௧௩
௧ பிறகு கர்த்தர் மோசேயிடம்,
௨ “இஸ்ரவேலில் ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் முதல் ஆண் குழந்தை ஒவ்வொன்றும் எனக்குரியதாகும். முதலில் பிறந்த ஒவ்வொரு ஆண் குழந்தையும், முத லில் பிறந்த ஒவ்வொரு விலங்கும் எனக்குரியதாகும்” என்றார்.
௩ அப்போது மோசே ஜனங்களிடம், “இந்த நாளை நினைவுகூருங்கள். நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். ஆனால் இந்த நாளில் கர்த்தர் அவரது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி உங்களை விடுதலை செய்தார். நீங்கள் புளிப்புள்ள ரொட்டியை உண்ணக்கூடாது.
௪ ஆபீப் மாதத்தின் இந்த நாளில் நீங்கள் எகிப்தை விட்டுச் செல்கிறீர்கள்.
௫ கர்த்தர் உங்கள் முற்பிதாக்களுக்கு ஒரு விசேஷமான வாக்குறுதியை அளித்தார். கானானியர், ஏத்தியர், எமோரியர், ஏவியர், எபூசியர் ஜனங்களின் நாட்டை உங்களுக்குக் கொடுப்பதாகக் கர்த்தர் வாக்களித்தார். நல்ல பொருட்களால் நிரப்பப்பட்ட நாட்டிற்குக் கர்த்தர் உங்களை வழிநடத்திய பிறகும் நீங்கள் இந்த நாளை நினைவுகூர வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் முதல் மாதத்தின் இந்த நாளை வழிபாட்டிற்குரிய விசேஷ தினமாகக் கொள்ள வேண்டும்.
௬ “புளிப்பு இல்லாத ரொட்டியையே ஏழு நாட்களுக்கு நீங்கள் உண்ண வேண்டும். ஏழாவது நாளில் ஒரு பெரிய விருந்து கர்த்தரை மகிமைப்படுத்துவதற்காக நடைபெறும்.
௭ எனவே ஏழு நாட்கள் புளிப்புள்ள ரொட்டியை நீங்கள் உண்ணவே கூடாது. உங்கள் தேசத்தில் எப்பக்கத்திலும் புளிப்புள்ள ரொட்டி இருக்கவே கூடாது.
௮ இந்த நாளில் உங்கள் பிள்ளைகளுக்கு, ‘கர்த்தர் நம்மை எகிப்திலிருந்து வழிநடத்தியதால் இந்த விருந்து நடைப்பெறுகிறது’ என்று சொல்ல வேண்டும்.
௯ “உங்கள் கண்களின் முன்னால் இது அடையாளமாக இருக்கும். இந்த பண்டிகை நாள் கர்த்தரின் போதனைகளை நினைவுபடுத்தவும், உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவர கர்த்தர் தமது பெரும் வல்லமையைப் பயன்படுத்தினார் என்பதை நினைவுபடுத்தவும் இது உதவும்.
௧௦ எனவே ஒவ்வொரு ஆண்டும் அதன் காலத்தில் இந்த விடுமுறை நாளை நினைவு கூருங்கள்.
௧௧ “உங்களுக்குக் கொடுப்பதாகக் கர்த்தர் வாக்களித்த தேசத்திற்கு அவர் உங்களை வழிநடத்துவார். கானானிய ஜனங்கள் இப்போது அங்கு வாழ்கிறார்கள். இத்தேசத்தை உங்களுக்குக் கொடுப்பதாக தேவன் உங்கள் முற்பிதாக்களுக்கு வாக்களித்தார்.” தேவன் இந்நாட்டை உங்களுக்குக் கொடுத்தபிறகு,
௧௨ நீங்கள் உங்கள் முதல் மகனை அவருக்குக் கொடுக்க வேண்டும் என்பதை நினைவு கூருங்கள். முதலில் பிறந்த எந்த ஆண் மிருகத்தையும் கர்த்தருக்குக் கொடுக்க வேண்டும்.
௧௩ முதலில் பிறந்த ஒவ்வொரு ஆண் கழுதையையும் கர்த்தரிடமிருந்து திரும்பப்பெற்று, அதற்குப் பதிலாக ஒரு ஆட்டுக்குட்டியைக் கொடுக்கவேண்டும். கர்த்தரிடமிருந்து கழுதையை வாங்க உங்களுக்கு விருப்பமில்லையென்றால், அதனைக் கொன்றுவிடுங்கள். அது ஒரு பலியாகும். நீங்கள் அதன் கழுத்தை முறிக்க வேண்டும். முதலில் பிறக்கும் ஒவ்வொரு ஆண் குழந்தையையும் கர்த்தரிடமிருந்து திரும்பப் பெற வேண்டும்.
