௫
விபச்சாரத்தை விட்டு விலக்கும் ஞானம்
௧ என் மகனே, எனது ஞானமுள்ள போதனையைக் கவனமுடன் கேள். அறிவைப் பற்றிய என் வார்த்தைகளில் கவனம் செலுத்து.
௨ பிறகு ஞானத்தோடு வாழ்வதற்கு நினைவுகொள்வாய். நீ என்ன சொல்வாயோ அதில் கவனமாக இருப்பாய்.
௩ அடுத்தவனின் மனைவியினுடைய வார்த்தைகள் இனிமையாகத் தோன்றலாம். அவளது வார்த்தைகள் இனிப்பாகவும், கவர்ச்சியாகவும் தோன்றலாம்.
௪ ஆனால் முடிவில் அவள் உனக்குக் கசப்பையும் வேதனையுமே தருவாள். அந்த வேதனையானது விஷத்தை போன்று கொடுமையானதாகவும், வாளைப் போன்று கூர்மையானதாகவும் இருக்கும்.
௫ அவளது கால்கள் மரணத்தை நோக்கிப் போகும். அவள் உன்னை நேரடியாகக் கல்லறைக்கே அழைத்துச் செல்வாள்.
௬ அவளைப் பின்பற்றிச் செல்லாதே. அவள் சரியான பாதையைத் தவறிவிட்டவள். அவளுக்கு அதைப்பற்றியும் தெரியாது. எச்சரிக்கையாக இரு. வாழ்வுக்கான வழியை பின்பற்றிச்செல்.
௭ என் பிள்ளைகளே! இப்பொழுது நான் சொல்வதைக் கவனியுங்கள். நான் சொல்லுகின்றவற்றை மறந்துவிடாதீர்கள்.
௮ விபச்சாரம் என்னும் பாவத்தைச் செய்கின்ற பெண்ணிடமிருந்து விலகி நில். அவளது வீட்டுக் கதவின் அருகில் போகாதே.
௯ நீ அவற்றை செய்தால் நீ பெறவேண்டிய மதிப்பை மற்ற ஜனங்கள் பெறுவார்கள். நீ வருடக்கணக்கில் உழைத்துப் பெற்றப் பொருட்களை அந்நியன் ஒருவன் பெறுவான். முடிவில் உன் வாழ்வை இழப்பாய். தீயவர்கள் உன்னிடமிருந்து அதனை எடுத்துக்கொள்வார்கள்.
௧௦ உனக்குத் தெரியாதவர்கள் வந்து உன் செல்வத்தை எடுத்துக்கொள்வார்கள். உனது உழைப்பின் பலனை மற்றவர்கள் அடைவார்கள்.
௧௧ உன் வாழ்வின் முடிவில் நீ உனது செயலைக்குறித்து வருத்தப்படுவாய். உன் வாழ்க்கையை நீயே அழித்துக்கொள்கிறாய். ஆரோக்கியமும் உனக்குச் சொந்தமான அனைத்தும் அழியும்.
௧௨-௧௩ பிறகு நீ, “நான் ஏன் என் பெற்றோர்கள் சொன்னதைக் கேட்காமல் போனேன். என் போதகர்கள் சொன்னதை ஏன் கேட்காமல் போனேன். நான் ஒழுக்கமாய் இருக்க மறுத்தேன். நான் திருத்தப்படமறுத்தேன்.
௧௪ இப்போது ஏறக்குறைய எல்லாவித பிரச்சனைகளிலும் அகப்பட்ட எனக்கு நேர்ந்த அவமானத்தை ஜனங்கள் அனைவரும் பார்க்கின்றனர்” என்று சொல்லுவாய்.
௧௫-௧௬ உன் சொந்த கிணற்றில் ஊறுகிற தண்ணீரை மட்டும் குடி. உனது தண்ணீர் தெருக்களில் வழிந்து ஓடும்படி விட்டுவிடாதே. நீ உன் மனைவியிடம் மட்டும் பாலின உறவு வைத்துக்கொள்ள வேண்டும். உன் சொந்த வீட்டுக்கு வெளியே உள்ள பிள்ளைகளுக்கும் தந்தை ஆகாதே.
௧௭ உனது பிள்ளைகள் உனக்கு மட்டுமே உரியவர்களாக இருக்க வேண்டும். உன் வீட்டுக்கு வெளியே உள்ளவர்களோடு உன் பிள்ளைகளைப் பகிர்ந்துகொள்ளாதே.
௧௮ எனவே உன் சொந்த மனைவியோடு மகிழ்ச்சியாக இரு. நீ இளமையாக இருக்கும்போது மணந்துகொண்ட மனைவியோடு மகிழ்ச்சியாக இரு.
௧௯ அவள் ஒரு அழகான மானைப் போன்றவள். அன்பான பெண்ணாடு போன்றவள். அவளது அன்பால் திருப்தி அடைவாய். அவளது அன்பு உன்னைக் கவரட்டும்.
௨௦ ஆனால் அந்நிய பெண்ணின் கரங்களுள் நீ தடுமாறி விழாதே. இன்னொருவனது மனைவியின் அன்பு உனக்குத் தேவையில்லை.
௨௧ நீ செய்கிற அனைத்தையும் கர்த்தர் தெளிவாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார். நீ எங்கே போகிறாய் என்று கவனிக்கிறார்.
௨௨ கெட்டவர்களின் பாவங்கள் அவர்களைச் சிக்கவைக்கும், அப்பாவங்கள் அவர்களைக் கயிறுகளைப்போன்று கட்டிக்கொள்ளும்.
௨௩ அத்தீயவன் மரித்துப்போவான், ஏனென்றால் ஒழுக்கமாய் இருக்க அவன் மறுத்துவிட்டான். அவன் தன் சொந்த ஆசைகளிலேயே சிக்கி அழிவான்.