௨
ஆசாரியர்களுக்கான விதிகள்
௧ “ஆசாரியர்களே, இந்த விதி உங்களுக்குரியது. என்னைக் கவனியுங்கள்! நான் சொல்கின்ற வற்றில் கவனம் செலுத்துங்கள்! எனது பேரைக் கனம்பண்ணுங்கள்.
௨ நீங்கள் என் நாமத்தை மதிக்காவிட்டால் பிறகு உங்களுக்குத் தீமை ஏற்படும். நீங்கள் ஆசீர்வாதம் சொல்வீர்கள். ஆனால் அவை சாபங்களாகும். நான் உங்களுக்குத் தீமை ஏற்படும்படிச் செய்வேன். ஏனென்றால் நீங்கள் என் நாமத்திற்கு மரியாதை செய்யவில்லை!” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
௩ “பாருங்கள். நான் உங்கள் சந்ததிகளைத் தண்டிப்பேன். விடுமுறையில் உங்கள் ஆசாரியர்கள் எனக்குப் பலி கொடுக்கிறார்கள். நீங்கள் மரித்த மிருகங்களின் சாணத்தையும் மற்ற பகுதிகளையும் எடுத்து வெளியே எறிகிறீர்கள். நான் அந்தச் சாணத்தை உங்கள் முகத்தில் இறைப்பேன். நீங்கள் அதனோடு வெளியே எறியப்படுவீர்கள்.
௪ பின்னர் நான் ஏன் இந்தக் கட்டளையைக் கொடுத்தேன் என்பதைக் கற்றுக் கொள்வாய். நான் இவற்றை உனக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். லேவியோடு நான் கொண்ட எனது உடன்படிக்கைத் தொடரும்” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
௫ கர்த்தர், “நான் அந்த உடன்படிக்கையை லேவியோடு செய்தேன். நான் அவனுக்கு வாழ்வையும், சமாதானத்தையும் கொடுப்பதாக வாக்குறுதியளித்தேன். நான் அவனுக்கு அவற்றைக் கொடுத்தேன். லேவி என்னை மதித்தான். அவன் எனது நாமத்திற்கு மரியாதைச் செலுத்தினான்.
௬ லேவி சத்திய வேதத்தைப் போதித்தான். அவன் பொய்யானவற்றை போதிக்கவில்லை. லேவி நேர்மையானவன். அவன் சமாதானத்தை நேசித்தான். வேவி என்னைப் பின் தொடர்ந்தான். அநேகர் தங்கள் பாவ வழிகளை விட்டுவிலகச் செய்தான். அவர்களைக் காப்பாற்றினான்.
௭ ஒரு ஆசாரியன் தேவனுடைய போதனைகளை கற்றிருக்கவேண்டும். ஜனங்கள் ஆசாரியனிடம் சென்று தேவனுடைய போதனைகளை கற்றுக்கொள்ளவேண்டும். ஒரு ஆசாரியன் தேவனுடைய தூதுவனாக ஜனங்களுக்கு இருக்க வேண்டும்” என்றார்.
௮ கர்த்தர், “ஆசாரியர்களாகிய நீங்கள் என்னைப் பின்பற்றுவதை நிறுத்தினீர்கள். நீங்கள் பலர் தவறு செய்வதற்காக போதனைகளைப் பயன்படுத்தினீர்கள். நீங்கள் வேவியோடு செய்த உடன்படிக்கையை அழித்தீர்கள்” என்றார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
௯ “நீங்கள் நான் சொன்ன வழியில் வாழவில்லை. நீங்கள் என் போதனைகளை ஜனங்களுக்குப் போதிக்கையில் பட்சபாதம் காண்பித்தீர்கள். எனவே நான் உங்களை முக்கியமற்றவர்களாகச் செய்வேன். ஜனங்கள் உங்களுக்கு மரியாதை செலுத்தமாட்டார்கள்.”
