௪௯
அம்மோனைப் பற்றிய செய்தி
௧ அம்மோனியர்களைப்பற்றி கர்த்தர் இதைக் கூறுகிறார்,
“அம்மோனிய ஜனங்களே, இஸ்ரவேல் ஜனங்களுக்குப்
பிள்ளைகள் இல்லையென்று நினைக்கிறீர்களா?
பெற்றோர்கள் மரித்தப்போது நாட்டை சுதந்தரித்துக்கொள்ள
பிள்ளைகள் இல்லை என்று நினைக்கிறீர்களா?
ஒருவேளை அதற்காகவேதான் மில்காம் காத்தின் நாட்டை எடுத்துக்கொண்டிருக்கலாம்.”
௨ கர்த்தர் கூறுகிறார், “அம்மோனின் ரப்பாவிலே ஒரு காலம் வரும்.
அப்போது ஜனங்கள் போரின் சத்தங்களைக் கேட்பார்கள்.
அம்மோனின் ரப்பா அழிக்கப்படும்.
அது அழிந்த கட்டிடங்கள் நிறைந்த வெற்று மலையாகும்.
அதைச் சுற்றியுள்ள பட்டணங்கள் எரிக்கப்படும்.
அந்த ஜனங்கள் இஸ்ரவேல் ஜனங்களைத் தம் சொந்த நாட்டை விட்டு விலகும்படி பலவந்தப்படுத்தினார்கள்.
ஆனால் பிறகு, இஸ்ரவேல் அவர்களை விலகும்படி வற்புறுத்தி அவர்கள் தேசத்தை சுதந்தரிப்பர்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
௩ “எஸ்போன் ஜனங்களே அழுது புலம்புங்கள்! ஏனென்றால், ஆயி பட்டணம் அழிந்துக்கொண்டிருக்கிறது.
அம்மோனது ராப்பாவின் பெண்களே அழுங்கள்!
சோகத்துக்குரிய ஆடையை அணிந்துக் கொண்டு அழுங்கள்.
பாதுகாப்புக்காக நகரத்திற்கு ஓடுங்கள்.
ஏனென்றால், பகைவன் வந்துக்கொண்டிருக்கிறான்.
அவர்கள் மில்காம் என்ற தெய்வத்தை எடுத்துச் செல்வார்கள்.
அவர்கள் மில்காமின் ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் எடுத்துச் செல்வார்கள்.
௪ நீ உனது பலத்தைப்பற்றி பெருமைபட்டாய்.
ஆனால் நீ உனது பலத்தை இழந்துக் கொண்டிருக்கிறாய்.
உனது பணம் உன்னை பாதுகாக்கும் என்று நம்புகிறாய்.
எவரும் உன்னைத் தாக்கிட நினைக்கவும்மாட்டார்கள் என்று நினைக்கிறாய்.”
௫ ஆனால் சர்வ வல்லையுள்ள கர்த்தர் இதனைக் கூறுகிறார்:
“எல்லாப் பக்கங்களிலுமிருந்தும் உனக்கு கஷ்டங்களை வரப்பண்ணுவேன்.
நீங்கள் அனவைரும் ஓடுவீர்கள்.
எவராலும் உங்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கமுடியாது.”
௬ “அம்மோனிய ஜனங்கள் கைதிகளாகச் சிறை பிடிக்கப்பட்டு அடிமைத்தனத்திற்குக் கொண்டு போகப்படுவார்கள். ஆனால் நேரம் வரும். அப்போது நான் அம்மோனிய ஜனங்களைத் திரும்பக் கொண்டுவருவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏதோம் பற்றிய செய்தி
௭ இச்செய்தி ஏதோமைப் பற்றியது. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்கிறார்:
“தேமானில் இனி ஞானமில்லையா?
ஏதோமில் உள்ள ஞானிகள் நல்ல ஆலோசனைக் கூற முடிவதில்லையோ?
அவர்கள் தம் ஞானத்தை இழந்துவிட்டார்கள்.
௮ தேதானில் வாழ்கிற ஜனங்களே ஓடிப் போங்கள்!ஒளிந்துக்கொள்ளுங்கள்.
ஏனென்றால், நான் ஏசாவை அவர்களின் தீமைகளுக்குத் தண்டிப்பேன்.
௯ “வேலைக்காரர்கள் திராட்சைக் கொடிகளில் இருந்து திராட்சையைப் பறிக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் கொடியில் சில திராட்சைகளை விட்டுவிடுவார்கள்.
