௨௦
இயேசுவின் உயிர்ப்பு
(மத். 28:1-10; மாற். 16:1-8; லூ. 24:1-12)
௧ வாரத்தின் முதல்நாள் அதிகாலையில் மகதலேனா மரியாள், இயேசுவின் சரீரம் இருந்த கல்லறைக்குச் சென்றாள். அது அப்பொழுதும் இருளாக இருந்தது. கல்லறை வாசலை மூடியிருந்த பெரிய கல் விலக்கி வைக்கப்பட்டிருப்பதை அவள் கண்டாள்.
௨ எனவே மரியாள் சீமோன் பேதுருவிடமும் இன்னொரு சீஷனிடமும் (இயேசு நேசித்தவன்) ஓடிச் சென்று “அவர்கள் கர்த்தரது சரீரத்தைக் கல்லறையைவிட்டு அப்புறப்படுத்திவிட்டனர். அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்றாள்.
௩ உடனே பேதுருவும் இன்னொரு சீஷனும் கல்லறையை நோக்கிப் போனார்கள்.
௪ இருவரும் ஓடினாலும், பேதுருவைவிட அடுத்தவன் வேகமாக ஓடிப் போனான். எனவே அந்த சீஷன் முதலில் கல்லறையை அடைந்தான்.
௫ அவன் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்தான். துண்டுத்துணிகள் அங்கே கிடப்பதைக் கண்டான். ஆனால் உள்ளே அவன் போகவில்லை.
௬ பிறகு சீமோன் பேதுரு அவனுக்குப் பின்னால் வந்தான். பேதுரு கல்லறைக்குள்ளே போனான்.
௭ அங்கே துணிகள் கிடப்பதைப் பார்த்தான். தலையில் சுற்றப்பட்ட துணி தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.
௮ பிறகு அடுத்த சீஷனும் உள்ளே போனான். இந்த சீஷன்தான் கல்லறையை முதலாவது ஓடிவந்து சேர்ந்தவன். அவன் நிகழ்ந்ததை எல்லாம் பார்த்து நம்பிக்கைகொண்டான்.
௯ (இந்த சீஷர்கள், வேதவாக்கியங்களின்படி இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்தெழவேண்டும் என்று இன்னும் புரிந்துகொள்ளாமல் இருந்தனர்)
மகதலேனா மரியாளுக்குக் காட்சி
(மாற். 16:9–11)
௧௦ பிறகு அவரது சீஷர்கள் வீட்டிற்குத் திரும்பிப்போனார்கள்.
௧௧ ஆனால் மரியாள் கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள். அவ்வாறு அழும்போதே, அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்தாள்.
௧௨ வெள்ளை உடைகள் அணிந்த இரு தேவ தூதர்களைப் பார்த்தாள். இயேசுவின் சரீரம் இருந்த இடத்தில் அவர்கள் இருந்தனர். இயேசுவின் தலை இருந்த இடத்தில் ஒரு தேவதூதனும் அவரது பாதங்கள் இருந்த இடத்தில் இன்னொரு தேவதூதனும் இருப்பதைக் கண்டாள்.
௧௩ அந்த தேவதூதர்கள் மரியாளிடம், “பெண்ணே! ஏன் அழுதுகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டனர்.
“சிலர் என் ஆண்டவரின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை” என்றாள் மரியாள்.
௧௪ அவள் இவ்வாறு சொல்லிவிட்டு திரும்பியபோது இயேசு நின்றுகொண்டிருப்பதைக் கண்டாள். ஆனால் அவர்தான் இயேசு என்பதை அவள் அறிந்துகொள்ளவில்லை.
௧௫ இயேசு அவளிடம், “பெண்ணே! ஏன் அழுகிறாய்? நீ யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார்.
மரியாள் அவரை, அந்தத் தோட்டத்தின் காவல்காரனாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். எனவே அவள் அவரிடம், “ஐயா, நீங்களா இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போனீர்கள்? அவரை எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். நான் போய் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றாள்.
௧௬ இயேசு “மரியாளே” என்று அழைத்தார்.
மரியாள் திரும்பி இயேசுவைப் பார்த்து, “ரபூனீ” என்று யூத மொழியில் கூப்பிட்டாள். (இதற்கு போதகரே என்று பொருள்)
௧௭ இயேசு அவளிடம், “என்னைத் தொடாதே. நான் இன்னும் என் பிதாவிடம் திரும்பிச் செல்லவில்லை. ஆனால் போய் என் சகோதரர்களிடம், ‘நான் என் பிதாவிடமும் உங்களின் பிதாவிடமும் செல்கிறேன். நான் என் தேவனிடமும் உங்களின் தேவனிடமும் திரும்பிப் போகிறேன்’ என்று சொல்” என்றார்.