௧௪ “வருங்காலத்தில் நீங்கள் இதைச் செய்வதன் காரணத்தை அறியும்படி உங்கள் பிள்ளைகள், ‘இதன் பொருள் என்ன?’ என்று கேட்பார்கள். நீங்கள் அவர்களிடம்: ‘கர்த்தர் தமது மகா வல்லமையைப் பயன்படுத்தி நம்மை எகிப்திலிருந்து மீட்டார். நாம் அந் நாட்டில் அடிமைகளாக இருந்தோம். ஆனால் கர்த்தர் நம்மை இங்கு வழிநடத்தினார்.
௧௫ எகிப்தில், பார்வோன் பிடிவாதமாக இருந்தான். நாம் புறப்படுவதற்கு அவன் அனுமதி கொடுக்வில்லை. எனவே கர்த்தர் அந்நாட்டின் முதலாவதாகப் பிறந்த எல்லா உயிரினங்களையும் கொன்றார். (கர்த்தர் முதலில் பிறந்த மகன்களையும், முதலில் பிறந்த மிருகங்களையும் கொன்றார்.) எனவே நான் முதலில் பிறந்த ஆண் மிருகத்தைக் கர்த்தருக்குக் கொடுக்கிறேன், எல்லா முதலில் பிறந்த ஆண் பிள்ளைகளையும் கர்த்தரிடமிருந்து திரும்பப் பெறுகிறேன்!’ என்று நீங்கள் பதில் கூறுவீர்கள்.
௧௬ இது உங்கள் கையில் கட்டப்பட்ட ஒரு குறியீடு போலவும், உங்கள் கண்களுக்கு நடுவில் தொங்கும் ஒரு அடையாளமாகவும் காணப்படும். கர்த்தர் தமது அளவில்லா வல்லமையினால் நம்மை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தார் என்பதை நீங்கள் நினைவுகூர இது உதவும்” என்றான்.
எகிப்திலிருந்து வெளியேறும் பயணம்
௧௭ பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியேற்றினான். பெலிஸ்தரின் நாட்டின் வழியாக ஜனங்கள் பயணம் செய்வதைக் கர்த்தர் அனுமதிக்கவில்லை. கடலின் ஓரமாக உள்ள அந்த சாலை குறுக்கு சாலையாக இருந்தது. ஆனால் கர்த்தர், “அவ்வழியே ஜனங்கள் பயணத்தை மேற் கொண்டால் அவர்கள் போரிட வேண்டியிருக்கும். அதனால் தங்கள் எண்ணத்தை மாற்றி, எகிப்திற்குத் திரும்பிப் போகக்கூடும்” என்றார்.
௧௮ ஆகவே கர்த்தர் அவர்களை வேறு வழியாக நடத்திச் சென்றார். செங்கடல் அருகே பாலைவனத்தின் நடுவே அவர்களை வழிநடத்தினார். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தைவிட்டுப் புறப்பட்டபோது சண்டைக்கு ஆயத்தமான ஆடைகளை அணிந்திருந்தனர்.
யோசேப்பு தாயகத்திற்குத் திரும்புதல்
௧௯ யோசேப்பின் எலும்புகளை மோசே தன்னோடு எடுத்துச் சென்றான். (யோசேப்பு மரிக்கும் முன்னர் இஸ்ரவேலின் ஜனங்களிடம் இதைச் செய்ய வேண்டுமென வாக்குறுதி பெற்றிருந்தான். யோசேப்பு, “தேவன் உங்களை மீட்கும்போது, எனது எலும்புகளை எகிப்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல வேண்டுமென்பதை நினைவில் வையுங்கள்” என்று கூறியிருந்தான்.)
கர்த்தர் தமது ஜனங்களை வழிநடத்துகிறார்
௨௦ இஸ்ரவேல் ஜனங்கள் சுக்கோத்தை விட்டு நீங்கி ஏத்தாமில் தங்கினார்கள். ஏத்தாம் பாலைவனத்தினருகே இருந்தது.
௨௧ கர்த்தர் பாதை காட்டினார். பகலில், கர்த்தர் ஜனங்களை வழிநடத்த உயரமான ஒரு மேகத்தையும், இரவு வேளையில் வழிநடத்த உயரமான ஒரு நெருப்புதூணையும் பயன்படுத்தினார். அவர்கள் இரவிலும் பயணம் செய்வதற்கேதுவாக இந்த நெருப்பு வெளிச்சம் தந்தது.
௨௨ உயர்ந்த மேகம் பகல் முழுவதும், உயர்ந்த நெருப்பு தூண் இரவு முழுவதும் அவர்களோடிருந்தது.