இரவில் திருடர்கள் வந்தால்
அவர்கள் எல்லாவற்றையும் எடுக்கமாட்டார்கள்.
௧௦ நான் ஏசாவிலிருந்து எல்லாவற்றையும் எடுப்பேன்.
நான் அவர்களின் அனைத்து மறைவிடங்களையும் கண்டுக்கொள்வேன்.
அவன் என்னிடமிருந்து ஒளிந்துக்கொள்ள முடியாது.
அவனது பிள்ளைகள், உறவினர்கள், அயலார்கள் அனைவரும் மரிப்பார்கள்.
௧௧ தன் பிள்ளைகளை பராமரிக்க யாரும் இருக்கமாட்டார்கள்.
அவனுடைய மனைவிகள் தாங்கள் சார்ந்திருக்க எவரும் இல்லாதிருப்பார்கள்.”
௧௨ இதுதான் கர்த்தர் சொல்கிறது: “சில ஜனங்கள் தண்டிக்கப்படத்தக்கவர் அல்ல. ஆனால் அவர்கள் துன்புறுகிறார்கள். ஆனால் ஏதோம் நீ தண்டிக்கப்படத் தகுதி உள்ளவன். எனவே, நீ உண்மையாகத் தண்டிக்கப்படுவாய். உனக்கேற்ற தண்டனையிலிருந்து நீ தப்பிக்கமாட்டாய் நீ தண்டிக்கப்படுவாய்.”
௧௩ கர்த்தர் கூறுகிறார், “எனது சொந்த வல்லமையினால், நான் இந்த வாக்குறுதியைச் செய்கிறேன். போஸ்றா பட்டணம் அழியப்போகிறது என்று நான் வாக்குக் கொடுக்கிறேன். அந்த பட்டணம் பாறைக் குவியலாக அழியும். ஜனங்கள் மற்ற நகரங்களுக்கு ஏற்படும் அழிவுகளைப்பற்றி சொல்லும்போது இதனை எடுத்துக்காட்டாகக் கூறுவார்கள். ஜனங்கள் அப்பட்டணத்தை நிந்திப்பார்கள். போஸ்றாவைச் சுற்றியுள்ள அனைத்து பட்டணங்களும் என்றென்றும் அழிக்கப்படும்.”
௧௪ நான் கர்த்தரிடமிருந்து இந்த வார்த்தையைக் கேட்டேன்.
கர்த்தர் நாடுகளுக்கு ஒரு தூதுவனை அனுப்பினார்.
“உங்கள் படைகளை ஒன்று சேருங்கள்! போருக்குத் தயாராகுங்கள்!
ஏதோம் நாட்டிற்கு எதிராகச் செல்லுங்கள்!
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
௧௫ ஏதோமே, நான் உன்னை ஜனங்களுக்குள்ளே முக்கியமற்றவனாகச் செய்வேன்.
ஒவ்வொருவரும் உன்னை வெறுப்பார்கள்.
௧௬ ஏதோமே, நீ மற்ற தேசங்களை பயமுறுத்தினாய்.
எனவே நீ முக்கியமானவன் என்று நினைத்தாய்.
ஆனால் நீ முட்டாளானாய்.
உன் பெருமை உன்னை வஞ்சித்திருக்கிறது.
ஏதோமே, நீ மலைகளின் உச்சியில் இருக்கிறாய்.
நீ பாறைகளும் குன்றுகளும் பாதுகாப்பாக இருக்கிற இடத்தில் இருக்கிறாய்.
ஆனால், நீ உனது வீட்டை கழுகின் கூட்டைப்போன்று உயரத்தில் கட்டினாலும் நான் உன்னைப் பிடிப்பேன்.
நான் உன்னை அங்கிருந்து கீழே கொண்டு வருவேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
௧௭ “ஏதோம் அழிக்கப்படும்.
ஜனங்கள் அழிந்த நகரங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைவார்கள்.
அந்த அழிந்த நகரங்களில் ஜனங்கள் பிரமித்து பிரமிப்பார்கள்.
௧௮ சோதோம் கொமோரா மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களைப்போன்று ஏதோம் அழிக்கப்படும்.
