௩௫
ஓய்வு நாளைப்பற்றிய விதிகள்
௧ மோசே இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரையும் ஒன்றாகக் கூட்டி அவர்களை நோக்கி, “நீங்கள் செய்ய வேண்டுமெனக் கர்த்தர் கட்டளையிட்ட காரியங்களை நான் உங்களுக்குக் கூறுவேன்:
௨ “ஆறு நாட்கள் நீங்கள் வேலை செய்யலாம். ஏழாவது நாள் நீங்கள் ஓய்வெடுப்பதற்குரிய மிக விசேஷ நாளாகும். அந்த நாளில் ஓய்வெடுப்பதன் மூலம் கர்த்தரை மகிமைப்படுத்துவீர்கள். ஏழாவது நாளில் வேலை செய்கிற எவனும் கொல்லப்பட வேண்டும்.
௩ ஓய்வு நாளில் நீங்கள் வாழுமிடங்களில் நெருப்பை மூட்டவும் கூடாது” என்றான்.
பரிசுத்தக் கூடாரத்திற்கான பொருட்கள்
௪ மோசே இஸ்ரவேலின் எல்லா ஜனங்களுக்கும் கூறியதாவது, “இதுவே கர்த்தர் கட்டளையிட்டவை:
௫ கர்த்தருக்காக விசேஷ காணிக்கைகளைச் சேர்த்து வையுங்கள். என்ன காணிக்கையைக் கொடுக்க வேண்டும் என்பதை மனதுக்குள்ளேயே ஒவ்வொருவரும் தீர்மானம் செய்துகொள்ளுங்கள். பின் அந்த காணிக்கையைக் கர்த்தருக்குக் கொண்டுவர வேண்டும். பொன், வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றைக் கொண்டு வாருங்கள்.
௬ இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு ஆகிய நூலையும், வெள்ளாட்டு மயிராலான கம்பள துணியையும்
௭ சிவப்புத் தோய்த்த கடாவின் தோலையும், மெல்லிய தோலையும், சீத்திம் மரத்தையும்,
௮ குத்து விளக்குகளுக்கு எண்ணெயையும், தூபம் காட்டுவதற்கு நறுமணப் பொருள்களையும் கொண்டு வாருங்கள்.
௯ மேலும் கோமேதகக் கல்லையும், ஏபோத்திலும் நியாயத்தீர்ப்பு மார்ப்பதகத்திலும் வைக்க வேண்டிய கற்களையும் கொண்டு வாருங்கள்.
௧௦ “கர்த்தர் கட்டளையிட்ட பொருள்களையெல்லாம் திறமை மிகுந்த கைவேலைக்காரர் அனைவரும் செய்ய வேண்டும்.
௧௧ பரிசுத்தக் கூடாரம், அதன் வெளிப்பிரகாரம், அதன் மேற் பரப்பு: கொக்கிகள், பலகைகள், தாழ்ப்பாள்கள், தூண்கள், அடித்தளங்கள்,
௧௨ பரிசுத்தப் பெட்டி, அதன் தண்டுகள், கிருபாசனம், பெட்டி இருக்குமிடத்தை மூடும் திரை,
௧௩ மேசையும் அதன் தண்டுகளும், மேசையின் மீதிருக்கும் பொருள்கள், மேசையின் மீது வைக்க வேண்டிய விசேஷ ரொட்டி,
௧௪ வெளிச்சத்திற்கான குத்து விளக்குத் தண்டு, அதனோடு பயன்படுத்தப்படும் பொருட்கள், விளக்குகள், விளக்குக்கு எண்ணெய்,
௧௫ நறுமணப் பொருள்களை எரிக்கும்பீடம், அதன் தண்டுகள், அபிஷேக எண்ணெய், நறுமணப் புகைப் பொருள், பரிசுத்தக் கூடாரத்தின் நுழைவாயிலை மூடும் திரை,
௧௬ தகன பலிபீடம், வெண்கலத் தளம், அதின் தண்டுகள், பலிபீடத்தில் பயன்படும் பொருட்கள், வெண்கலத் தொட்டிகள், அதன் பீடம்,
௧௭ பிரகாரத்தைச் சுற்றிலுமுள்ள திரைகள், அவற்றிற்கான தூண்களும், பீடங்களும், பிரகாரத்திற்கான நுழை வாயிலை மூடும் திரை,
௧௮ கூடாரத்தைத் தாங்கி நிற்க உதவும் வெண்கல முளைகள், திரைகளின் சுவர்கள், வெளிப்பிரகாரத்தின் முளைகள், முளைகளில் கட்டப்படும் கயிறுகள்,
௧௯ பரிசுத்த இடத்தில் ஆசாரியர் அணியும் பொருட்டு விசேஷமாக நெய்த ஆடைகள். இந்த விசேஷ ஆடைகள் ஆசாரியனான ஆரோனும் அவன் மகன்களும் அணிவதற்குரியவை. அவர்கள் ஆசாரியராகப் பணியாற்றும்போது இந்த விசேஷ ஆடைகளை அணிவார்கள்” என்றான்.
