௧௮
குயவனும் களிமண்ணும்
௧ இந்தச் வார்த்தை எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வந்தது:
௨ “எரேமியா, குயவனின் வீட்டிற்குப் போ. அந்தக் குயவனின் வீட்டில் எனது வார்த்தையை உனக்குக் கொடுப்பேன்.”
௩ எனவே, நான் கீழே குயவனின் வீட்டிற்குப் போனேன். குயவன் சக்கரத்தில் களிமண்ணை வைத்து வேலை செய்துகொண்டிருப்பதை நான் பார்த்தேன்.
௪ அவன் களிமண்ணிலிருந்து ஒரு பானையை செய்துகொண்டிருந்தான். ஆனால் அந்தப் பானையில் ஏதோ தவறு இருந்தது. எனவே, அந்தக் குயவன் அக்களிமண்ணை மீண்டும் பயன்படுத்தி வேறொரு பானை செய்தான். தான் விரும்பின வகையில் அந்தப் பானையை வடிவமைக்கும்படி அவன் தனது கைகளைப் பயன்படுத்தினான்.
௫ அப்போது கர்த்தரிடமிருந்து எனக்கு வார்த்தை வந்தது:
௬ “இஸ்ரவேல் குடும்பத்தினரே! உங்களோடு தேவனாகிய நானும் அதே செயலைச் செய்யமுடியும் என்பது உங்களுக்குத் தெரியும். குயவனின் கைகளில் இருக்கிற களிமண்ணைப்போன்று நீங்கள் இருக்கிறீர்கள். நான் குயவனைப் போன்றுள்ளேன்.
௭ ஒரு காலம் வரும். அப்போது, நான் ஒரு தேசத்தையோ அல்லது ஒரு அரசாட்சியையோ குறித்து பேசுவேன். அத்தேசத்தை உயர்த்துவேன் என்று நான் சொல்லலாம். அத்தேசத்தைக் கீழே இழுத்துப் போடுவேன். அத்தேசத்தை அல்லது அரசாங்கத்தை அழிப்பேன் என்று சொல்லலாம்.
௮ ஆனால், அத்தேசத்து ஜனங்கள் தங்கள் இதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றலாம். அத்தேசத்து ஜனங்கள் தங்கள் தீயச் செயல்களை நிறுத்தலாம். பிறகு என் மனதை நான் மாற்றுவேன். அத்தேசத்திற்கு அழிவைக் கொண்டுவரும் எனது திட்டத்தை நான் பின்பற்றமாட்டேன்.
௯ இன்னொரு காலம் வரலாம். அப்போது ஒரு தேசத்தைப்பற்றிப் பேசுவேன். நான் அத்தேசத்தைக் கட்டி எழுப்புவேன் என்று சொல்லலாம்.
௧௦ ஆனால், அத்தேசம் தீயவற்றைச் செய்து எனக்குக் கீழ்ப்படியாமல் போவதை நான் பார்க்கலாம். பிறகு, நான் அத்தேசத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்று போட்டிருந்த திட்டங்களுக்காக வருந்தி அவற்றை எதிராக மாற்றிப்போடுவேன்.
௧௧ “எனவே, எரேமியா, யூதாவின் ஜனங்களிடமும் எருசலேமில் வாழ்கிற ஜனங்களிடமும் கூறு. ‘இதுதான் கர்த்தர் கூறுவது: நான் இப்போதிருந்தே உங்களுக்குத் தொல்லைகளை தயாரித்துக்கொண்டிருக்கிறேன். நான் உங்களுக்கு எதிராகத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறேன். எனவே, நீங்கள் செய்துகொண்டிருக்கிற தீயச்செயல்களை நிறுத்துங்கள். ஒவ்வொரு நபரும் மாறவேண்டும், நல்லவற்றைச் செய்யத் தொடங்கவேண்டும்!’
௧௨ ஆனால் யூதாவின் ஜனங்கள் பதில் கூறுவார்கள், ‘மாற்றம் செய்வதற்கான முயற்சி எடுப்பதால் பயனில்லை. நாங்கள் விரும்புகிறபடியே தொடர்ந்து செய்வோம். எங்களில் ஒவ்வொருவரும் தங்கள் பிடிவாதத்தின்படியே தீய இருதயம் விரும்புகிறபடியே செய்யப் போகிறோம்.’ ”
௧௩ கர்த்தர் சொல்கிறவற்றை கவனியுங்கள்.
“மற்ற தேசத்தாரிடம் இந்தக் கேள்வியைக் கேளுங்கள்.
‘இஸ்ரவேல் செய்திருக்கிற தீயச் செயல்களை எவராவது செய்ததாக நீங்கள் எப்பொழுதாவது கேள்விபட்டிருக்கிறீர்களா?’
தேவனுக்கு இஸ்ரவேலர் சிறப்புக்குரியவர்கள்.
இஸ்ரவேலர் தேவனுடைய மணமகளைப் போன்றவள்!
௧௪ லீபனோனில் உள்ள மலை உச்சியில் படிந்த பனி உருகுவதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.
