௧௮
தேசத்தின் பிறபகுதிகளைப் பங்கிடுதல்
௧ சீலோவில் இஸ்ரவேலர் எல்லோரும் ஒன்றாகக் கூடினார்கள், அங்கு ஆசரிப்புக் கூடாரத்தை நிறுவினர். இஸ்ரவேலர் தேசத்தில் ஆட்சி செலுத்தினர். அத்தேசத்தின் பகைவர்களை எல்லாம் அவர்கள் வென்றனர். ௨ அப்போது இஸ்ரவேலின் ஏழு கோத்திரங்கள் இன்னும் தேவன் வாக்களித்த தங்களுக்குரிய நிலத்தின் பாகத்தைப் பெறாமலிருந்தனர்.
௩ எனவே யோசுவா இஸ்ரவேலரை நோக்கி, “நீங்கள் உங்கள் நிலங்களைப் பெற ஏன் இவ்வளவு காலம் காத்திருந்தீர்கள்? உங்கள் பிதாக்களின், தேவனாகிய கர்த்தர், இத்தேசத்தை உங்களுக்குத் தந்தார். ௪ எனவே உங்களில் ஒவ்வொரு கோத்திரத்தினரும் மும்மூன்று ஆட்களைத் தெரிந்துகொள்ளுங்கள் தேசத்தைப் பற்றித் தெரிந்து வருவதற்கு நான் அவர்களை அனுப்புவேன் அவர்கள் திரும்பி வந்து என்னிடம் அந்த தேசத்தை பற்றி விவரிப்பார்கள். ௫ அவர்கள் தேசத்தை ஏழு பாகங்களாகப் பிரிப்பார்கள். யூதாவின் ஜனங்களுக்குத் தெற்கிலுள்ள தேசம் உரியதாகும். யோசேப்பின் ஜனங்கள் வடக்கிலுள்ள தேசத்தை வைத்துக்கொள்வார்கள். ௬ ஆனால் நீங்கள் தேசப்படத்தை வரைந்து அதை ஏழாகப் பிரிக்க வேண்டும். அப்படத்தை என்னிடம் கொண்டு வாருங்கள். எந்தெந்த கோத்திரத்தாருக்கு, எந்தெந்த பகுதி என்பதை நமது தேவனாகிய கர்த்தர் தீர்மானிப்பதற்கு* விட்டுவிடுவோம். ௭ லேவியர் தேசத்தில் எந்தப் பாகத்தையும் பெறவில்லை. கர்த்தருக்கு ஆசாரியர்களாக சேவை செய்வதே அவர்களுக்குரிய பங்காகும். வாக்களிக்கப்பட்ட தேசத்தில் தங்களுக்குரிய பாகத்தை காத், ரூபன் ஆகிய கோத்திரங்களும், மனாசே கோத்திரத்தின் பாதிக் குடும்பங்களும் பெற்றுக்கொண்டனர். யோர்தான் நதியின் கிழக்குப் பகுதியில் அவர்கள் வசித்தனர். கர்த்தருடைய, ஊழியனாகிய மோசே, அவர்களுக்கு அத்தேசத்தைக் கொடுத்திருந்தான்” என்றான்.
௮ தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்கள் தேசத்தைப் பார்க்கவும், பின்னர் அதைப் படமாக வரைந்து யோசுவாவிடம் கொண்டுவரவும் திட்டமிட்டனர். யோசுவா அவர்களை நோக்கி, “போய் தேசத்தை ஆராய்ந்து, அதன் படங்களை வரையுங்கள். பிறகு சீலோவில் என்னிடம் வாருங்கள். பின் சீட்டுப் போட்டு, கர்த்தர் உங்களுக்கான பாகத்தைத் தேர்ந் தெடுக்கும்படியாகச் செய்வேன்” என்றான்.
௯ எனவே அந்த ஆட்கள் தேசத்திற்குள் சென்றார்கள். அவர்கள் தேசத்தைச் சுற்றி ஆராய்ந்து, படங்கள் தயாரித்தனர். அவர்கள் அந்தத் தேசத்தை ஏழு பகுதிகளாகப் பிரித்தனர். அவர்கள் படங்களை வரைந்த பின்னர் சீலோவிற்கு யோசுவாவிடம் திரும்பிச் சென்றனர். ௧௦ சீலோவில் கர்த்தருடைய முன்னிலையில் யோசுவா சீட்டுகளைக் குலுக்கிப் போட்டுத் தேர்ந்தெடுத்தான். இவ்வாறு, யோசுவா தேசத்தைப் பிரித்து ஒவ்வொரு கோத்திரத்தினருக்கும் அவரவருக்குரிய பாகத்தைக் கொடுத்தான்.
