௮
ஏழாவது முத்திரை
௧ ஆட்டுக்குட்டியானவர் ஏழாவது முத்திரையை உடைத்தார். அப்போது ஏறக்குறைய அரை மணி நேரத்துக்குப் பரலோகம் முழுவதும் அமைதி ஏற்பட்டது.
௨ தேவனுக்கு முன்னர் ஏழு தேவதூதர்கள் நின்றுகொண்டிருப்பதைக் கண்டேன். அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டன.
௩ இன்னொரு தூதன் வந்து பலிபீடத்தின் அருகில் நின்றான். அவன் தூபம் காட்டும் பொற்கலசத்தைப் பிடித்திருந்தான். தேவனுடைய பரிசுத்த மக்களின் பிரார்த்தனைகளோடு பொற்பீடத்தின் மீது எரிக்கும் பொருட்டு அவனிடம் மிகுதியான தூபவர்க்கம் கொடுக்கப்பட்டது.
௪ தூதனின் கையில் உள்ள கலசத்தில் இருந்து தூபப் புகையானது தேவனிடம் சென்றது. அது தேவனுடைய மக்களது பிரார்த்தனைகளோடும் சென்றது.
௫ பின்பு அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்தான். பின்பு அதைப் பலிபீடத்து நெருப்பால் நிரப்பினான். பின் அதனைப் பூமியில் வீசியெறிந்தான். அதன் பிறகு அங்கே மின்னலும், இடியும், வேறு சப்தங்களும், நிலநடுக்கமும் ஏற்பட்டன.
ஏழு தூதர்களும் தம் எக்காளங்களை ஊதுதல்
௬ பிறகு ஏழு தூதர்களும் தம் ஏழு எக்காளங்களையும் ஊதத் தயாரானார்கள்.
௭ முதல் தூதன் தன் எக்காளத்தை ஊதினான். அப்போது இரத்தம் கலந்த கல் மழையும் நெருப்பும் உண்டாகி பூமியிலே விழுந்தன. இதனால் மூன்றில் ஒரு பங்கு பூமியும், மூன்றில் ஒரு பங்கு மரங்களும் எரிந்துபோயின. பசும்புற்களெல்லாம் கரிந்து போயின.
௮ இரண்டாம் தூதன் தன் எக்காளத்தை ஊதினான். அதனால் நெருப்பு பற்றி எரிகின்ற மலை போன்ற ஒன்று கடலில் எறியப்பட்டது. எனவே கடலின் மூன்றில் ஒரு பகுதி இரத்தமாயிற்று.
௯ கடலில் உயிர் வாழ்கின்ற உயிர்களில் மூன்றில் ஒரு பகுதி செத்துப்போனது. கப்பல்களில் மூன்றில் ஒரு பகுதி அழிந்துபோயிற்று.
௧௦ மூன்றாம் தூதன் தன் எக்காளத்தை ஊதினான். பிறகு வானில் உள்ள ஒரு பெரிய நட்சத்திரம் தீப்பந்தம்போல எரிந்து விழுந்தது. அது ஆறுகளில் மூன்றில் ஒரு பகுதி மீதும் நீரூற்றுகளின் மீதும் விழுந்தது.
௧௧ அந்த நட்சத்திரத்தின் பெயர் எட்டி. அதனால் தண்ணீரில் மூன்றில் ஒரு பகுதி எட்டியைப் போன்று கசப்பாயிற்று. அவற்றைக் குடித்த ஏராளமான மக்கள் இறந்துபோயினர்.
௧௨ நான்காம் தூதன் தன் எக்காளத்தை எடுத்து ஊதினான். அதனால் மூன்றில் ஒரு பகுதியான சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் சேதப்பட்டன. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு இருண்டது. இரவிலும், பகலிலும் மூன்றில் ஒரு பாகம் வெளிச்சம் இல்லாமல் போனது.
௧௩ நான் கவனித்துக்கொண்டிருக்கும் போது வானில் பறந்துகொண்டிருந்த ஒரு கழுகின் சத்தத்தைக் கேட்டேன். அது உரத்த குரலில், “ஆபத்து, ஆபத்து, பூமியில் உயிருடன் வாழ்பவர்களுக்கு ஆபத்து. எஞ்சிய மற்ற மூன்று தேவதூதர்கள் தம் எக்காளங்களை ஊதும்போது ஆபத்து நேரும்” என்றது.