௧௦
கிறிஸ்துவின் பலி நம்மை முழுமையாக்குகிறது
௧ நியாயப்பிரமாணமானது எதிர்காலத்தில் நேரிடும் நன்மைகளைப் பற்றிய முழுமையற்ற ஒரு சித்திரத்தையே கொடுக்கிறது. அது தெளிவற்றதாக உள்ளது. அது உண்மையான விஷயங்களின் முழுச் சித்திரம் அல்ல. அது மக்களிடம் ஒவ்வொரு ஆண்டும் ஒரே மாதிரியான பலிகளைக் கொடுக்குமாறு கூறுகிறது. தேவனை வழிபட வருகிறவர்களும் அவ்வாறே கொடுத்து வருகின்றனர். நியாயப்பிரமாணம் அவர்களை என்றும் முழுமையானவர்களாக ஆக்காது. ௨ சட்டம் மனிதர்களை பூரணப் படுத்துமானால், வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிற பலிகளும் நின்றிருக்கும். ஏனெனில் வழிபடுகிறவர்கள் ஏற்கெனவே பரிசுத்தப்படுத்தப்பட்டு அவர்கள் தம் பாவங்களுக்காகக் குற்ற உணர்ச்சி உடையவர்களாக இருக்கமாட்டார்கள். ௩ ஆனால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிற அப்பலிகள் அவர்களின் பாவங்களையே அவர்களுக்கு நினைவுறுத்துகின்றன. ௪ ஏனென்றால் வெள்ளாடு, கன்று குட்டி போன்றவற்றின் இரத்தம் நமது பாவங்களை விலக்காது.
௫ ஆகவே கிறிஸ்து இந்த உலகத்துக்கு வரும்போது, அவர்,
 
“நீர் காணிக்கைகளையும் பலிகளையும் விரும்புவதில்லை.
ஆனால் எனக்காக ஒரு சரீரத்தை ஆயத்தம் செய்தீர்.
௬ மிருகங்களைக் கொன்றும் எரித்தும் கொடுக்கப்படுகிற பலிகள் உம்மைச் சந்தோஷப்படுத்தாது.
பாவநிவாரண பலிகளும் உம்மைத் திருப்திப்படுத்தாது.
௭ பிறகு நான், ‘தேவனே! இதோ இருக்கிறேன்.
உம்முடைய விருப்பத்தை நிறைவேற்ற வந்திருக்கிறேன்.
நியாயப்பிரமாண புத்தகத்தில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது’ என்றேன்.” சங்கீதம் 40:6-8
 
௮ “நீர் பலிகளையும் காணிக்கைகளையும் விரும்புவதில்லை. மிருகங்களைக் கொன்றும் எரித்தும் கொடுக்கப்படுகிற பலிகளாலும் பாவநிவாரணபலிகளாலும் நீர் திருப்தியுறவில்லை” (இந்தப் பலிகள் எல்லாம் கட்டளையிடப்பட்டிருந்தாலும் கூட) என்று முதலில் அவர் சொன்னார். ௯ பிறகு கிறிஸ்து, “தேவனே! நான் இதோ இருக்கிறேன். உம்முடைய விருப்பப்படி செய்வதற்காக வந்திருக்கிறேன்” என்றார். ஆகவே தேவன் முதலாவதுள்ள பலி முறைகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து தன் புதிய வழிகளைத் தொடங்கிவிட்டார். ௧௦ இயேசு கிறிஸ்து தேவனுடைய விருப்பப்படியே காரியங்களைச் செய்தார். அதனால் அவரது இறப்பாகிய பலி மூலம் நம்மைப் பரிசுத்தமாக்கினார். அவர் இப்பலியை என்றென்றைக்கும் போதுமான வகையில் ஒருமுறை செய்து முடித்தார்.
௧௧ ஒவ்வொரு நாளும் ஆசாரியர்கள் நின்றுகொண்டு தமது மதச் சடங்குகளைச் செய்கின்றனர். அவர்கள் மீண்டும் மீண்டும் அதே பலிகளைக் கொடுக்கின்றனர். ஆனால் அப்பலிகள் ஒருபோதும் பாவங்களை நீக்காது. ௧௨ ஆனால் கிறிஸ்து மக்களின் பாவங்களைப் போக்க ஒரே ஒரு முறைதான் தன்னைப் பலிகொடுத்தார். என்றென்றைக்கும் அது போதுமானதாயிற்று. அவர் தேவனுடைய வலதுபுறத்தில் அமர்ந்துகொண்டார். ௧௩ அவர் இப்பொழுது தனது எதிரிகளைத் தன் அதிகாரத்திற்குள் கொண்டுவரக் காத்துக்கொண்டிருக்கிறார். ௧௪ ஒரே ஒரு பலியின் மூலம் அவர் என்றென்றைக்கும் தம் மக்களை முழுமையாக்கிவிட்டார். அம்மக்களே பரிசுத்தமாக்கப்படுகிறார்கள்.
௧௫ பரிசுத்த ஆவியானவரும் இதைப்பற்றி சொல்லியிருக்கிறார். முதலில் அவர்,
 
