௧௧
இஸ்ரவேலர்களுக்கு தாவீது அரசன் ஆகிறான்
௧ இஸ்ரவேலர் அனைவரும் எப்ரோன்
நகரத்தில் தாவீதிடம் வந்தனர். அவர்கள் தாவீதிடம், “நாங்கள் உம்முடைய சொந்த சதையும் இரத்தமுமாய் இருக்கிறோம்.”
௨ முன்பு, போரில் வழிநடத்தினீர். சவுல் அரசனாக இருந்தபோதிலும் நீர் வழி நடத்தினீர். கர்த்தர் உம்மிடம், “தாவீது, நீதான் என் இஸ்ரவேல் ஜனங்களின் மேய்ப்பனாக இருப்பாய், என் ஜனங்களின் தலைவன் ஆவாய் என்று சொன்னார்” என்றார்கள்.
௩ இஸ்ரவேலரின் தலைவர்கள் அனைவரும் எப்ரோன் நகரில் தாவீதிடம் வந்தனர். தாவீது அவர்களிடம் கர்த்தருக்கு முன்பாக எப்ரோனில் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டான். தலைவர்கள் தாவீதுக்கு அபிஷேகம் செய்தனர். அதனால் அவன் இஸ்ரவேலருக்கு அரசன் ஆனான். கர்த்தர் சொன்னபடியே நடந்தது. கர்த்தர் அந்த வாக்குறுதியைக் கூற சாமுவேலைப் பயன்படுத்தினார்.
தாவீது எருசலேமை கைப்பற்றுகிறான்
௪ தாவீதும், இஸ்ரவேல் ஜனங்களும் எருசலேம் நகரத்திற்குச் சென்றனர். அப்போது அந்நகரம் எபூசு என்று அழைக்கப்பட்டது. அங்கு வாழ்ந்த ஜனங்கள் எபூசியர் என அழைக்கப்பட்டனர். நகரத்தில் வாழ்ந்த ஜனங்கள்
௫ தாவீதிடம், “எங்கள் நகருக்குள் நீ நுழைய முடியாது” என்றனர். ஆனால் தாவீது அவர்களைத் தோற்கடித்தான். தாவீது சீயோன் கோட்டையைக் கைப்பற்றினான். அது தாவீதின் நகரமாயிற்று.
௬ தாவீது, “எவனொருவன் எபூசியரோடு போரிட வழிநடத்திச் சென்றானோ அவன் என் படை முழுவதற்கும் தளபதியாவான்” என்றான். எனவே, யோவாப் போருக்கு வழிநடத்தினான். யோவாப், செருயாவின் மகன். யோவாப் படைத் தளபதியானான்.
௭ தாவீது கோட்டைக்குள் தனது வீட்டை அமைத்துக்கொண்டான். அதனால் அது தாவீதின் நகரம் என்ற பெயரைப்பெற்றது.
௮ கோட்டையைச் சுற்றிலும் மில்லோவிலிருந்து சுற்றுச்சுவர்வரைக்கும் தாவீது நகரத்தை நிர்மாணித்தான். நகரத்தின் மற்ற பகுதிகளை யோவாப் பழுதுபார்த்தான்.
௯ தாவீது தொடர்ந்து பெரியவன் ஆனான். சர்வவல்லமையுள்ள கர்த்தர் அவனோடு இருந்தார்.
மூன்று வீரர்கள்
௧௦ தாவீதினுடைய படைவீரர்களின் சிறப்பான தலைவர்கள் பட்டியல் இது. தாவீதின் அரசாங்கத்தில் இவ்வீரர்கள் வல்லமை உடையவர்களாக விளங்கினார்கள். இவர்களும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் அவனுக்கு முழுமையாக உதவி அவனை அரசன் ஆக்கினார்கள். இதுவும் தேவன் சொன்னபடியே ஆயிற்று.
௧௧ இதுதான் தாவீதின் விசேஷ வீரர்களின் விபரம்: அக்மோனியின் மகன் யாஷோபியாம். யாஷோபியாம், இரதப் படைத் தலைவன். இவன் தனது ஈட்டியால் ஒரே நேரத்தில் 300 பேர்களைக் கொன்றுப்போட்டான்.
௧௨ அடுத்து அகோயைச் சேர்ந்த தோதாயின் மகன் எலெயாசார். இவன் மூன்று மாபெரும் வீரர்களில் ஒருவன்.
௧௩ எலெயாசார் தாவீதோடு பாஸ்தம்மீமில் இருந்தான். அங்கு பெலிஸ்தர்கள் போரிடுவதற்காக வந்தனர். அங்கு ஒரு வயல் முழுவதும் பார்லி பயிரிடப்பட்டிருந்தது. இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களுக்குத் தப்பி ஓடினார்கள்.
௧௪ ஆனால் மூன்று வீரர்கள் அங்கே வயலில் நின்று தோற்கடித்தனர். இஸ்ரவேலர்களுக்கு, கர்த்தர் மாபெரும் வெற்றியைக் கொடுத்தார்.
௧௫ ஒருமுறை, தாவீது அதுல்லாம் குகையில் இருந்தான். அப்போது பெலிஸ்தியர் படை ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் முகாமிட்டது. முப்பது வீரர்களில் மூன்று பேர் தரையில் ஊர்ந்துப்போய் குகையில் இருந்த தாவீதை அடைந்தார்கள்.
௧௬ இன்னொருமுறை, தாவீது கோட்டையில் இருந்தான். அப்போது பெலிஸ்தர் படைக்குழு ஒன்று பெத்லெகேமில் இருந்தது.
௧௭ அவனது சொந்த ஊரில் உள்ள தண்ணீர் மீது அவனுக்குத் தாகம் ஏற்பட்டது. எனவே, அவன் “பெத்லேகேம் வாசல் அருகேயுள்ள கிணற்று தண்ணீர் மீது எனக்குத் தாகமாய் உள்ளது. யாராவது ஒருவர் கொண்டுவந்து தரவேண்டும் என விரும்புகிறேன்” என்றான். அவன் உண்மையில் அந்த தண்ணீரின் மீது தாகம் கொள்ளவில்லை. எனினும் அவன் அவ்வாறு பேசிக்கொண்டான்.
௧௮ ஆனால் மூன்று பேரும் பெலிஸ்தரோடு வழியில் போரிட்ட பிறகே உள்ளே நுழைய முடிந்தது. அவர்கள் பெத்லேகேம் வாசல் அருகில் உள்ள கிணற்று தண்ணீரைக் கொண்டுவந்து தாவீதிடம் கொடுத்தனர். தாவீது அதனைக் குடிக்க மறுத்துவிட்டான். அதனை கர்த்தருக்கு காணிக்கையாகத் தரையில் ஊற்றினான்.
௧௯ பிறகு தாவீது, “தேவனே! என்னால் இத்தண்ணீரைக் குடிக்கமுடியாது. தங்கள் உயிரைப் பணயம் வைத்து இவர்கள் இத்தண்ணீரைக் கொண்டுவந்தனர். இதனைக் குடிப்பது இவர்களின் இரத்தத்தைக் குடிப்பது போன்றதாகும்” என்றான். இதற்காகத்தான் தாவீது அந்த தண்ணீரைக் குடிக்க மறுத்தான். இதுபோல பல்வேறு சாகசங்களை மூன்று வீரர்களும் செய்தனர்.
தாவீதின் மற்ற வீரர்கள்
௨௦ மூன்று வீரர்களுக்கும் தலைவனாக அபிசாய் இருந்தான். இவன் யோவாப்பின் சகோதரன். அவன் 300 வீரர்களோடு சண்டையிட்டு தன் ஈட்டியால் அவர்களைக் கொன்றான். மூன்று வீரர்களைப் போன்றே அபிசாயும் பிரபலமாக இருந்தான்.
௨௧ இவன் அவர்களைவிட இரண்டு மடங்கு பிரபலமாக இருந்தான். இவன் அவர்களில் ஒருவனாக இல்லாவிட்டாலும் இவன் அவர்களின் தலைவன் ஆனான்.
௨௨ பெனாயா, யோய்தானின் மகன், யோய்தா ஒரு வல்லமை மிக்கவன். இவன் கப்சேயேல் ஊரான். பெனாயாவும் வல்லமைகொண்டவன். இவன் மோவாபில் உள்ள இருபலம் பொருந்திய மனிதர்களைப் போரிட்டுக் கொன்றான். ஒருமுறை பனி பெய்துகொண்டிருக்கும் சமயத்தில், அவன் ஒரு குகைக்குள்ளே சென்று ஒரு சிங்கத்தைக் கொன்றான்.
