௩௦
எசேக்கியா பஸ்கா கொண்டாடுகிறான்
௧ இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களுக்கு
எசேக்கியா அரசன் செய்திகளை அனுப்பினான். அவன் எப்பிராயீம் மற்றும் மனாசேயின் ஜனங்களுக்கும் கடிதம் எழுதினான். எருசலேமில் உள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்கள் அனைவரையும் எசேக்கியா அழைத்தான். அவன் எல்லா ஜனங்களையும் வந்திருந்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்கா பண்டிகையைக் கொண்டாட அழைத்தான்.
௨ எசேக்கியா அரசன் தனது அனைத்து அதிகாரிகளிடமும் எருசலேமில் உள்ள சபையார்களிடமும் பஸ்காவை இரண்டாம் மாதத்தில் கொண்டாட ஒப்புக்கொண்டான்.
௩ அவர்கள் சரியான வேளையில் பஸ்காவைக் கொண்டாட முடியவில்லை. ஏனென்றால் பரிசுத்த சேவைசெய்வதற்குப் போதுமான ஆசாரியர்கள் தம்மைச் சுத்தப்படுத்திக்கொள்ளவில்லை. எருசலேமில் ஜனங்கள் அனைவரும் ஒன்றாகக் கூடாததும் இன்னொரு காரணமாகும்.
௪ இந்த ஒப்பந்தம் எசேக்கியா அரசனையும் சபையோரையும் திருப்திப்படுத்தியது,
௫ எனவே இஸ்ரவேலில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் பெயர்செபா முதல் தாண் நகரம்வரை இது பற்றி அறிவிப்பு செய்தனர். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்கா பண்டிகை கொண்டாட அனைவரையும் வரும்படி அவர்கள் ஜனங்களிடம் சொன்னார்கள். பஸ்கா பண்டிகையை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்று மோசே சொன்னபடி நீண்ட நாட்களாக பெரும்பகுதி இஸ்ரவேல் ஜனங்கள் கொண்டாடவில்லை.
௬ எனவே தூதுவர்கள் இஸ்ரவேல் மற்றும் யூதா முழுவதும் அரசனின் கடிதத்தைக் கொண்டுபோய் காட்டினார்கள். கடிதத்தில் உள்ள செய்தி இதுதான்:
இஸ்ரவேல் பிள்ளைகளே! ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் இஸ்ரவேல் ஆகியோர் அடிபணிந்த தேவனாகிய கர்த்தரிடம் திரும்புங்கள். பின்னர், அசீரியா அரசர்களிடமிருந்து தப்பி இன்னும் உயிர் வாழ்கிற ஜனங்களாகிய உங்களிடம் தேவன் திரும்பிவருவார்.
௭ உங்கள் தந்தையரைப்போலவும் சகோதரர்களைப் போன்றும் இராதீர்கள். கர்த்தரே அவர்களின் தேவன். ஆனால் அவர்கள் அவருக்கு எதிராகிவிட்டனர். எனவே அவர்களை மற்றவர்கள் வெறுக்கும்படியாகவும் அவர்களுக்கு எதிராகத் தீயவைகளைப் பேசும்படியும் கர்த்தர் செய்தார். இது உண்மை என்பதை உங்கள் சொந்தக் கண்களால் காணலாம்
௮ உங்கள் முற்பிதாக்களைப் போன்று பிடிவாதமாக இருக்காதீர்கள். மனப்பூர்வமான விருப்பத்தோடு கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள். மகா பரிசுத்தமான இடத்திற்கு வாருங்கள். பின்பு மகா பரிசுத்தமான இடத்தைக் (ஆலயத்தை) கர்த்தர் எக்காலத்திற்கும் பரிசுத்தமாக்கியுள்ளார். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு சேவை செய்யுங்கள். பிறகு கர்த்தருடைய அஞ்சத்தக்க கோபம் உங்களைவிட்டு விலகும்
௯ நீங்கள் திரும்பி வந்து கர்த்தருக்கு அடிபணிந்தால் பிறகு உங்கள் உறவினர்களும், பிள்ளைகளும் சிறை பிடித்தவர்களிடம் இருந்து இரக்கத்தைப் பெறுவார்கள். உங்கள் உறவினர்களும், பிள்ளைகளும் இந்த நாட்டிற்கு திரும்பி வருவார்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் அன்பும் இரக்கமும் கொண்டவர். நீங்கள் அவரிடம் திரும்பி வந்தால் அவர் உங்களை விட்டு விலகிப் போகமாட்டார்.
