௧௬
௧ “நீங்கள் உங்கள் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என்பதற்காக இவைகளை நான் உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன்.
௨ மக்கள் தங்கள் ஆலயங்களில் இருந்து உங்களை வெளியேற்றுவர். மேலும் உங்களைக் கொல்பவன் தேவனுக்கு சேவை செய்கிறவன் என்று மக்கள் எண்ணும்படியான காலம் வரும்.
௩ அவர்கள் பிதாவைப்பற்றியும் என்னைப்பற்றியும் அறிந்துகொள்ளாததால் இப்படிச் செய்வார்கள்.
௪ நான் இப்பொழுது இவற்றைப்பற்றியெல்லாம் சொல்லிவிட்டேன். எனவே இவை நிகழும் காலம் வரும்போது, நான் ஏற்கெனவே உங்களுக்கு எச்சரித்திருக்கிறேன் என்பதை நினைவுபடுத்திக்கொள்வீர்கள்.
பரிசுத்த ஆவியானவரின் பணிகள்
“நான் உங்களோடு இருந்தேன். எனவே தொடக்கத்தில் இவற்றையெல்லாம் நான் உங்களுக்குச் சொல்லவில்லை.
௫ இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடம் செல்லப் போகிறேன். ‘நீங்கள் எங்கே போகிறீர்கள்’ என்று யாரும் என்னை இதுவரை கேட்கவில்லை.
௬ எனினும் நான் இவற்றைச் சொன்னதால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிரம்பிவிட்டது.
௭ ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். நான் போவது உங்களுக்கு நன்மையைத் தரும். ஏனென்றால் நான் போனால், உதவியாளரை அனுப்புவேன். நான் போகாவிட்டால் அந்த உதவியாளர் வரமாட்டார்.
௮ “அவர் வரும்போது இவற்றைப்பற்றிய உண்மைகளையெல்லாம் உலகிலுள்ள மக்களுக்கு நிரூபிப்பார். அதோடு பாவத்தின் குற்றம்பற்றியும், தேவனோடு உள்ள சரியான உறவுபற்றியும், நியாயத்தீர்ப்புபற்றியும் விளக்குவார்.
௯ அந்த உதவியாளர், மக்கள் என்னை நம்பாததால் அவர்கள் பாவம் செய்தவர்கள் என்பதை நிரூபிப்பார்.
௧௦ அவர் தேவனிடம் எனக்கிருக்கிற நல்ல உறவுபற்றியும் நிரூபிப்பார். ஏனென்றால் நான் பிதாவிடம் செல்கிறேன். அப்பொழுது நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்.
௧௧ நியாயத்தீர்ப்புபற்றிய உண்மையை அவர் உலகத்துக்கு நிரூபிப்பார். ஏனென்றால் இந்த உலகை ஆளுகிற சாத்தான் ஏற்கெனவே நியாயந்தீர்க்கப்பட்டிருக்கிறான்.
௧௨ “உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. ஆனால் இப்பொழுது நீங்கள் தாங்கிக்கொள்ள முடியாதபடி அந்தச் செய்திகள் அதிகப்படியானவை.
௧௩ ஆனால் உண்மையின் ஆவியானவர் வரும்போது அனைத்து உண்மைகளிலும் உங்களை வழிநடத்திச் செல்வார். ஆவியானவர் அவரது சொந்த வார்த்தைகளைக் கூறுவதில்லை. அவர் என்ன கேட்டிருக்கிறாரோ அவற்றையே பேசுவார்.
௧௪ நடக்கப்போகிறவற்றைப்பற்றி மட்டுமே அவர் பேசுவார். உண்மையின் ஆவியானவர் எனக்கு மகிமையைக் கொண்டுவருவார். எப்படி என்றால் அவர் என்னிடம் கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார்.
௧௫ பிதாவினுடையவைகள் எல்லாம் என்னுடையவைகள். அதனால்தான் ஆவியானர் என்னிடமிருந்து கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார் என்றேன்.”
துயரம் மகிழ்ச்சியாக மாறும்
௧௬ பின்னும் இயேசு “இன்னும் கொஞ்ச காலத்திற்குப்பின் என்னை நீங்கள் பார்க்க முடியாது. அதற்குக் கொஞ்ச காலத்திற்குப் பின் நீங்கள் என்னை மீண்டும் பார்க்கலாம்” என்றார்.
௧௭ இயேசுவின் சீஷர்களில் சிலர் ஒருவருக்கொருவர், “ ‘கொஞ்ச காலத்திற்குப்பின் பார்க்கமுடியாது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு நீங்கள் என்னை மீண்டும் பார்க்கலாம்’ என்றாரே, இயேசு எதைக் கருதி இவ்வாறு கூறுகிறார். ‘நான் பிதாவிடம் போகிறேன்’ என்று ஏன் கூறுகிறார்.
௧௮ ‘கொஞ்ச காலம்’ என்று கூறினாரே அதன் பொருள் என்ன? அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையே” என்று பேசிக்கொண்டனர்.
