௨௦
பத்துக் கட்டளைகள்
௧ பின்பு தேவன்,
௨ “நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். நீங்கள் அடிமைகளாயிருந்த எகிப்து தேசத்திலிருந்து நான் உங்களை வழிநடத்தி வந்தேன். எனவே, நீங்கள் இந்தக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.
௩ “என்னைத் தவிர வேறு தேவர்களை நீங்கள் தொழக்கூடாது.
௪ “நீங்கள் எந்த விக்கிரகங்களையோ, படங்களையோ, சிலைகளையோ செய்யக் கூடாது. வானிலும், பூமியிலும் தண்ணீரிலு முள்ள எந்தப் பொருளின் வடிவத்திலும் அவற்றைச் செய்யக் கூடாது.
௫ எந்த விதமான விக்கிரகத்தையும் தொழுகை செய்யவோ அதை சேவிக்கவோ கூடாது. ஏனெனில் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். எனது ஜனங்கள் பிற தேவர்களைத் தொழுவதை நான் வெறுக்கிறேன். எனக்கு எதிராகப் பாவம் செய்வோர் எனது பகைவர்களாவார்கள். நான் அவர்களைத் தண்டிப்பேன். அவர்களின் பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும் அப்பேரர்களின் குழந்தைகளையும் தண்டிப்பேன்.
௬ என்னிடம் அன்போடிருந்து எனது கட்டளைகளுக்கு கீழ்ப்படிகிறவர்களிடம் நான் இரக்கம் காட்டுவேன். ஆயிரம் தலைமுறை வரைக்கும் அவர்கள் குடும்பங்களிடம் கருணையோடு இருப்பேன்.
௭ “நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பெயரைத் தகாத வழியில் பயன்படுத்தக் கூடாது. ஒருவன் அவ்வாறு பயன்படுத்தினால், அவன் குற்றவாளியாவான். கர்த்தர் அவனது குற்றத்திற்காக அவனை தண்டிப்பார்.
௮ “ஓய்வுநாளை விசேஷ நாளாகக் கருதும்படி நீங்கள் நினைவுகூருங்கள்.
௯ உங்கள் வேலையை வாரத்தின் ஆறு நாட்களும் செய்யுங்கள்.
௧௦ ஆனால் ஏழாம் நாள் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்தும்படி ஓய்வெடுக்க வேண்டிய நாள். எனவே அந்நாளில் நீங்களும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் வேலைக்காரரும், வேலைக்காரிகளும் வேலை செய்யக்கூடாது. உங்கள் மிருகங்களையோ, உங்கள் நகரங்களில் வாழும் அந்நியர்களையோ வேலை வாங்கக்கூடாது.
௧௧ ஏனெனில் கர்த்தர் ஆறு நாட்கள் வேலை செய்து வானம், பூமி, கடல் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தார். ஏழாம் நாளில் கர்த்தர் ஓய்வெடுத்தார். இவ்வாறு கர்த்தர் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளை ஆசீர்வதித்தார். கர்த்தர் அதை ஒரு மிக விசேஷமான நாளாக்கினார்.
௧௨ “உங்கள் தந்தை, தாயாரை மதிக்க வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் தரும் நாட்டில் நீண்டஆயுள் வாய்ப்பதற்கு இதைச் செய்தல் வேண்டும்.
௧௩ “நீங்கள் யாரையும் கொல்லாதிருப்பீர்களாக.
௧௪ “நீங்கள் விபச்சாரம், செய்யாதிருப்பீர்களாக.
௧௫ “நீங்கள் எதையும் திருடாதிருப்பீர்களாக.
௧௬ “பிற ஜனங்களைக் குறித்துப் பொய் சாட்சி பேசவேண்டாம்.
௧௭ “அயலானின் வீட்டை இச்சிக்கக்கூடாது. அவனது மனைவியை விரும்பவேண்டாம். அவனது வேலைக்காரனையோ வேலைக்காரியையோ, ஆடு மாடுகளையோ, கழுதைகளையோ எடுக்க வேண்டாம். இன்னொருவ னுக்குச் சொந்தமான எந்தப் பொருளையும் வஞ்சித்து எடுத்துக்கொள்ளக்கூடாது!” என்றார்.
ஜனங்கள் தேவனுக்கு பயப்படுதல்
௧௮ இதுவரை, பள்ளத்தாக்கிலிருந்த ஜனங்கள் இடி முழக்கத்தைக் கேட்டார்கள், மலையின் மீது மின்னலைப் பார்த்தார்கள். மலையினின்று புகையெழும்பக் கண்டனர். ஜனங்கள் அச்சத்தால் நடுங்கினார்கள். மலையை விட்டு தூரத்தில் நின்று கவனித்தனர்.
௧௯ பின்பு ஜனங்கள் மோசேயிடம், “நீர் எங்களோடு பேசினால் நாங்கள் கேட்போம். ஆனால் தேவன் எங்களோடு நேரில் பேசவிடாதிரும். அவ்வாறு நடந்தால், நாங்கள் மரித்துப்போவோம்” என்றனர்.
௨௦ மோசே ஜனங்களிடம், “பயப்படாதீர்கள்! கர்த்தர் உங்களை நேசிக்கிறார் என்பதைக் காண்பிக்கும்படியாக வந்திருக்கிறார். நீங்கள் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதினிமித்தமாக நீங்கள் பாவம் செய்யாதிருப்பீர்கள்” என்றான்.
௨௧ தேவன் இருந்த கார்மேகத்திற்குள் மோசே போனபோது ஜனங்கள் மலையை விட்டு விலகி நின்றார்கள்.
௨௨ இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறுமாறு கர்த்தர் மோசேக்கு பின்வருமாறு கூறினார்: “பரலோகத்திலிருந்து உங்களோடு பேசினதை நீங்கள் கண்டீர்கள்.
௨௩ எனவே, பொன் அல்லது வெள்ளியால் எனக்கு இணையாக நீங்கள் விக்கிர கங்களை உண்டாக்க வேண்டாம். இந்த போலியான தெய்வங்களை நீங்கள் செய்யக்கூடாது.
௨௪ “எனக்கென்று விசேஷ பலிபீடம் செய்யுங்கள். அதைக் கட்டும்போது மண்ணைப் பயன்படுத்துங்கள். அதன்மேல், தகன பலிகளையும், சமாதான பலிகளையும் பலியாகச் செலுத்துங்கள். உங்கள் ஆடு மாடுகளை இதற்கென்று பயன்படுத்துங்கள். என்னை நினைவு கூரும்படியாக நான் சொல்கிற இடங்களிலெல்லாம் இதைச் செய்யுங்கள். அப்போது நான் வந்து உங்களை ஆசீர்வதிப்பேன்.
௨௫ பலிபீடத்தை அமைப்பதற்கு நீங்கள் கற்களைப் பயன்படுத்தினால், இரும்புக் கருவியால் பிளக்கப்பட்ட கற்களைப் பயன்படுத்தவேண்டாம். அப் பலிபீடம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
௨௬ பலிபீடத்திற்குப் படிகளைச் செய்யாதீர்கள். படிகள் இருந்தால் ஜனங்கள் பலிபீடத்தை ஏறிட்டு நோக்கும்போது உங்கள் நிர்வாணத்தை ஆடைகளின் கீழே அவர்கள் பார்க்கநேரிடும்” என்றார்.