௩௧
அசீரியா கேதுரு மரத்தைப் போன்றது
௧ சிறைபிடிக்கப்பட்ட பதினொன்றாவது ஆண்டின் மூன்றாவது மாதத்து (ஜூன்) முதல் நாளில் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்:
௨ “மனுபுத்திரனே, எகிப்திய அரசனான பார்வோனிடமும் அவனது ஜனங்களிடமும் இவற்றைக் கூறு:
“ ‘உனது மகத்துவத்தில்,
உன்னுடன் யாரை நான் ஒப்பிட முடியும்?
௩ அசீரியா, அழகான கிளைகளுடன், காட்டு நிழலோடு உயரமாக உள்ள லீபனோனின் கேதுரு மரம்.
அதன் உச்சி மேகங்களுக்கிடையில் உள்ளது!
௪ தண்ணீர் மரத்தை வளரச் செய்கிறது.
ஆழமான நதி மரத்தை உயரமாக்கியது.
நதிகள் நடப்பட்ட மரத்தை சுற்றி ஓடுகின்றன.
ஒரு மரத்திலிருந்து மற்ற மரங்களுக்கு சிறு ஓடைகள் மட்டுமே பாய்கின்றன.
௫ எனவே காட்டிலுள்ள மற்ற மரங்களைவிட அம்மரம் உயரமாக இருக்கின்றது.
இதில் பல கிளைகள் வளர்ந்துள்ளன.
அங்கே தண்ணீர் மிகுதியாக உள்ளது.
எனவே கிளைகள் பரந்து வளர்ந்துள்ளன.
௬ அம்மரத்தின் கிளைகளில் வானத்துப் பறவைகள்
எல்லாம் தம் கூடுகளைக் கட்டிக்கொண்டன.
காட்டிலுள்ள விலங்குகள் எல்லாம் அம்மரத்துக்
கிளைகளின் அடியிலேயே குட்டிபோட்டன.
அம்மரத்தின் அடியிலேயே
எல்லா பெருநாடுகளும் வாழ்ந்தன.
௭ அந்த மரம் அழகாக இருந்தது.
அது பெரிதாக இருந்தது,
அதற்கு அவ்வளவு பெரிய கிளைகள் இருந்தன.
அதன் வேர்களுக்கு மிகுதியான நீர் இருந்தது!
௮ தேவனுடைய தோட்டத்தில் உள்ள கேதுரு மரங்கள் கூட
இம்மரத்தைப்போன்று இவ்வளவு பெரிதாக இல்லை.
தேவதாரு மரங்களுக்கு இவ்வளவு கிளைகள் இல்லை.
அர்மோன் மரங்களுக்கு அதைப்போன்று கிளைகள் இல்லை.
இந்த மரத்தைப்போன்று தேவனுடைய தோட்டத்தில் உள்ள
எந்த மரமும் அழகானதாக இல்லை.
௯ நான் இதற்குப் பல கிளைகளைக் கொடுத்தேன்,
அதனை அழகுடையதாக ஆக்கினேன்.
தேவன் தோட்டமான ஏதேனிலுள்ள
அனைத்து மரங்களும் பொறாமைப்பட்டன!’ ”
௧௦ எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: “இம்மரம் உயரமாக வளர்ந்திருக்கிறது. இது தனது உச்சியை மேகங்களிடையே வைத்தது. இம்மரத்திற்குத் தான் வளர்ந்திருந்ததால் பெருமை இருந்தது!
௧௧ எனவே ஒரு பலம் வாய்ந்த அரசன் அந்த மரத்தைக் கைப்பற்றும்படிச் செய்தேன். அந்த அரசன் மரம் செய்த தீமைகளுக்காக அதனைத் தண்டித்தான். நான் அந்த மரத்தை என் தோட்டத்தில் இருந்து வெளியேற்றினேன்.