௧௮ மகதலேனா மரியாள் சீஷர்களிடம் சென்று, “நான் ஆண்டவரைப் பார்த்தேன்” என்று சொன்னாள். அதோடு அவர் சொன்னவற்றையும் சொன்னாள்.
சீஷர்களுக்கு இயேசுவின் காட்சி
(மத். 28:16-20; மாற். 16:14-18; லூ. 24:36-49)
௧௯ அன்று வாரத்தின் முதல்நாள். அன்று மாலையில் சீஷர்கள் கூடினர். கதவுகள் அடைக்கப்பட்டன. ஏனென்றால் அவர்கள் யூதர்களுக்குப் பயந்தனர். அப்பொழுது இயேசு வந்து அவர்களின் நடுவில் நின்றார். “சமாதானம் உங்களோடு இருக்கட்டும்” என்றார்.
௨௦ அவர் இதனைச் சொன்ன பிறகு, தனது சீஷர்களிடம் தனது கைகளையும் விலாவையும் காட்டினார். அவர்கள் கர்த்தரைப் பார்த்ததும் பெரிதும் மகிழ்ந்தனர்.
௨௧ பிறகு மீண்டும் அவர்களிடம் இயேசு, “சமாதானம் உங்களோடு இருக்கட்டும். பிதா என்னை அனுப்பினார். அதே விதமாக நான் இப்பொழுது உங்களை அனுப்புகிறேன்” என்றார்.
௨௨ இயேசு அதைச் சொன்ன பிறகு, அவர் சீஷர்கள்மேல் ஊதினார். “பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
௨௩ நீங்கள் மக்களது பாவங்களை மன்னித்தால் அவை மன்னிக்கப்படும். நீங்கள் மக்களது பாவங்களை மன்னிக்காவிட்டால் அவை மன்னிக்கப்படாது” என்று கூறினார்.
தோமாவுக்கு காட்சி
௨௪ இயேசு அங்கு தோன்றியபோது தோமா சீஷர்களுடன் இல்லை. அவரது பன்னிரண்டு சீஷர்களுள் தோமாவும் ஒருவன்.
௨௫ ஏனைய சீஷர்கள் “நாங்கள் ஆண்டவரைப் பார்த்தோம்” என்று தோமாவிடம் சொன்னார்கள். அதற்கு தோமா “நான் அவரது கைகளில் ஆணிகளின் துவாரங்களைக் காணும்வரை நீங்கள் சொல்வதை நம்பமாட்டேன். அப்படிப் பார்த்தாலும் அந்த ஆணித் துவாரங்களில் எனது விரல்களையும், விலாகாயத்தில் எனது கைகளையும் வைத்துப் பார்ப்பேன். இல்லாவிட்டால் நான் நம்பமாட்டேன்” என்றான்.
௨௬ ஒரு வாரத்திற்குப் பின் சீஷர்கள் முன்புபோல் அந்த வீட்டில் மீண்டும் கூடினர். தோமா அவர்களோடு இருந்தான். கதவுகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் இயேசு வந்து அவர்களின் நடுவில் நின்றார். “சமாதானம் உங்களோடு இருக்கட்டும்” என்றார்.
௨௭ பிறகு இயேசு தோமாவிடம் “உனது விரல்களை இங்கே வை. எனது கைகளைப் பார். எனது விலாவிலே உன் கையை வைத்துப் பார். சந்தேகத்தை விட்டுவிடு. விசுவாசி” என்றார்.
௨௮ அதற்குத் தோமா இயேசுவிடம், “என் ஆண்டவரே! என் தேவனே!” என்று பதில் சொன்னான்.
௨௯ இயேசு அவனிடம், “நீ என்னைப் பார்த்ததால் விசுவாசிக்கிறாய். என்னைப் பாராமலேயே எவர் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் பாக்கியவான்கள்” என்றார்.
இப்புத்தகத்தை எழுதினதின் நோக்கம்
௩௦ இயேசு அவரது சீஷர்களுக்கு முன்பு அநேக வேறு அற்புதங்களைச் செய்து காட்டினார். அவை இந்நூலில் எழுதப்படவில்லை.
௩௧ ஆனால் இயேசுவே கிறிஸ்து என்றும் தேவனின் குமாரன் என்றும் நீங்கள் நம்பும்படிக்கும், அதோடு நம்பிக்கையின் மூலம் அவரது பெயரால் நித்திய வாழ்வைப் பெறவும் இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன.