௧௩
உடன்படிக்கைப் பெட்டியைத் திரும்ப கொண்டுவந்தது
௧ தாவீது தனது படையின் அனைத்து
அதிகாரிகளோடும் பேசினான்.
௨ பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் அழைத்தான். அவன் அவர்களிடம், “இது நல்ல யோசனை என்று நீங்கள் நினைத்தால், கர்த்தருடைய விருப்பமும் இருந்தால், இஸ்ரவேலின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நமது சகோதரர்களுக்குச் செய்தியை அனுப்புவோம். ஆசாரியர்களுக்கும், நகரங்களிலும், வெளி நிலங்களிலும், நமது சகோதரர்களோடு வாழும் லேவியர்களுக்கும் செய்தியை அனுப்புவோம். நம்முடன் வந்து சேர்ந்துகொள்ளும்படி செய்தி அவர்களுக்குச் சொல்லப்படட்டும்.
௩ நமது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை திரும்பவும் எருசலேமுக்குக் கொண்டுவருவோம். சவுல் அரசனாக இருந்தபோது உடன்படிக்கைப் பெட்டியை கொண்டுவர அக்கறை இல்லாமல் இருந்துவிட்டோம்” என்றான்.
௪ எனவே இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் தாவீது சொன்னதை ஒப்புக்கொண்டார்கள். அவர்கள் அனைவரும் இதுவே செய்வதற் கேற்ற சரியான செயல் என்று எண்ணினர்.
௫ எகிப்திலுள்ள சீகோர் ஆறுமுதல் லெபோ ஆமாத்தின் எல்லைவரையுள்ள அனைத்து ஜனங்களையும் தாவீது கூட்டினான். அவர்கள் அனைவரும் உடன்படிக்கைப் பெட்டியை கீரியாத் யாரீமிலிருந்து கொண்டுவருவதற்காகக் கூடினார்கள்.
௬ தாவீதும் அவனோடு இருந்த மற்ற இஸ்ரவேலர்களும் யூதாவிலுள்ள பாலாவிற்குச் சென்றனர். (பாலா என்பது கீரியாத்யாரீமின் இன்னொரு பெயர்) உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துவர அவர்கள் அங்கே போனார்கள். உடன்படிக்கைப் பெட்டி என்பது தேவனாகிய கர்த்தருடைய பெட்டி. அவர் கேருபீன்களுக்கு மேலே அமர்ந்திருக்கிறார். இப்பெட்டி கர்த்தருடைய நாமத்தாலேயே அழைக்கப்படுகிறது.
௭ ஜனங்கள் உடன்படிக்கைப் பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து தூக்கி வந்தனர். அதனைப் புதிய வண்டியில் வைத்தனர். ஊசாவும் அகியாவும் அவ்வண்டியை ஓட்டினார்கள்.
௮ தாவீதும், இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் தேவனுக்கு முன்பாக கொண்டாடினார்கள். அவர்கள் தேவனை புகழ்ந்து பாடினார்கள். அவர்கள் சுரமண்டலங்களையும், மேளங்களையும், கைத்தாளங்களையும், எக்காளங்களையும் இசைத்தனர்.
௯ அவர்கள் கீதோனின் தானியத்தைப் பிரித்தெடுக்கும் களம் வந்தனர். வண்டியை இழுத்து வந்த மாடுகள் இடறின. உடன்படிக்கைப் பெட்டியானது ஏறக்குறைய விழுவது போலானது. ஊசா, அதனை ஒரு கையால் விழாமல் பிடித்துக்கொள்ள கையை நீட்டினான்.
௧௦ ஊசாவின் மேல் கர்த்தருக்கு பெருங் கோபம் உண்டாயிற்று, ஊசா பெட்டியைத் தொட்டதால் கர்த்தர் அவனைக் கொன்றுப்போட்டார். எனவே அவன் தேவனுக்கு முன்னால் மரித்துப் போனான்.
௧௧ தேவன் தனது கோபத்தை ஊசாவின் மேல் காட்டினார். இதனால் தாவீதுக்குக் கோபம் வந்தது. அன்று முதல் இன்றுவரை இந்த இடம் “பேரேஸ் ஊசா” என்றே அழைக்கப்படுகிறது.
௧௨ தாவீது அன்று தேவனுக்குப் பயந்தான். தாவீது, “தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை இங்கு என்னிடம் என்னால் கொண்டுவர முடியாது!” என்றான்.
௧௩ எனவே தாவீது தனது நகரத்திற்கு உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துச் செல்லவில்லை. அவன் உடன்படிக்கைப் பெட்டியை ஓபேத் ஏதோமின் வீட்டில் விட்டுவிட்டுப் போனான். இவன் காத் நகரத்தைச் சேர்ந்தவன்.
௧௪ உடன்படிக்கைப் பெட்டியானது ஓபேத் ஏதோமின் வீட்டில் மூன்று மாதங்களுக்கு இருந்தது. ஓபேத் ஏதோமின் குடும்பத்தையும், அவனுக்குரிய அனைத்தையும் கர்த்தர் ஆசீர்வதித்தார்.