௧௦ தூதுவர்கள் எப்பிராயீம் மனாசே ஆகியவற்றில் உள்ள ஒவ்வொரு நகரங்களுக்கும் சென்றனர். செபுலோன் நாடுவரையுள்ள வழி எங்கும் போயினர். ஆனால் ஜனங்கள் அவர்களைப் பார்த்து சிரித்து கேலிச் செய்தனர்.
௧௧ ஆனால் ஆசேர், மனாசே, செபுலோன் ஆகிய நாடுகளில் சிலர் அவற்றைக் கேட்டுப் பணிவுடன் எருசலேம் சென்றனர்.
௧௨ மேலும், யூதாவில் ஜனங்கள் அரசனுக்கும், அவனது அதிகாரிகளுக்கும் கீழ்ப்படியுமாறு தேவனுடைய வல்லமை ஜனங்களை ஒன்றிணைத்தது. இந்தவிதமாக அவர்கள் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
௧௩ எருசலேமிற்கு ஏராளமான ஜனங்கள் இரண்டாவது மாதத்தில் புளிப்பில்லா அப்பப் பண்டிகையைக் கொண்டாட வந்தார்கள். அது மிகப் பெருங் கூட்டமாக இருந்தது.
௧௪ அவர்கள் அங்குள்ள அந்நிய தெய்வங்களின் பலிபீடங்களை அகற்றினார்கள். அவற்றுக்கான நறுமணப்பொருட்கள் எரிக்கும் பீடங்களையும் அகற்றி அவற்றை கீதரோன் பள்ளத் தாக்கிலே எறிந்தார்கள்.
௧௫ பின்னர் அவர்கள் இரண்டாவது மாதத்தின் 14வது நாளன்று பஸ்காவுக்கான ஆட்டுக்குட்டியை கொன்றார்கள். ஆசாரியரும் லேவியரும் வெட்கப்பட்டனர். தங்களை அவர்கள் பரிசுத்தச் சேவைக்காகத் தயார் செய்துகொண்டனர். ஆசாரியர்களும் லேவியர்களும் தகன பலிகளை கர்த்தருடைய ஆலயத்திற்குள் கொண்டுவந்தனர்.
௧௬ தேவமனிதனாகிய மோசேயின் சட்டம் சொன்னபடி அவர்கள் ஆலயத்தில் தங்களது வழக்கமான இடத்தில் இருந்தார்கள். லேவியர்கள் இரத்தத்தை ஆசாரியர்களிடம் கொடுத்தனர். பிறகு ஆசாரியர்கள் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்தனர்.
௧௭ அக்குழுவில் உள்ள ஏராளமான ஜனங்கள் பரிசுத்த சேவைக்குத் தம்மை தயார் செய்துக்கொள்ளவில்லை. எனவே அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டிகளைக் கொல்ல அனுமதிக்கப்படவில்லை. அதனால் தான் சுத்தமாக இல்லாத ஒவ்வொருவருக்காகவும் லேவியர்கள் பஸ்கா ஆட்டுக் குட்டிகளைக் கொல்வதற்குப் பொறுப்பேற்று, பஸ்கா ஆட்டுக்குட்டிகளைக் கொன்றனர். லேவியர்கள் ஒவ்வொரு ஆட்டுக் குட்டியையும் கர்த்தருக்குப் பரிசத்தப்படுத்தினார்கள்.