ஜனங்களின் சிறப்புக் காணிக்கை
௨௦ இஸ்ரவேல் ஜனங்கள் மோசேயிடமிருந்து புறப்பட்டு சென்றனர்.
௨௧ கர்த்தருக்கு காணிக்கைகளைக் கொடுக்க விரும்பியவர்கள் அனைவரும் கொண்டு வந்தனர். ஆசாரிப்புக் கூடாரம், அதிலுள்ள பொருட்கள், விசேஷ ஆடைகள் ஆகியவற்றைச் செய்வதற்கு இப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.
௨௨ பல வகை பொன் அணிகலன்களைக் கொடுக்க விரும்பிய தாராள மனமுள்ள ஆண்களும், பெண்களும் அவற்றைக் கொண்டு வந்தனர். அவர்கள் ஊசிகள், காதணிகள், மோதிரங்கள், மற்றும் பிற அணிகலன்களைக் கொண்டு வந்தார்கள். கர்த்தருக்காக தம் ஆபரணங்களை அவர்கள் கொடுத்தனர். இது கர்த்தருக்கு விசேஷ காணிக்கையாகும்.
௨௩ மெல்லிய துகில், மற்றும் இளநீல இரத்தாம்பர, சிவப்பு நூல் வைத்திருந்தவர்கள் அனைவரும் அவற்றைக் கர்த்தருக்காகக் கொண்டு வந்தார்கள். மேலும் ஆட்டுத் தோலோ, சிவப்புச் சாயமிட்ட செம்மறியாட்டுத் தோலோ அல்லது பதனிடப்பட்ட மெல்லிய தோலோ வைத்திருந்தவர்கள் அதைக் கர்த்தருக்காகக் கொண்டு வந்தனர்.
௨௪ வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றைக் கொடுக்க விரும்பியவர்கள், கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தனர். சீத்திம் மரத்தை வைத்திருந்தவர்கள் அதைக் கர்த்தருக்குக் கொண்டுவந்து கொடுத்தார்கள்.
௨௫ கலைத்திறன் வாய்ந்த ஒவ்வொரு பெண்ணும் மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நிற நூல்களையும் தயாரித்தனர்.
௨௬ திறமை மிகுந்தவர்களும், உதவிசெய்ய விரும்பிய எல்லா பெண்களும் வெள்ளாட்டு மயிரால் ஆடைகளைச் செய்தனர்.
௨௭ தலைவர்கள் கோமேதகக் கற்களையும் பிற விலையுயர்ந்த கற்களையும் கொண்டுவந்தனர். ஆசாரியரின் ஏபோத்திலும் நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்திலும் இவை வைக்கப்பட்டன.
௨௮ ஜனங்கள் தூபவர்க்க பொருட்களையும், ஒலிவ எண்ணெயையும் கொண்டு வந்தனர். நறுமணப் பொருள்களுக்கும், அபிஷேக எண்ணெய்க்கும், குத்துவிளக்கின் எண்ணெய்க்கும் இவை பயன்படுத்தப்பட்டன.
௨௯ உதவிசெய்ய விரும்பிய இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் கர்த்தருக்கு அன்பளிப்புகளைக் கொண்டு வந்தனர். இவ்வன்பளிப்புகளை அவர்கள் விரும்பிக் கொடுத்ததால் தாராளமாகக் கொடுத்தார்கள். கர்த்தர் மோசேக்கும், அவனது ஜனங்களுக்கும் செய்யுமாறு கட்டளையிட்ட எல்லாப் பொருட்களையும் செய்வதற்கு இப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டன.
பெசலெயேலும் அகோலியாபும்
௩௦ பின் மோசே இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி, “பாருங்கள், கர்த்தர் யூதாவின் கோத்திரத்தைச் சேர்ந்த ஊர் என்பவனின் குமாரனாகிய, ஊரியின் மகனான பெசலெயேலை தெரிந்தெடுத்துள்ளார்.
௩௧ தேவ ஆவியால் பெசலெயேலை நிரப்பியுள்ளார். பலவகை காரியங்களையும் செய்யவல்ல திறனையும், அறிவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார்.
௩௨ அவன் பொன், வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றால் பொருள்களைச் செய்து அவற்றை வடிவமைக்க வல்லவன்.
௩௩ கற்களைச் செதுக்கி அவற்றில் ஆபரணங்களைச் செய்யமுடியும். பெசலெயேலுக்கு மரவேலைகள் அனைத்தும் தெரியும்.
௩௪ பிறருக்குக் கற்பிக்கும்படியான விசேஷ திறமைகளைக் கர்த்தர் பெசலேயேலுக்கும், அகோலியாபிற்கும் (தாண் கோத்திரத்து அகிசமாகின் மகன்.) கொடுத்திருக்கிறார்.
௩௫ எல்லா வகை வேலைகளையும் செய்யும் ஆற்றலைக் கர்த்தர் இவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். தச்சு, உலோக வேலைகளையும் அவர்கள் செய்வார்கள். இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூலாலும், மெல்லிய துகிலாலும் ஆடைகளைச் சித்திர வேலைப்பாடுகளோடு நெய்வதில் வல்லவர்கள். கம்பளியும் அவர்களால் நெய்ய முடிந்தது.