தெசலோனிக்கேயருக்கு
எழுதிய இரண்டாம் கடிதம்
௧
௧ தெசலோனிக்கேயாவில் இருக்கும் சபைக்கு பவுல், சில்வான், தீமோத்தேயு ஆகியோர் எழுதிக்கொள்வது, பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளும் நீங்கள் இருக்கிறீர்கள்.
௨ உங்களுக்கு நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
௩ உங்களுக்காக எப்பொழுதும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். அதுவே செய்வதற்கு உரியது என்பதால் நாங்கள் அதனைச் செய்கின்றோம். உங்கள் விசுவாசம் மேலும் மேலும் வளருவதால் அப்படிச் செய்கிறோம். உங்களில் ஒருவருக்கொருவரிடம் உள்ள அன்பும் வளர்கின்றது.
௪ தேவனுடைய ஏனைய சபைகளில் உங்களைப்பற்றி நாங்கள் பெருமையாய்ப் பேசிக்கொள்கிறோம். விசுவாசத்திலும், பலத்திலும் நீங்கள் தொடர்ந்து இருப்பது குறித்து மற்ற சபைகளுக்கு நாங்கள் கூறுகிறோம். நீங்கள் பல உபத்திரவங்களையும். துன்பங்களையும் அடைந்தீர்கள். எனினும் தொடர்ந்து விசுவாசமும் பலமும் உடையவர்களாய் நீங்கள் இருக்கிறீர்கள்.
தேவனுடைய தீர்ப்பு
௫ தேவன் தன் தீர்ப்பில் சரியாக உள்ளார் என்பதற்கு அதுவே நிரூபணமாக இருக்கிறது. தேவன் தன் இராஜ்யத்துக்கு ஏற்றவர்களாக நீங்கள் இருக்கவேண்டும் என விரும்புகிறார். உங்கள் துன்பங்கள் கூட அந்த இராஜ்யத்துக்காகத்தான்.
௬ எது சரியானதோ அதையே தேவன் செய்வார். உங்களுக்கு யார் துன்பம் தருகிறார்களோ அவர்களுக்கு தேவன் துன்பம் தருவார்.
௭ துன்பப்படுகிற உங்களுக்கு தேவன் இளைப்பாறுதலைத் தருவார். எங்களுக்கும் சமாதானத்தைத் தருவார். கர்த்தராகிய இயேசுவின் வருகையின்போது தேவன் எங்களுக்கு இந்த உதவியைச் செய்வார். இயேசு பரலோகத்தில் இருந்து வல்லமை வாய்ந்த தம் தேவதூதர்களோடு வருவார்.
௮ பரலோகத்திலிருந்து அவர் வரும்போது, தேவனை அறியாதவர்களைத் தண்டிப்பதற்காக எரிகின்ற அக்கினியோடும் வருவார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்கள் எல்லாரையும் அவர் தண்டிப்பார்.
௯ என்றென்றும் நித்திய அழிவுகள் நேரும் வகையில் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் கர்த்தரோடு இருக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். அவருடைய பெரும் வல்லமையிடம் இருந்து அவர்கள் விலக்கி வைக்கப்படுவார்கள்.
௧௦ தம் பரிசுத்த மக்களோடு மகிமைப்படுத்தப்படவும், எல்லா விசுவாசிகளுக்கும் தம் மகிமையைப் புலப்படுத்தவும் கர்த்தராகிய இயேசு வரும் நாளில் இவை நிகழும். விசுவாசம் உள்ளவர்களெல்லாம் இயேசுவோடு சேர்ந்துகொண்டு மகிழ்ச்சி அடைவார்கள். அந்த விசுவாசிகளின் கூட்டத்தில் நீங்களும் இருப்பீர்கள். ஏனென்றால் நாங்கள் சொன்னவற்றை நீங்கள் விசுவாசித்தீர்கள்.
௧௧ அதற்காகத்தான் நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். உங்களை நல்வழியில் வாழச் செய்யுமாறு நாங்கள் தேவனை வேண்டுகிறோம். இதற்காகவே தேவனால் நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். நல்லதைச் செய்ய வேண்டும் என்னும் ஆவல் உங்களிடம் இருக்கிறது. உங்களது விசுவாசம் உங்களைப் பணியாற்ற வைக்கும். மேலும் மேலும் இத்தகைய செயலைச் செய்ய தேவன் உங்களுக்கு உதவுமாறு நாங்கள் அவரை வேண்டுகிறோம்.
௧௨ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் உங்களில் மகிமை அடையும் பொருட்டே இவை அனைத்திற்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். உங்களில் அவர் மகிமையடைவார். அவரில் நீங்கள் மகிமையடைவீர்கள். அம்மகிமை நம் தேவனும், கர்த்தருமான இயேசு கிறிஸ்துவின் கிருபையிலிருந்து வருகிறது.