன் சபிக்கப்பட்டவன்!’ என்று சொல்லும்போது,
“பிறகு எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்லவேண்டும்.
௧௯ “லேவியர், ‘அயல் நாட்டவர், அநாதைகள், விதவைகளின் நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்பட்டவன்!’ என்று சொல்லும்போது,
“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.
௨௦ “லேவியர், ‘தனது மாற்றாந்தாயோடு பாலின உறவு வைத்துக்கொள்பவன் சபிக்கப்பட்டவன். ஏனென்றால், அவன் தன் தந்தைக்கு அவமானத்தைக் கொண்டு வருகிறான்!’ என்று சொல்லும்போது,
“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.
௨௧ “லேவியர், ‘யாதொரு மிருகத்தோடும் புணர்ச்சி செய்கிறவன் சபிக்கப்பட்டவன்!’ என்று சொல்லும்போது,
“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.
௨௨ “லேவியர், ‘தன் சகோதரியோடும், சகோதரி உறவுள்ளவர்களோடும் பாலின உறவு கொள்பவன் சபிக்கப்பட்டவன்!’ என்று சொல்லும்போது,
“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.
௨௩ “லேவியர், ‘தன் மாமியாரோடு பாலின உறவு கொள்பவன் சபிக்கப்பட்டவன்!’ என்று சொல்லும்போது,
“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.
௨௪ “லேவியர், ‘மற்றொருவனைக் கொல்லுகிறவன், பிடிபடாமல் இருந்தால் கூட, சபிக்கப்பட்டவனாக இருப்பான்’ என்று சொல்லும்போது,
“ஜனங்கள் எல்லோரும் ‘ஆமென்’ என்று சொல்லவேண்டும்.
௨௫ “லேவியர், ‘ஒரு அப்பாவியைக் கொன்று அவனது பொருட்களை அபகரிப்பவன் சபிக்கப்பட்டவன்.’ என்று சொல்லும்போது,
“ஜனங்கள் எல்லோரும் ‘ஆமென்’ என்று பதில் சொல்லவேண்டும்.
௨௬ “லேவியர், ‘இந்த சட்டத்தின் வார்த்தைகளையெல்லாம் ஆதரிக்காமலும் அதற்குக் கீழ்ப்படியும்படி அதற்கு ஒப்புக்கொள்ளாமலும் இருப்பவன் சபிக்கப்பட்டவன்’ என்று சொல்லும்போது,
“ஜனங்கள் எல்லோரும் ‘ஆமென்’ என்று சொல்லவேண்டும்.