௧௨ உலகிலேயே மிகக் கொடூரமான ஜனங்கள் அதனை வெட்டிப்போட்டார்கள். அந்த மரக்கிளைகள் மலைகளின் மீதும் பள்ளத்தாக்குகளின் மீதும் விழுந்தன. அதன் முறிந்த கிளைகள் ஆறுகளால் பல இடங்களுக்கும் இழுத்துச் செல்லப்பட்டன. இனி மேல் மரத்தின் கீழே நிழல் இருக்காது. எனவே எல்லா ஜனங்களும் வெளியேறினர்.
௧௩ இப்பொழுது விழுந்த மரத்தில் பறவைகள் வாழ்கின்றன. காட்டு மிருகங்கள் விழுந்த கிளைகளின் மேல் நடக்கின்றன.
௧௪ “இப்பொழுது, தண்ணீர்க் கரையிலுள்ள எந்த மரமும் பெருமை கொள்ளமுடியாது. அவை மேகங்களைத் தொட முயற்சி செய்வதில்லை. தண்ணீரைக் குடித்துப் பலம் கொண்ட எந்த மரமும் தான் உயரமாக இருப்பதைப் பற்றி பெருமை கொள்வதில்லை. ஏனென்றால், அனைத்தும் மரிக்க ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளன. அவை எல்லாம் உலகத்திற்குக் கீழே சீயோல் என்னும் மரண இடத்திற்குப் போகும். அவை மரித்து ஆழமான குழிகளுக்குள் போன மற்ற ஜனங்களோடு போய் சேரும்.”
௧௫ எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “அந்த மரம் சீயோலுக்குள் இறங்கும் நாளிலே எல்லோரையும் அதற்காகத் துக்கப்படும்படிச் செய்தேன். லீபனோன் அதற்காகத் துக்கப்பட்டது. வயல்வெளியிலுள்ள எல்லா மரங்களும் அதன் வீழ்ச்சியைக் கேட்டு துக்கமும் அதிர்ச்சியும் அடைந்தன. ஆழ்கடல் தன் தண்ணீர் ஓட்டத்தையும் அதன் ஆறுகளையும் நிறுத்தியது.
௧௬ நான் அந்த மரத்தை விழச் செய்தேன். நாடுகள் அது விழும் சத்தத்தைக் கேட்டு பயத்தால் நடுங்கின. நான் அந்த மரத்தை மரண இடத்திற்குப் போகும்படிச் செய்தேன். அது ஏற்கனவே மரித்தவர்கள் சென்ற ஆழமான இடத்திற்குப் போனது. கடந்த காலத்தில், ஏதேனில் உள்ள அனைத்து மரங்களும் லீபனோனின் சிறந்த மேன்மையான மரங்களும் அந்த தண்ணீரைக் குடித்தன. அம்மரங்கள் கீழ் உலகத்தில் ஆறுதல் அடைந்தன.
௧௭ ஆம், அம்மரங்கள் கூட, பெரிய மரத்தோடு மரண இடத்திற்குச் சென்றன. போரில் கொல்லப்பட்டவர்களோடு அவை சேர்ந்தன. அந்தப் பெரிய மரம் மற்ற மரங்களைப் பலமடையச் செய்தது. அம்மரங்கள் அப்பெரிய மரத்தின் நிழலில் நாடுகளுக்கிடையில் வாழ்ந்தன.
௧௮ “எனவே எகிப்தே, ஏதேனில் உள்ள பெரிய வல்லமையுள்ள மரங்களில் எதனோடு உன்னை ஒப்பிடவேண்டும்? ஏதேனின் மரங்களோடு நீயும் பூமியின் தாழ்விடங்களில் மரிக்கப்படுவாய்! அந்த அந்நிய மனிதர்களோடும் போரில் மரித்தவர்களோடும் மரணத்தின் இடத்தில் நீ படுத்திருப்பாய்.
“ஆம் அது பார்வோனுக்கும் அவனது அனைத்து ஜனங்களுக்கும் ஏற்படும்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.