௧௯ சீஷர்கள் தன்னிடம் அதைப்பற்றிக் கேட்க விரும்புவதை இயேசு கவனித்தார். ஆகையால் இயேசு அவர்களிடம், “நீங்கள் உங்களுக்குள் என்ன பேசிக்கொள்கிறீர்கள்? நான், ‘இன்னும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு என்னைப் பார்க்க முடியாது. அப்புறம் கொஞ்ச காலத்திற்குப் பின்பு மீண்டும் என்னைப் பார்ப்பீர்கள்’ என்று சொன்னேனே, அதைப் பற்றியா?
௨௦ நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் அழுது துக்கப்படுவீர்கள். ஆனால் உலகம் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் துக்கப்படுவீர்கள். ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
௨௧ “ஒரு பெண், குழந்தையைப் பெற்றெடுக்கும்போது அவளுக்கு வலி ஏற்படும். ஏனென்றால் அவளுக்குக் குறிப்பிட்டவேளை நெருங்கி இருக்கும். ஆனால் குழந்தை பிறந்ததும் அவள் தன் வலியை மறந்துவிடுவாள். குழந்தை இந்த உலகுக்கு வந்துவிட்டது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவாள்.
௨௨ உங்களுக்கும் இதைப்போலத்தான். இப்பொழுது நீங்கள் துயரமாக இருக்கிறீர்கள். ஆனால் நான் மீண்டும் உங்களைப் பார்ப்பேன். அப்பொழுது நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எவராலும் உங்கள் மகிழ்ச்சியைப் பறிக்க முடியாது.
௨௩ அந்த நாளில் நீங்கள் என்னிடம் எதைப்பற்றியும் கேட்கமாட்டீர்கள். நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். என் பேரில் நீங்கள் எதைக் கேட்டாலும் என் பிதா உங்களுக்குத் தருவார்.
௨௪ இதுவரை நீங்கள் என்பேரால் எதையும் கேட்கவில்லை. கேளுங்கள், அப்பொழுது நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் மகிழ்ச்சி முழுமையான மகிழ்ச்சியாக இருக்கும்.
உலகத்தின் மீது வெற்றி
௨௫ “நான் இவற்றையெல்லாம் உங்களுக்கு மறை பொருளில் கூறியிருக்கிறேன். ஆனால் காலம் வரும். அப்போது நான் இவ்வாறு மறைபொருளில் பேசாமல் வெளிப்படையாகச் செய்திகளை அந்தப் பிதாவைப்பற்றிக் கூறுவேன்.
௨௬ அந்த நாளில் நீங்கள் பிதாவிடம் என்பேரில் உங்களுக்கானதைக் கேட்பீர்கள். நான் உங்களுக்காக என் பிதாவிடம் கேட்டுக்கொள்ளும் தேவை இருக்காது என்று சொல்கிறேன்.
௨௭ என் பிதா அவராகவே உங்களை நேசிக்கிறார். ஏனென்றால் நீங்கள் என்னிடம் அன்பாக இருந்தீர்கள். நான் தேவனிடம் இருந்து வந்ததாக நீங்கள் நம்பியிருந்தீர்கள்.
௨௮ நான் இந்த உலகத்துக்கு என் பிதாவிடம் இருந்து வந்தேன். இப்பொழுது நான் இந்த உலகத்தைவிட்டுப் போகிறேன். என் பிதாவிடம் திரும்பிப் போகிறேன்” என்றார்.
௨௯ பிறகு இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “நீர் இப்பொழுது எங்களிடம் தெளிவாகப் பேசிக்கொண்டிருக்கிறீர். புரிந்து கொள்வதற்குக் கடினமான வார்த்தைகளை நீர் பயன்படுத்தவில்லை.
௩௦ உமக்கு எல்லாம் தெரியும் என்பதை நாங்கள் இப்போது தெரிந்துகொண்டோம். உம்மிடம் ஒருவன் ஒரு கேள்வியைக் கேட்பதற்கு முன்னரே அக்கேள்விக்கு உம்மால் பதில்கூற முடியும். இவை நீர் தேவனிடம் இருந்து வந்தவர் என்பதை எங்களை நம்ப வைக்கிறது” என்றனர்.
௩௧ இயேசு அவர்களிடம், “எனவே நீங்கள் இப்போது நம்புகிறீர்கள்.
௩௨ என்னைக் கவனியுங்கள். நீங்கள் சிதறிப்போகிற வேளை இதோ நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வீட்டிற்குப் போய் என்னை விட்டு விலகிப் போவீர்கள். அந்த நேரம் இதோ வந்துவிட்டது. நீங்கள் என்னை விட்டுப் போவீர்கள். நான் தனியே இருப்பேன். எனினும் நான் உண்மையில் தனித்திருக்கமாட்டேன். ஏனென்றால் என்னோடு என் பிதா இருக்கிறார்.
௩௩ “என்னில் உங்களுக்கு சமாதானம் இருக்கும்பொருட்டு இவற்றை நான் உங்களுக்குச் சொன்னேன். இந்த உலகத்தில் உங்களுக்குத் தொந்தரவுகள் ஏற்படும். ஆனால் தைரியமாக இருங்கள். நான் உலகத்தை வென்றுவிட்டேன்” என்றார்.