அங்கே ஜனங்கள் எவரும் வாழமாட்டார்கள்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
௧௯ “யோர்தான் ஆற்றின் கரையிலுள்ள அடர்த்தியான புதர்களில் இருந்து சில வேளைகளில் சிங்கம் வரும். ஜனங்கள் தங்கள் ஆடுகளையும் மாடுகளையும் விட்டிருக்கிற வயல்களில் அச்சிங்கம் போகும். நான் அந்தச் சிங்கத்தைப் போன்றிருக்கிறேன். நான் ஏதோமுக்குப் போவேன். நான் அந்த ஜனங்களைப் பயப்படுத்துவேன். அவர்களை ஓடும்படிச்செய்வேன். அவர்களது இளைஞர்கள் யாரும் என்னைத் தடுக்கமுடியாது. எவரும் என்னைப்போல இரார். எவரும் எனக்குச் சவால் விடமுடியாது. அவர்களில் எந்த மேய்ப்பர்களும் (தலைவர்கள்) எனக்கு எதிரே நிற்கமுடியாது.”
௨௦ எனவே, ஏதோம் ஜனங்களுக்கு என்ன செய்ய வேண்டும்
என்று கர்த்தர் திட்டமிட்டுள்ளாரோ அதைக் கவனி!
தீமான் ஜனங்களுக்கு கர்த்தர் என்ன செய்யவேண்டும்
என்று முடிவு செய்தாரோ, அதை கவனி!
ஏதோமின் மந்தையில் (ஜனங்கள்) உள்ள குட்டிகளைப் பகைவர்கள் இழுத்துப் போடுவார்கள்.
ஏதோமின் மேய்ச்சல் நிலம் அவர்கள் என்ன செய்தார்களோ
அதினிமித்தம் வெறுமையாய்விடும்.
௨௧ ஏதோமின் வீழ்ச்சியின் ஓசையில்
பூமி அதிரும்.
அவர்களின் அழுகை
செங்கடல் வழி முழுவதும் கேட்கும்.
௨௨ கர்த்தர், மிருகத்தைத் தாக்கப்போகிற கழுகு மேலே பறப்பதுப்போன்று இருப்பார்.
போஸ்ராவின் மேல் சிறகை விரிக்கிற கழுகைப்போன்று கர்த்தர் இருப்பார்.
அந்நேரத்தில் ஏதோமின் வீரர்கள் மிகவும் அஞ்சுவார்கள்.
குழந்தையைப் பெறுகிற பெண்ணைப்போன்று அவர்கள் பயத்தால் அழுவார்கள்.
தமஸ்குவைப்பற்றியச் செய்தி
௨௩ இச்செய்தி தமஸ்குவைப்பற்றியது:
“ஆமாத், அர்ப்பாத் ஆகிய பட்டணங்கள் அஞ்சுகின்றன.
அவர்கள் பயப்படுகிறார்கள்.
ஏனென்றால், அவர்கள் கெட்டச் செய்திகளைக் கேட்டனர்.
அவர்கள் அதைரியப்படுகிறார்கள்.
அவர்கள் கவலைப்படுகிறார்கள், பயப்படுகிறார்கள்.
௨௪ தமஸ்கு நகரம் பலவீனமாயிற்று.
ஜனங்கள் ஓட விரும்புகின்றனர்.
ஜனங்கள் திகில் அடைய தயாராகின்றனர்.
குழந்தை பெறும் பெண்களைப்போன்று
ஜனங்கள் வலியும் துன்பமும் அடைகின்றனர்.
௨௫ “தமஸ்கு மகிழ்ச்சியுள்ள நகரமாயிருக்கிறது.
ஜனங்கள் அந்த ‘மகிழ்ச்சி நகரை’ இன்னும் விட்டுப் போகவில்லை.
௨௬ எனவே, இளைஞர்கள் நகரின் பொதுச் சதுரங்களில் மரிப்பார்கள்.
அந்த நேரத்தில் அவளது வீரர்கள் எல்லோரும் கொல்லப்படுவார்கள்.”
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
௨௭ “தமஸ்குவின் சுவர்களில் நான் நெருப்பை வைப்பேன்.
அது பெனாதாத்தின் பலமான கோட்டைகளை முழுவதுமாக எரிக்கும்.”
கேதார் மற்றும் காத்சோர் பற்றியச் செய்தி
௨௮ இது கேதார் மற்றும் காத்சோர் கோத்திரத்தை ஆள்வோர்களைப்பற்றிய செய்தி. பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் அவர்களைத் தோற்கடித்தான்.
கர்த்தர் கூறுகிறார்.
“போய் கேதாரின் கோத்திரத்தை தாக்கு.
கிழக்கின் ஜனங்களை அழியுங்கள்.
