௨௩
யோசுவா ஜனங்களை உற்சாகப்படுத்துதல்
௧ சுற்றிலுமிருந்த எதிரிகளிடமிருந்து கர்த்தர் இஸ்ரவேலருக்கு அமைதியைக் கொடுத்தார். கர்த்தர் இஸ்ரவேலரைப் பாதுகாத்தார். வருடங்கள் கழிந்தன, யோசுவா வயது முதிர்ந்தவனானான்.
௨ அப்போது, எல்லா மூத்த தலைவர்களையும், குடும்பத் தலைவர்களையும், நியாயாதிபதிகளையும், இஸ்ரவேலரின் அதிகாரிகளையும் யோசுவா ஒருங்கே அழைத்தான். அவர்களிடம், “நான் மிகவும் வயது முதிர்ந்தவனானேன்.
௩ நமது பகைவர்களுக்கு கர்த்தர் செய்தவற்றைப் பார்த்திருக்கிறீர்கள். நமக்கு உதவும் பொருட்டு கர்த்தர் இதைச் செய்தார். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காக போர் செய்தார்.
௪ ‘யோர்தான் நதிக்கும், மேற்கில் மத்தியத்தரைக் கடலுக்கும் இடையில் உள்ள இடத்தை உங்கள் ஜனங்கள் பெறமுடியும்’ என்று நான் உங்களுக்குச் சொன்னதை இப்போது நினைவுகூருங்கள். அந்நிலத்தை உங்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்தேன், ஆனால் இதுவரைக்கும் நீங்கள் அதைப் பெறவில்லை.
௫ ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் தமது வாக்குப்படியே அங்கு வசிக்கும் ஜனங்களை அங்கிருந்து வெளியேற்றுவார்! நீங்கள் அவர்கள் தேசத்தை எடுத்துக்கொள்வீர்கள். அங்கு வசிக்கும் ஜனங்களை கர்த்தர் வெளியேறுமாறு கட்டாயப்படுத்துவார். கர்த்தர் இதைச் செய்வதாக உங்களுக்குக் வாக்களித்துள்ளார்.
௬ “கர்த்தர் நமக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிவதற்குக் கவனமாக இருங்கள். மோசேயின் சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றிற்கும் கீழ்ப்படியுங்கள். அச்சட்டத்தை மீறாதீர்கள்.
௭ இஸ்ரவேலரல்லாத ஜனங்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த ஜனங்கள் தமக்குச் சொந்தமான தெய்வங்களையே வழிபடுகின்றனர். அந்த ஜனங்களோடு நட்பு கொள்ளாதீர்கள். அத்தெய்வங்களுக்கு சேவை செய்யவோ, அவற்றை வழிபடவோ வேண்டாம்.
௮ உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தொடர்ந்து பின்பற்றுங்கள். இதையே முன்பும் செய்தீர்கள், இனிமேலும் செய்ய வேண்டும்.
௯ “பெரிய, வல்லமையான தேசங்களை வெல்வதற்கு கர்த்தர் உங்களுக்கு உதவினார். அவர்கள் அங்கிருந்து போகும்படியாக கர்த்தர் துரத்தினார். உங்களைத் தோற்கடிக்க எந்தத் தேசத்தாலும் முடியவில்லை.
௧௦ கர்த்தருடைய உதவியோடு, இஸ்ரவேலரில் ஒருவன் 1,000 பகைவீரர்களை வெல்ல முடிந்தது. ஏனெனில் கர்த்தர் உங்களுக்காகப் போர் செய்கிறார். கர்த்தர் இதைச் செய்வதாக வாக்களித்தார்.
௧௧ எனவே உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தொடர்ந்து நேசியுங்கள்.
௧௨ “கர்த்தரைப் பின்பற்றுவதை நிறுத்தாதீர்ககள். இஸ்ரவேலரல்லாத ஜனங்களோடு நண்பராகாதீர்கள். அவர்களில் யாரையும் மணந்து கொள்ளாதீர்கள். ஒருவேளை அவர்களோடு நீங்கள் நட்பு கொண்டால்,
௧௩ பிறகு பகைவர்களை வெல்லும் முயற்சியில் கர்த்தர் உங்களுக்கு உதவமாட்டார். அந்த ஜனங்கள் உங்களுக்கு கண்ணியாக மாறுவார்கள். அவர்கள் உங்கள் கண்களில் புகையைப் போலவும், தூசியைப் போலவும் அமைந்து வேதனை விளைவிப்பார்கள். நீங்கள் இத்தேசத்தை விட்டுச்செல்ல வற்புறுத்தப்படுவீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு இந்த நல்ல நிலத்தைக் கொடுத்தார். இக்கட்டளைக்குக் கீழ்ப்படியாவிட்டால் நீங்கள் அதை இழக்கக்கூடும்.
௧௪ “இது நான் மரிக்கும் நேரம். கர்த்தர் மிகப் பெரிய காரியங்களைச் செய்தார் என்பதை அறிந்து உண்மையாகவே நம்புகிறீர்கள். தன் வாக்குறுதிகளை அவர் சற்றும்மீறவில்லை. அவர் நமக்கு வாக்களித்த அனைத்தையும் நிறைவேற்றினார்.
௧௫ உங்கள் தேவனாகிய கர்த்தர் நமக்கு வாக்களித்த நல்லவை அனைத்தும் நிறைவேறின, நீங்கள் தவறு செய்தால் உங்களுக்குத் தீமை விளையுமென அவர் உறுதியளித்தார். அவர் உங்களுக்குத் தந்த இத்தேசத்தினின்று உங்களைத் துரத்துவார் எனவும் உறுதியாகக் கூறினார்.
௧௬ உங்கள் தேவனாகிய கர்த்தரோடு செய்த உடன்படிக்கையை நீங்கள் மீறினால் இவ்வாறு நிகழும். நீங்கள் போய், அந்நிய தெய்வங்களை ஆராதித்தால் உங்கள் நிலத்தை இழப்பீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், கர்த்தர் உங்கள் மீது கோபமைடைவார். அப்போது அவர் உங்களுக்குத் தந்த இந்த நல்ல இடத்தைவிட்டு விரைவில் துரத்தப்படுவீர்கள்” என்றான்.