பென்யமீனுக்குரிய நிலம்
௧௧ யூதா, யோசேப்பு கோத்திரங்களுக்கு மத்தியிலுள்ள நிலம், பென்யமீன் கோத்திரத்தினருக்குக் கிடைத்தது. பென்யமீன் கோத்திரத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தாரும் தங்களுக்குரிய பங்கைப் பெற்றனர். பென்யமீனுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம் இதுவே: ௧௨ யோர்தான் நதியருகே அதன் வடக்கெல்லை ஆரம்பித்தது. எரிகோவின் வடக்குக் கரையோரமாக எல்லை தொடர்ந்தது. பெத்தாவேனின் கிழக்குப் பகுதிவரைக்கும் அவ்வெல்லை சென்றது. ௧௩ லூசின் (பெத்தேலின்) தெற்கே எல்லை சென்றது. அதரோத் அதார் வரைக்கும் எல்லை தொடர்ந்தது. கீழ்பெத்தொரோனின் தெற்கிலுள்ள மலையின் மேல் அதரோத் அதார் இருந்தது. ௧௪ பெத்தொரோனின் தெற்கிலுள்ள மலையிலிருந்து எல்லை தெற்கே திரும்பி, மலைக்கு மேற்குப்புறமாக சென்றது. கீரியாத் பாகாலுக்கு (கீரியாத் யெயாரீம் என்றும் அழைக்கப்பட்டது.) எல்லை சென்றது. இவ்வூர் யூதா ஜனங்களுக்குச் சொந்தமானது. இது மேற்கெல்லை ஆகும்.
௧௫ தெற்கெல்லை கீரியாத்யெயாரீமுக்கருகே தொடங்கி நெப்தோவா நதிக்குச் சென்றது. ௧௬ ரெபாயீம் பள்ளத்தாக்கின் வடக்கிலிருந்த இன்னோம் பள்ளத்தாக்கிற்கு, அருகேயுள்ள மலைக்குக் கீழே எல்லை நீண்டது. எபூசியின் நகரத்திற்குத் தெற்கே இன்னோம் பள்ளத்தாக்கு வரைக்கும் எல்லை நீண்டது. எபூசியின் நகரத்திற்குத் தெற்கே இன்னோம் பள்ளத்தாக்கு வரைக்கும் எல்லை தொடர்ந்தது. பின் என்ரொகேல் வரை சென்றது. ௧௭ அங்கு, எல்லை வடக்கே திரும்பி என் சேமேசுவரை போனது. கெலிலோத் வரைக்கும் எல்லை தொடர்ந்தது. (மலைத் தொடர்களிலிருந்து அதும்மீம் வழி அருகே கெலிலோத் இருந்தது.) ரூபனின் மகனான போகனுக்காக குறிக்கப்பட்ட “பெருங்கல்” வரைக்கும் எல்லை நீண்டது. ௧௮ பெத்அரபாவின் வடக்குப் பாகம் வரைக்கும் எல்லை சென்றது. பின் எல்லை அராபா வரைக்கும் போயிற்று. ௧௯ பின்பு எல்லை பெத் ஓக்லாவின் வடக்குப் பகுதிவரைக்கும் சென்று சவக் கடலின் வடக்கெல்லையில் முடிவுற்றது. இங்கேதான் யோர்தான் நதி கடலில் சென்று சேர்ந்தது. அதுவே தெற்கெல்லை.
௨௦ யோர்தான் நதி கிழக்கெல்லையாக இருந்தது. இதுவே பென்யமீன் கோத்திரத்தினருக்காக கொடுக்கப்பட்ட நிலமாக இருந்தது. எல்லாப் பக்கத்து எல்லைகளும் அவையே. ௨௧ எல்லாக் குடும்பங்களும் அவற்றிற்குரிய நிலத்தைப் பெற்றன. இவையே அவர்களின் பட்டணங்கள்: எரிகோ, பெத்ஒக்லா, ஏமேக்கேசீஸ், ௨௨ பெத்அரபா, செமாராயிம், பெத்தேல், ௨௩ ஆவீம், பாரா, ஓப்ரா, ௨௪ கேப்பார் அமோனாய், ஓப்னி, காபா ஆகியவை ஆகும். மொத்தம் 12 நகரங்களும் அவற்றைச் சூழ்ந்த வயல்களும் அவர்களுக்கு உரியவையாயின.
௨௫ பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் கிபியோன், ராமா, பேரோத், ௨௬ மிஸ்பே, கெப்பிரா, மோத்சா, ௨௭ ரெக்கேம், இர்பெயேல், தாராலா, ௨௮ சேலா, ஏலேப், எபூசி நகரம் (எருசலேம்), கீபெயாத், கீரேயாத் ஆகியவற்றையும் பெற்றனர். நகரங்களும் அவற்றைச் சூழ்ந்த ஊர்களும் இருந்தன. இவற்றை எல்லாம் பென்யமீன் கோத்திரத்தினர் பெற்றனர்.
* ௧௮:௬ கர்த்தர் தீர்மானிக்க நான் இங்கே கர்த்தருக்கு முன்பாக சீட்டு போட்டு தீர்மானிப்பேன்.