௧௬ “பிறிதொரு காலத்தில் அவர்களோடு நான் செய்யப்போகிற உடன்படிக்கை இதுதான்.
என் சட்டங்களை அவர்கள் இதயங்களில் பதியவைப்பேன்.
மேலும் அவற்றை அவர்களின் மனங்களில் எழுதுவேன்” எரேமியா 31:33
 
௧௭ என்று சொன்னார். மேலும்,
 
“அவர்களின் பாவங்களையும் அவர்கள் செய்த தீமைகளையும் நான் மன்னித்து விடுவேன்.
மீண்டும் அவற்றை நான் நினைத்துப் பார்க்கமாட்டேன்” எரேமியா 31:34
 
௧௮ ஒரு முறை இப்பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன. பிறகு பலிகளுக்கான தேவை இல்லை.
தேவனிடம் நெருங்கி வாருங்கள்
௧௯ ஆதலால் சகோதர சகோதரிகளே! மிகப் பரிசுத்தமான இடத்திற்குள் நுழைய நாம் முழுமையாக விடுதலை பெற்று விட்டோம். நாம் அச்சம் இல்லாமல் இதனைச் செய்யமுடியும். ஏனென்றால் கிறிஸ்துவின் மரணம் நமக்காக நிகழ்ந்துவிட்டது. ௨௦ இப்போது மிகப் பரிசுத்தமான இடத்தின் வழியை மூடிக்கொண்டிருக்கிற அத்திரைக்குள் நுழைய நம்மிடம் ஒரு புதிய வழி இருக்கிறது. தன் சரீரத்தையே பலியாகத் தந்து அப்புதிய வாழ்வின் வழியை இயேசு திறந்தார். ௨௧ தேவனுடைய வீட்டின் மேல் அதிகாரியான மாபெரும் ஆசாரியர் ஒருவர் நமக்கு இருக்கிறார். ௨௨ நாம் சுத்தப்படுத்தப்பட்டு குற்ற உணர்விலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறோம். நமது சரீரங்கள் பரிசுத்த நீரால் கழுவப்பட்டுள்ளன. எனவே உண்மையான இதயத்தோடும், விசுவாசம் நமக்களிக்கிற உறுதியோடும் தேவனை நெருங்கி வாருங்கள். ௨௩ மற்றவர்களுக்கு நாம் சொல்கிற நமது நம்பிக்கையை பலமாகப் பற்றிக்கொள்வோம். நமக்கு வாக்குறுதியளித்த ஒருவரை நாம் நம்ப முடியும்.
உறுதிபெற ஒருவருக்கு ஒருவர் உதவுங்கள்
௨௪ நாம் ஒருவரைப் பற்றி ஒருவர் சிந்திக்க வேண்டும். நமது அன்பை வெளிப்படுத்தவும் நன்மை செய்யவும் எவ்வாறு ஒருவருக்கொருவர் உதவுவது என்று பார்க்கவேண்டும்.
௨௫ சிலர் வழக்கமாய்ச் செய்வதுபோல நாம் ஒன்றாகச் சந்திப்பதை நிறுத்திவிடக் கூடாது. அதற்குப் பதிலாக, ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாகக் கிறிஸ்து திரும்பிவரும் அந்த நாள் மிக விரைவில் வருவதை நாம் பார்ப்பதுபோல் செயல்பட வேண்டும்.
கிறிஸ்துவிடமிருந்து விலகாதீர்கள்
௨௬ நாம் உண்மையை உணர்ந்துவிட்ட பின்னர் வெளிப்படையாகத் தொடர்ந்து பாவங்களைச் செய்து வந்தால் பிறகு நம் பாவங்களுக்கு வேறு எந்த பலியும் இல்லை. ௨௭ நாம் தொடர்ந்து பாவம் செய்தால், நம்மிடம் நியாயத்தீர்ப்புக்கான அச்சமும் பகைவர்களை அழிக்கும் கோபமான நெருப்புமே இருக்கும். ௨௮ மோசேயினுடைய சட்டத்தை ஒருவன் ஒதுக்கினால் அக்குற்றத்தை உறுதிப்படுத்த இரண்டு அல்லது மூன்று சாட்சிகளே