குளிர்ச்சியாக பாய்கின்ற நீரோடைகள் வறண்டுவிடுவதில்லை என்பது உங்களுக்கு தெரியும்.
௧௫ ஆனால் எனது ஜனங்கள் என்னைப் மறந்திருக்கிறார்கள்.
பயனற்ற விக்கிரகங்களுக்கு அவர்கள் பலிகளைக் கொடுக்கிறார்கள்.
எனது ஜனங்கள் தாம் செய்கின்றவற்றில் தடுமாற்றமாக இருக்கிறார்கள்.
அவர்களின் தடுமாற்றம் தமது முற்பிதாக்களின் பழைய வழிகளைப் பற்றியதாக உள்ளது.
எனது ஜனங்கள் என்னைப் பின்பற்றி நல்ல சாலைகளில் வருவதைவிட,
பின் சாலைகளிலும் மோசமான நெடும் பாதைகளிலும் நடப்பார்கள்.
௧௬ எனவே, யூதாவின் நாடு காலியான வனாந்தரம் போன்றதாகும்.
அதைக் கடந்து செல்லும் ஜனங்கள் பிரமித்து தங்கள் தலைகளை அசைப்பார்கள்.
இந்நாடு எவ்வாறு அழிக்கப்பட்டது என்று அதிர்ச்சி அடைவார்கள்.
௧௭ நான் யூதாவின் ஜனங்களைச் சிதறும்படி செய்வேன்.
அவர்கள் பகைவர்களிடமிருந்து ஓடிப் போவார்கள்.
கிழக்குக் காற்று பொருட்களைச் சிதறடிப்பதுபோன்று
நான் யூதா ஜனங்களைச் சிதறடிப்பேன்.
நான் அந்த ஜனங்களை அழிப்பேன் நான் அவர்களுக்கு உதவி செய்ய வருவதைப் பார்க்கமாட்டார்கள்.
இல்லை நான் விலகிச் செல்வதை அவர்கள் பார்ப்பார்கள்.”
எரேமியாவின் நான்காவது முறையீடு
௧௮ பிறகு, எரேமியாவின் பகைவர்கள் சொன்னார்கள், “வாருங்கள் எரேமியாவிற்கு எதிராகத் திட்டங்கள் தீட்ட எங்களை அனுமதியுங்கள். ஆசாரியரால் இயற்றப்படும் சட்டம் பற்றிய போதனைகள் தொலைந்து போகாது. ஞானமுள்ள மனிதரின் ஆலோசனைகள் நம்மோடு கூட இருக்கும். தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நாம் இன்னும் வைத்திருப்போம். எனவே அவனைப்பற்றிய பொய் சொல்ல எங்களை விடுங்கள். அது அவனை அழிக்கும். அவன் சொல்லுகிற எதையும் நாங்கள் கவனிக்கமாட்டோம்.”
௧௯ கர்த்தாவே என்னைக் கேட்டருளும்!
என் வாதங்களைக் கேளும் யார் சரியானவர் என்பதை முடிவு செய்யும்.
௨௦ ஜனங்கள் நன்மைக்கு தீமையை செய்வார்களா? இல்லை.
நீர் அவர்களை தண்டிக்கக்கூடாது என்பதற்காக
நான் உம் முன் நின்று அவர்களைப் பற்றி நல்ல காரியங்களை கூறியதை நினைவுகூரும்.
ஆனால், அவர்கள் எனக்குத் தீமையைச் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் என்னை வலைக்குட்படுத்தி கொல்ல முயற்சி செய்கிறார்கள்.
௨௧ அவர்களது பிள்ளைகள் பஞ்சத்தால் துன்புறும்படிச் செய்யும்.
அவர்களின் பகைவர்களால் அவர்கள் கொல்லப்படும்படிச் செய்யும்.
அவர்களது மனைவிகள், குழந்தைகள் இழந்துபோகட்டும்.
யூதாவின் ஆண்கள் மரணத்தில் விழட்டும்.
அவர்களது மனைவியர் விதவைகள் ஆகட்டும்.
யூதாவில் உள்ள ஆண்கள் மரணத்தில் விழட்டும். இளைஞர்கள் போரில் கொல்லப்படட்டும்.
௨௨ அவர்களது வீடுகளில் அழுகை வரட்டும்.
அவர்களுக்கு எதிராகத் திடீரென்று எதிரியை வர வழைக்கும்போது அவர்கள் கதறட்டும்.
எனது பகைவர்கள் என்னை (வலைக்குள்) சிக்க வைக்க முயன்றனர்.
எனவே, இவையெல்லாம் நிகழட்டும்.
௨௩ கர்த்தாவே, அவர்கள் என்னைக் கொல்வதற்குயிட்ட திட்டங்களை நீர் அறிவீர்.
அவர்களது பொல்லாங்குகளை மன்னியாதிரும்.
அவர்களது பாவங்களை அழிக்காதிரும்.
எனது பகைவர்கள் உமக்கு முன்பாக இடறி விழட்டும்.
நீர் கோபமாக இருக்கும்போது அந்த ஜனங்களைத் தண்டியும்.