யூதா தேவனுக்கு உண்மையாக இல்லை
௧௦ நாங்கள் அனைவரும் ஒரே தந்தையை (தேவன்) உடையவர்கள். அதே தேவன் எங்கள் ஒவ்வொருவரையும் படைத்தார். எனவே ஜனங்கள் தமது சகோதரர்களை எதற்கு ஏமாற்ற வேண்டும்? அந்த ஜனங்கள் தம் உடன்படிக்கையை மதிக்கவில்லை என்பதை காட்டுகிறார்கள். அவர்கள் நமது முற்பிதாக்கள் தேவனோடு செய்த உடன்படிக்கையை மதிக்கவில்லை.
௧௧ யூதாவின் ஜனங்கள் மற்ற ஜனங்களை ஏமாற்றினார்கள். எருசலேமிலும் இஸ்ரவேலிலும் உள்ள ஜனங்கள் பயங்கரமான காரியங்களைச் செய்தனர். யூதாவிலுள்ள ஜனங்கள் கத்தருடைய பரிசுத்தமான ஆலயத்தை மதிக்கவில்லை. தேவன் அந்த இடத்தை நேசிக்கிறார். யூதாவின் ஜனங்கள் அயல் நாட்டு தேவதைகளை தொழுதிடத் தொடங்கினார்கள்.
௧௨ கர்த்தர் யூதாவின் குடும்பத்திலிருந்து அந்த ஜனங்களை நீக்குவார். அந்த ஜனங்கள் கர்த்தருக்கு அன்பளிப்புகளைக் கொண்டுவரலாம். ஆனால் அது உதவாது.
௧௩ நீங்கள் அழமுடியும். கர்த்தருடைய பலிபீடத்தை கண்ணீரால் மூட முடியும். ஆனால் கர்த்தர் உங்கள் அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளமாட்டார். கர்த்தர் நீங்கள் கொண்டு வருகிற பொருட்களால் திருப்தி அடையமாட்டார்.
௧௪ நீங்கள், “கர்த்தரால் எங்கள் காணிக்கைகள் ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை?” என்று கேட்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் செய்த தீமைகளைக் கர்த்தர் பார்த்தார். அவர் உங்களுக்கு எதிரான சாட்சி. நீங்கள் உங்கள் மனைவியரை ஏமாற்றியதை அவர் பார்த்தார். நீ இளமையாய் இருக்கும்போதே அப்பெண்ணை மணந்துகொண்டிருக்கிறாய். அவள் உனது பெண் சிநேகிதியாய் இருந்தாள். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் ஒப்பந்தம் செய்துக்கொண்டீர்கள். அவள் உனது மனையியானாள். ஆனால் நீ அவளை ஏமாற்றினாய்.
௧௫ தேவன் கணவர்களும் மனைவிகளும் ஒரே உடலாகவும் ஒரே ஆவியாகவும் இருக்க வேண்டுமென விரும்பினர். ஏன்? அதனால்தான் அவர்கள் பரிசுத்தமான குழந்தைகளைப் பெறமுடியும். எனவே அந்த ஆவிக்குரிய கூடி வருதலை பாதுகாத்துக்கொள். உன் மனைவியை நீ ஏமாற்றாதே. அவள் உனது இளமைகாலம் முதற்கொண்டே உன் மனைவியாக இருக்கிறாள்.
௧௬ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், “நான் விவாகரத்தை வெறுக்கிறேன். நான் ஆண்கள் செய்யும் கொடூரங்களை வெறுக்கிறேன். எனவே உன் ஆவிக்குரிய கூடிவருதலை காப்பாற்று. உன் மனைவியை ஏமாற்றாதே” என்று கூறுகிறார்.
நியாயத்தீர்ப்புக்கான சிறப்பான காலம்
௧௭ நீ தவறானவற்றைக் கற்றுத் தந்திருக்கிறாய். அத்தவறான போதனைகள் கர்த்தரை மிகவும் துக்கமடையச் செய்தன. தீயவற்றைச் செய்யும் ஜனங்களை தேவன் விரும்புகிறார் என்று சொன்னீர்கள். அந்த ஜனங்கள் நல்லவர்கள் என்று தேவன் நினைப்பதாய் சொன்னீர்கள். தீயவற்றைச் செய்யும் ஜனங்களை தேவன் தண்டிக்கமாட்டார் என்று சொன்னீர்கள்.