௨௩ மேலும் அவன் ஒரு எகிப்திய வீரனையும் கொன்றான். அவன் 71/2 அடி உயரம் உள்ளவன். எகிப்திய வீரனிடம் இருந்த ஈட்டி மிக நீளமாகவும் கனமுள்ளதாகவும் இருந்தது. அது நெய்கிறவனின் படை மரக்கனதிபோல் பெரிதாய் இருந்தது. பெனாயாவிடம் ஒரு தடிமட்டுமே இருந்தது. பெனாயா அவனிடமுள்ள ஈட்டியைப் பிடுங்கி அதனாலேயே அவனைக் கொன்றான்.
௨௪ யோய்தாவின் மகனாகிய பெனாயா இதுபோல் பல வேலைகளைச் செய்தான். பெனாயாவும் மூன்று வீரர்களைப் போன்று பிரபலமாக இருந்தான்.
௨௫ இவன், முப்பது வீரர்களைԔ விடவும் பிரபலமானவன். ஆனாலும் அவன் அம்மூன்று வீரர்களுள் ஒருவன் அல்ல. தாவீது, இவனை மெய்க்காப்பாளர்களின் தலைவனாக ஆக்கினான்.
முப்பது வீரர்கள்
௨௬ முப்பது நாயகர்களானவர்கள்:
ஆசகேல், யோவாபின் சகோதரன்; பெத்லகேமைச் சேர்ந்த தோதோவின் மகனான எல்க்கானான்.
௨௭ ஆரோதியனான சம்மோத், பெலோனியனாகிய ஏலெஸ்,
௨௮ தெக்கோவியனான இக்கேசின் மகன் ஈரா, ஆனதோத்தியனான அபியேசர்,
௨௯ ஊசாத்தியனான சிபெக்காய், ஆகோகியனான ஈலாய்,
௩௦ நெத் தோபாத்தியனான மகராயி, நெத்தோபாத்தியனான பானாவின் மகன் ஏலேத்,
௩௧ பென்யமீன் வம்சத்தானான இபேயா ஊரைச் சேர்ந்த ரிபாயின் மகனான இத்தாயி, பிரத்தோனியனான பெனாய,
௩௨ காகாஸ் நீரோடை நாட்டானான ஊராயி, அர்பாத்தியனான அபியேல்,
௩௩ பகரூமியனான அஸ்மாவேத், சால்போனியனான எலியாபா,
௩௪ கீசோனியனான ஆசேமின் மகன்கள்,
௩௫ ஆராரியனாகிய சாகியின் மகனான யோனத்தான், ஆராரியனாகிய சாக்காரின் மகன் அகியாம், ஊரின் மகன் எலிபால்,
௩௬ மெகராத்தியனான எப்பேர், பெலோனியனான அகியா,
௩௭ கர்மேலியனான எஸ்ரோ, எஸ்பாயின் மகன் நாராயி,
௩௮ நாத்தானின் சகோதரனான யோவேல், அகரியின் மகனான மிப்கார்,
௩௯ அம்மோனியனான சேலேக், செருயாவின் மகனான யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனான நாராயி,
௪௦ இத்தரியனான ஈரா, இத்தாரியனான காரெப்,
௪௧ ஏத்தியனான உரியா, அக்லாயின் மகன் சாபாத்,
௪௨ ரூபனியரின் கோத்திரத்திலிருந்து சீசாவின் மகன் அதினா, அவனோடு சேர்ந்த 30 பேர்,
௪௩ மாகாவின் மகன் ஆனான், மிதினியனான யோசபாத்,
௪௪ அஸ்தரேத்தியனான உசியா, ஆரோவேரியனாகிய ஓத்தாமின் மகன் சமா, யேகியேல்,
௪௫ சிம்ரியின் மகன் எதியாயேல், தித்சியனான அவன் சகோதரன் யோகா,
௪௬ மாகாவியரின் மகன் எலியேல், எல்நாமின் மகன் எலிபாய், யொசவியா, மோவாபியனான இத்மா,
௪௭ மெசோபாயா ஊராராகிய எலியேல், ஓபேது, யாசீயேல் ஆகியோர்.