போதுமானதாக இருந்தன. அவன் மன்னிக்கப்படவில்லை. அவன் கொல்லப்பட்டான். ௨௯ ஆகவே தேவனுடைய குமாரன் மேல் வெறுப்பைக் காட்டுகிறவன் எவ்வளவு மோசமான தண்டனைக்கு உரியவன் என்பதை யோசித்துப் பாருங்கள். அவன் இரத்தத்தைப் பரிசுத்தமற்றதாக நினைத்தான். புதிய உடன்படிக்கையின்படி இயேசு சிந்திய அந்த இரத்தம் தான் அம்மனிதனைப் பரிசுத்தமாக்கிய உடன்படிக்கையின் இரத்தமாகும். தனக்குக் கிருபை காட்டிய ஆவியையே அம்மனிதன் அவமானப்படுத்தினான். ௩௦ “நான், மக்கள் செய்கிற பாவங்களுக்குத் தண்டனை தருவேன். நானே பதிலுக்குப் பதில் செய்வேன்” என்று தேவன் சொன்னதை நாம் அறிவோம். அதோடு, “கர்த்தர் தன் மக்களை நியாயம் தீர்ப்பார்” என்றும் சொன்னார். ௩௧ ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுவது ஒரு பாவிக்கு மிகப் பயங்கரமாக இருக்கும்.
உனது தைரியத்தையும் மகிழ்ச்சியையும் விட்டுவிடாதே
௩௨ நீங்கள் முதன் முதலாக உண்மையை அறிந்துகொண்ட நாட்களை நினைத்துப் பாருங்கள். பல சோதனைகளை நீங்கள் சகித்துக்கொண்டீர்கள். எனினும் நீங்கள் உறுதியாக இருந்தீர்கள். ௩௩ சிலவேளைகளில் வெறுக்கத்தக்க காரியங்களைப் பற்றி உங்களிடம் சொன்னார்கள். பலர் முன்னிலையில் உங்களைக் குற்றம் சுமத்தித் தண்டித்தார்கள். சில வேளைகளில் அப்படி நடத்தப்பட்டவர்களுக்கும் நீங்கள் உதவியாய் இருந்தீர்கள். ௩௪ ஆமாம், நீங்கள் சிறையில் இருந்த அவர்களுக்கு உதவி, அவர்கள் துன்பத்தில் பங்குகொண்டீர்கள். உங்கள் சொத்து உங்களிடமிருந்து அபகரிக்கப்பட்டபோதும் நீங்களும் அதை மகிழ்வோடு ஒத்துக்கொண்டீர்கள். ஏனெனில், இதைவிடவும் மதிப்புமிக்க நிலையான சொத்து உங்களுக்கு உண்டு என்று நீங்கள் அறிவீர்கள்.
௩௫ எனவே முன்பு நீங்கள் வைத்திருந்த தைரியத்தை விட்டுவிடாதீர்கள். உங்கள் தைரியம் உங்களுக்கு பலனைத் தரும். ௩௬ நீங்கள் பொறுமையாக இருக்கவேண்டும். தேவனுக்கு விருப்பமானவற்றை நீங்கள் செய்த பிறகு, நிச்சயம் தேவன் வாக்களித்ததை நீங்கள் பெறுவீர்கள். ௩௭ கொஞ்ச காலத்தில்,
 
“வரவேண்டியவர் வருவார்,
அவர் தாமதிக்கமாட்டார்.
௩௮ விசுவாசத்தினாலே நீதிமானாக
இருக்கிறவன் பிழைப்பான்.
அவன் அச்சத்தால் இதிலிருந்து பின்வாங்குவானேயானால்
நான் அவன்மீது பிரியமாக இருக்கமாட்டேன்.” உபாகமம் 32:35
 
௩௯ ஆனால், நாம் கெட்டுப்போகும்படி பின் வாங்குகிறவர்களாய் இருக்கக்கூடாது. நாம் விசுவாசம் உடையவர்களாகவும் இரட்சிக்கப்படுகிறவர்களாகவும் இருக்கவேண்டும்.
௧௦:௩௦ உபா. 32:35-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ௧௦:௩௦ சங்கீதம் 135:14-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.