௨௯ அவர்களின் கூடாரங்களும் மந்தைகளும் எடுக்கப்படும்.
அவர்களின் கூடாரம் மற்றும் அவர்களின் செல்வமெல்லாம் எடுக்கப்படும்.
பகைவர்கள் அவர்களது ஒட்டகங்களை எடுப்பார்கள்.
இதனை ஆண்கள் அவர்களிடம் சத்தமிடுவார்கள்.
‘நம்மைச் சுற்றிலும் பயங்கரமானவை நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
௩௦ வேகமாக ஓடுங்கள்!
காத்சோரின் ஜனங்களே, ஒளிந்துக்கொள்ள நல்ல இடத்தைப் பாருங்கள்’
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
‘நேபுகாத்நேச்சார் உனக்கு எதிராக திட்டமிட்டான்.
உன்னைத் தோற்கடிக்க அவன் ஒரு நல்ல திட்டத்தை நினைத்தான்.’
௩௧ “பாதுகாப்பை உணர்கிற ஒரு தேசம் இருக்கிறது.
அத்தேசம் பாதுகாப்பை உணர்கிறது.
அந்தத் தேசத்திற்கு வாசலோ வேலியோ பாதுகாப்புக்கு இல்லை.
அவற்றின் அருகில் எவரும் இல்லை.
கர்த்தர், ‘அத்தேசத்தைத் தாக்குங்கள்!’ என்றார்.
௩௨ பகைவர்கள் அவர்களின் ஒட்டகங்களைத் திருடுவார்கள்,
அவர்களின் பெரிய மந்தையை எடுத்துக்கொள்வார்கள்.
நான் பூமியின் மூலைகளுக்கு அவர்களை ஓடச் செய்வேன்.
நான் அவர்களுக்குப் பயங்கரமான துன்பங்களை எல்லா பக்கத்திலிருந்தும் கொண்டுவருவேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
௩௩ “ஆசோர் தேசம், காட்டு நாய்கள் மட்டும் வாழத்தக்க இடமாக மாறும்.
அந்த இடத்தில் எவரும் வாழ்வதில்லை.
அது என்றென்றும் காலியான வனாந்தரமாக இருக்கும்.”
ஏலாமைப் பற்றியச் செய்தி
௩௪ யூதாவின் அரசனான சிதேக்கியாவின் ஆட்சியின் ஆரம்ப நாட்களில், தீர்க்கதரிசி எரேமியா கர்த்தரிடமிருந்து ஒரு செய்தியைப் பெற்றான். அச்செய்தி ஏலாம் தேசத்தைப்பற்றியது.
௩௫ சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்.
“நான் விரைவில் ஏலாமின் வில்லை உடைப்பேன்.
வில் ஏலாமின் பலமான ஆயுதம்.
௩௬ நான் ஏலாமிற்கு எதிராக நான்கு காற்றுகளைக் கொண்டு வருவேன்.
நான் அவற்றை வானத்தின் நான்கு மூலைகளில் இருந்தும் கொண்டுவருவேன்.
நான்கு காற்றுகளும் வீசுகிற பூமியின் அனைத்து
இடங்களுக்கும் ஏலாம் ஜனங்களை அனுப்புவேன்.
எல்லா தேசங்களுக்கும் ஏலாமின் கைதிகள் கொண்டுச்செல்லப்படுவார்கள்.
௩௭ நான் ஏலாமை, அவர்களின் பகைவர்கள்
கவனிக்கும்போதே துண்டுகளாக உடைப்பேன்.
அவர்களைக் கொல்ல விரும்பும் ஜனங்களின் முன்னால்
ஏலாமை நான் உடைப்பேன்.
நான் அவர்களுக்குப் பயங்கரமானவற்றைக் கொண்டு வருவேன்.
நான் எவ்வளவு கோபமாக இருக்கிறேன் என்பதைக் காட்டுவேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
“நான் ஏலாமைத் துரத்தும்படி வாளை அனுப்புவேன்.
நான் அவர்கள் அனைவரையும் கொல்லும்வரை அந்த வாள் அவர்களைத் துரத்தும்.
௩௮ நான் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறேன் என்பதை ஏலாமிற்குக் காட்டுவேன்.
நான் அவளது அரசனையும் அவளது அதிகாரிகளையும் அழிப்பேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
௩௯ “ஆனால் எதிர்காலத்தில், நான் ஏலாமிற்கு நன்மை நடக்கும்படிச் செய்வேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.