௧௮-௧௯ எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் ஆகிய நகரங்களிலுள்ள பெரும்பாலான ஜனங்கள் பஸ்கா பண்டிகையை சரியான வழியில் கொண்டாடத் தம்மைத் தயார் செய்துக்கொள்ளவில்லை. மோசேயின் சட்டம் கூறியபடி அவர்கள் பஸ்காவை முறையாகக் கொண்டாடவில்லை. ஆனால் அவர்களுக்காக எசேக்கியா ஜெபம் செய்தான். எனவே அவன், “தேவனாகிய கர்த்தாவே! நீர் நல்லவர். இந்த ஜனங்கள் உண்மையிலேயே உம்மை சரியாக தொழுதுகொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் தம்மை சட்டப்படி பரிசுத்தப்படுத்திக் கொள்ளவில்லை. தயவுசெய்து அவர்களை மன்னியும். நீர் எங்கள் முற்பிதாக்கள் கீழ்ப்படிந்த தேவன். சிலர் மகா பரிசுத்தமான இடத்திற்குத் தக்கவாறு தம்மை பரிசுத்தப் படுத்திக்கொள்ளாவிட்டாலும் அவர்களை மன்னித்தருளும்” என்று ஜெபித்தான்.
௨௦ எசேக்கியாவின் ஜெபத்தைக் கர்த்தர் கேட்டார். அவர் ஜனங்களை மன்னித்தார்.
௨௧ இஸ்ரவேலின் ஜனங்கள் எருசலேமில் புளிப்பில்லா அப்பப் பண்டிகையை 7 நாட்கள் கொண்டாடினார்கள். அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். லேவியர்களும், ஆசாரியர்களும் தினந்தோறும் கர்த்தரைத் தங்கள் முழுபலத்தோடு போற்றித் துதித்தனர்.
௨௨ எசேக்கியா அரசன், எவ்வாறு கர்த்தருக்குச் சேவைசெய்ய வேண்டும் என்பதை அறிந்த லேவியர்களை உற்சாகப்படுத்தினான். ஜனங்கள் 7 நாட்கள் இப்பண்டிகையைக் கொண்டாடி சமாதானப் பலிகளைக் கொடுத்துவந்தனர். தம் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை அவர்கள் நன்றியுடன் போற்றித்துதித்தார்கள்.
௨௩ அனைத்து ஜனங்களும் இன்னும் 7 நாட்களுக்குத் தங்கிட ஒப்புக்கொண்டனர். அவர்கள் மேலும் 7 நாட்கள் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுவது குறித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
௨௪ எசேக்கியா அரசன் 1,000 காளைகளையும் 7,000 செம்மறி ஆடுகளையும் சபையோருக்குக் கொடுத்து கொன்று உண்ணச் சொன்னான். தலைவர்கள் 1,000 காளைகளையும், 10,000 ஆடுகளையும் சபையோருக்குக் கொடுத்தனர். பல ஆசாரியர்கள் பரிசுத்தச் சேவைசெய்வதற்குத் தம்மைத் தயார் செய்துக்கொண்டனர்.
௨௫ யூதாவின் அனைத்து சபையோர்களும் ஆசாரியர்களும், லேவியர்களும், இஸ்ரவேலில் இருந்து வந்த சபையோர்களும், இஸ்ரவேலிலிருந்து யூதாவிற்குப் பயணிகளாகச் செல்வோரும் மிகவும் மகிழ்ந்தனர்.
௨௬ எனவே எருசலேம் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தது. இஸ்ரவேலின் அரசனான தாவீதின் மகனான சாலொமோனின் காலத்திலிருந்து இதுபோன்ற கொண்டாட்டம் இதுவரை நடந்ததில்லை.
௨௭ ஆசாரியர்களும், லேவியர்களும் எழுந்து நின்று கர்த்தரிடம் ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி வேண்டினார்கள். தேவன் அவற்றைக் கேட்டார். அவர்களின் ஜெபங்கள் கர்த்தருடைய பரிசுத்த வீடான பரலோகத்திற்கு வந்தது.