௩௫
தேவன் தம் ஜனங்களை ஆறுதல்படுத்துவார்
௧ வறண்ட வனாந்திரம் மிகுந்த மகிழ்ச்சியைப் பெறும். வனாந்திரம் சந்தோஷம் அடைந்து பூவைப்போல வளரும்.
௨ வனாந்திரம் முழுவதும் பூக்களால் நிறைந்து அதன் மகிழ்ச்சியைக் காட்டத் தொடங்கும். அது பார்ப்பதற்கு வனாந்திரம் மகிழ்ச்சியுடன் ஆடிக்கொண்டிருப்பதுபோலத் தோன்றும். அந்த வனாந் திரமானது, லீபனோன் காடுகளைப் போலவும், கர்மேல் மலையைப் போலவும், சாரோன் பள்ளத்தாக்கு போலவும் அழகாக மாறும். இது நிகழும் ஏனென்றால், ஜனங்களனைவரும் கர்த்தருடைய மகிமையைக் காண்பார்கள். நம் தேவனுடைய மேன்மையை ஜனங்கள் காண்பார்கள்.
௩ பலவீனமான கைகளை மீண்டும் பலப்படுத்துங்கள். பலவீனமான முழங்கால்களை பலப்படுத்துங்கள்.
௪ ஜனங்கள் அஞ்சி குழம்பினார்கள். அந்த ஜனங்களிடம் கூறுங்கள், “பலமாக இருங்கள் அஞ்சவேண்டாம்!” பாருங்கள், உங்கள் தேவன் வருவார். உங்கள் பகைவர்களைத் தண்டிப்பார். அவர் வருவார். உங்களுக்கு விருதினைத் தருவார். கர்த்தர் உங்களைக் காப்பாற்றுவார்.
௫ குருடர்களின் கண்கள் திறக்கப்படும். செவிடர்களின் காதுகள் திறக்கும்.
௬ முடவர்கள் மானைப்போல நடனம் ஆடுவார்கள். பேச முடியாத ஜனங்கள் தங்கள் குரலைப் பயன்படுத்தி மகிழ்ச்சி கரமான பாடல்களைப் பாடுவார்கள். வனாந்தரத்தில் நீரூற்று கிளம்பிப் பாயும்போது இது நிகழும். வறண்ட நிலங்களில் நீரூற்றுகள் பாயும்.
௭ இப்பொழுது ஜனங்கள் கானல் தண்ணீரைப் பார்க்கின்றனர். இது தண்ணீரைப்போல தோன்றும். ஆனால் அந்த நேரத்தில் அங்கே உண்மையான தண்ணீர் குளங்களும் இருக்கும். வறண்ட நிலத்தில் கிணறுகள் இருக்கும். தண்ணீரானது பூமியிலிருந்து பாயும். ஒரு காலத்தில் காட்டு மிருகங்கள் இருந்த இடத்தில் உயரமான நீர்த்தாவரங்கள் வளரும்.
௮ அந்தக் காலத்திலே, அங்கே ஒரு சாலை இருக்கும். இந்த நெடுஞ்சாலை “பரிசுத்தமான சாலை” என்று அழைக்கப்படும். தீயவர்கள் அச்சாலையில் நடக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். தேவனைப் பின்பற்றாத எவரும் அச்சாலையில் போகமாட்டார்கள்.
௯ அந்தச் சாலையின் எவ்வித ஆபத்தும் இருக்காது. ஜனங்களைக் கொல்லுகின்ற சிங்கங்கள் அந்தச் சாலையில் இருக்காது. அந்தச் சாலையில் ஆபத்தைத் தரும் மிருகங்கள் எதுவும் இராது. அந்தச் சாலை தேவனால் காப்பாற்றப்பட்டவர்களுக்கே உரியது.
௧௦ தேவன் அவரது ஜனங்களை விடுதலை செய்வார். அந்த ஜனங்கள் அவரிடம் திரும்பி வருவார்கள். இந்த ஜனங்கள் சீயோனுக்குள் வரும்போது அவர்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். என்றென்றும் ஜனங்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். அவர்களின் மகிழ்ச்சியானது அவர்களின் தலையில் கிரீடம்போன்று இருக்கும். மகிழ்ச்சியும் சந்தோஷமும் அவர்களை நிரப்பும். துயரமும், துக்கமும் வெகுதூரம் விலகிப்போகும்.