௨
ஆணுக்கும் பெண்ணுக்கும் சில விதிமுறைகள்
௧ எல்லாருக்குமாக பிரார்த்தனை செய்யுங்கள் என்று முதலில் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். எல்லாரையும் பற்றி தேவனிடம் பேசுங்கள். அவர்களுக்குத் தேவையானவற்றைப்பற்றிக் கேளுங்கள். அவரிடம் நன்றியுணர்வுடன் இருங்கள்.
௨ அரசர்களுக்காகவும், அதிகாரம் உள்ளவர்களுக்காகவும் நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். முழுக்க முழுக்க சேவையும், தேவனைக் குறித்த மரியாதையும் அமைதியும் சமாதானமும் உள்ள வாழ்வை நாம் பெறும்பொருட்டு அத்தலைவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்.
௩ இது நன்று. நம் மீட்பரான தேவனுக்கு இது மிகவும் விருப்பமானது.
௪ அனைத்து மக்களும் மீட்கப்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அனைத்து மக்களும் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் தேவன் ஆசைப்படுகிறார்.
௫ ஒரே ஒரு தேவனே இருக்கிறார். மனிதர்கள் தேவனை அடைவதற்கும் ஒரே ஒரு வழிதான் உள்ளது. அவ்வழி மனிதனாகப் பிறந்த கிறிஸ்துவாகிய இயேசுவின் மூலம் உருவாகிறது.
௬ அனைத்து மக்களின் பாவங்களுக்காகவும் அவர் தன்னையே தந்துவிட்டார். தேவன் எல்லாரையும் மீட்க விரும்புகிறார் என்பதற்கு இயேசுவே சாட்சி. அவர் சரியான நேரத்தில் வந்தார்.
௭ அதனால்தான் நற்செய்தியைப் பரப்புவதற்காக, நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதனால் தான் நான் அப்போஸ்தலானாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். (நான் உண்மையைத் தான் சொல்கிறேன். பொய் சொல்லவில்லை) யூதர் அல்லாதவர்களுக்கான போதகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் அவர்கள் விசுவாசம் கொள்ளவும், உண்மையை அறிந்துகொள்ளவும் போதிக்கிறேன்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் விசேஷ விதிமுறைகள்
௮ ஆண்கள் எல்லா இடத்திலும் பிரார்த்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன். கைகளை உயர்த்தி ஜெபம் செய்யும் இவர்கள் தூய்மையானவர்களாக இருக்கவேண்டும். இவர்கள் கோபமும், தர்க்கமும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.
௯ பெண்கள் தமக்குப் பொருத்தமான ஆடைகளை அணியவேண்டுமென்று விரும்புகிறேன். மரியாதைக்குரிய விதத்தில் அவர்கள் ஆடைகள் இருக்கவேண்டும். எளிமையாகவும், சரியான சிந்தனை உடையவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும். அவர்கள் நவநாகரீகமான தலையலங்காரமும், பொன், முத்து நகையலங்காரங்களும், விலையுயர்ந்த ஆடை அலங்காரங்களும் இல்லாமல் இருப்பார்களாக.
௧௦ ஆனால், அவர்கள் அழகானவர்களாகத் தோன்ற நற்செயல்களைச் செய்ய வேண்டும். தேவனை வழிபடுகிற பெண்கள் அவ்விதத்திலேயே தங்களை அலங்கரித்துக்கொள்ள வேண்டும்.
௧௧ பெண்கள் எல்லாவற்றிலும் அடக்கம் உடையவராய் இருந்து அமைதியோடு கற்றுக்கொள்ள வேண்டும்.
௧௨ ஆணுக்கு ஒரு பெண் கற்பிக்க நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். அதோடு ஆண் மீது ஒரு பெண் அதிகாரம் செலுத்தவும் நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். பெண்கள் தொடர்ந்து எப்போதும் அமைதியாக இருக்கவேண்டும்.
௧௩ ஏனெனில் ஆதாமே முதலில் படைக்கப்பட்டான். ஏவாள் பிறகு தான் படைக்கப்பட்டாள்.
௧௪ அதோடு, சாத்தானின் தந்திரத்துக்குள் ஆதாம் அகப்படவில்லை. பெண் தான் முதலில் தந்திரத்துக்குள் சிக்கி பாவியானாள்.
௧௫ தொடர்ந்து விசுவாசமும் அன்பும் புனிதமும் கொண்டு நல்ல வழியில் கட்டுப்பாட்டோடு பெண்கள் நடந்துகொண்டால், அவர்கள் தம் பிள்ளைப் பேற்றின் மூலம் இரட்சிக்கப்படுவார்கள்.