௧௨
செமினீத் என்னும் இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்
௧ கர்த்தாவே, என்னைக் காப்பாற்றும்.
நல்லோர் மடிந்துபோயினர்.
பூமியிலுள்ள ஜனங்களிடையே உண்மையான நம்பிக்கையுள்ளோர் எவருமில்லை.
௨ அண்டை வீட்டாரிடம் ஜனங்கள் பொய் பேசுகிறார்கள்.
பொய்களால் அயலானைப் புகழ்ந்து பேசுகிறார்கள்.
௩ பொய் கூறும் நாவைக் கர்த்தர் அறுத்தெறிவார்.
தங்களையே புகழ்வோரின் நாக்குகளைக் கர்த்தர் துண்டித்தெறிவார்.
௪ அந்த ஜனங்கள், “நாங்கள் தக்க பொய்யுரைப்போம் எங்கள் நாக்குகளின் மூலமாக, நாங்கள் பெரியவர்களாவோம்.
யாரும் எங்கள் எஜமானராக இயலாது!” என்கிறார்கள்.
௫ ஆனால் கர்த்தரோ, “தீயோர் ஏழைகளின் பொருள்களைத் திருடுவார்கள்.
உதவியற்ற ஜனங்களின் பொருள்களை அபகரிப்பார்கள்.
களைப்புற்றோரை இப்போது நான் எழுந்து பாதுகாப்பேன்” என்கிறார்.
௬ கர்த்தருடைய சொற்கள் உண்மையும் தூய்மையுமானவை.
நெருப்பில் உருக்கப்பட்ட வெள்ளியைப்போல் அவை தூய்மையானவை.
ஏழுமுறை உருக்கித் தூய்மையாக்கப்பட்ட வெள்ளியைப் போல் அவை தூய்மையானவை.
௭ கர்த்தாவே, உதவியற்ற ஜனங்களைப் பாதுகாத்தருளும்.
இப்போதும் எப்போதும் அவர்களைப் பாதுகாப்பீராக.
௮ அத்தீயோர் முக்கியமானவர்களைப் போன்று நடிப்பார்கள்.
உண்மையில் அவர்கள் போலி நகைகளைப் போன்றவர்கள்.
அவை விலையுயர்ந்ததாய் தோன்றும் ஆனால் அவை மலிவானவை.