தீமோத்தேயுவுக்கு
எழுதிய இரண்டாம் கடிதம்
௧
௧ இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனான பவுல் எழுதுவது: தேவனின் விருப்பப்படியே நான் அப்போஸ்தலனானேன். கிறிஸ்து இயேசுவிலுள்ள வாழ்க்கையின் வாக்குறுதியைப் பற்றி மக்களிடம் கூறுமாறு தேவன் என்னை அனுப்பினார்.
௨ தீமோத்தேயுவே! நீ எனக்குப் பிரியமுள்ள மகனைப் போன்றவன். கிருபை, இரக்கம், சமாதானம் ஆகியவற்றை நீ பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் பெறுவாய் என்று நம்புகிறேன்.
நன்றி செலுத்துதலும் உற்சாகமூட்டுதலும்
௩ இரவிலும் பகலிலும் என் பிரார்த்தனைகளில் உன்னை எப்பொழுதும் நினைத்துக்கொள்ளுகிறேன். என்னுடைய முன்னோர் சேவை செய்த தேவன் அவரே. நான் உனக்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நான் அறிந்த அளவில் சரியானதை மட்டுமே செய்கிறேன்.
௪ நீ எனக்காக சிந்திய கண்ணீர்த் துளிகளை நான் நினைத்துப் பார்க்கிறேன். நான் உன்னைக் காண மிகவும் விரும்புகிறேன். அதனால் நான் முழு மகிழ்ச்சியை அடைய முடியும்.
௫ நான் உனது உண்மையான விசுவாசத்தை நினைத்துப் பார்க்கிறேன். அத்தகைய விசுவாசம் முதலில் உன் பாட்டியான லோவிசாளுக்கும் உன் தாயான ஐனிக்கேயாளுக்கும் இருந்தது. அவர்களைப் போன்றே உனக்கும் விசுவாசம் இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன்.
௬ ஆகவேதான், தேவன் உனக்குக் கொடுத்த வரத்தை நீ நினைத்துப் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறேன். நான் எனது கையை உன் மேல் வைத்தபோதுதான் தேவன் அந்த வரத்தைக் கொடுத்தார். இப்பொழுது அந்த வரத்தைப் பயன்படுத்த வேண்டும். அது சிறு தீப்பொறி எரிந்து பெருநெருப்பாவதுபோல வளரவேண்டும் என விரும்புகிறேன்.
௭ அச்சத்தின் ஆவியை தேவன் நமக்குத் தராமல், சக்தியும், அன்பும், சுயக்கட்டுப்பாடும் உள்ள ஆவியையே தந்திருக்கிறார்.
௮ எனவே கர்த்தராகிய இயேசுவைப் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்ல வெட்கப்பட வேண்டாம். என்னைக் குறித்தும், நான் கர்த்தருக்காகச் சிறையில் இருப்பது குறித்தும் வெட்கப்பட வேண்டாம். ஆனால் நற்செய்திக்காக என்னோடு துன்பத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அதற்கான பலத்தை தேவன் தருகிறார்.
௯ தேவன் நம்மைக் காத்து தனது பரிசுத்த மக்களாக்கினார். இது நமது முயற்சியால் நிகழ்வதன்று. இது தேவனால் ஆவது. தம் கிருபையால் நம்மை அழைப்பது அவரது திட்டமாக இருந்தது. அவர் தனது கிருபையை இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே படைப்பு காலத்திற்கு முன்பிருந்தே வழங்குகிறார்.
௧௦ அக்கிருபை நமக்குத் தெளிவானது. நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து வந்தபோதுதான் அக்கிருபை நமக்குப் புலப்படுத்தப்பட்டது. இயேசு மரணத்தை அழித்து நமக்கெல்லாம் நித்திய வாழ்வுக்குரிய வழியைக் காட்டினார். நற்செய்தியின் மூலமாகவே நமக்கு அவர் நித்திய வாழ்வைப் பெறுவதற்கான வழியைக் காட்டினார்.
௧௧ அந்த நற்செய்தியைச் சொல்வதற்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். நான் அவரது அப்போஸ்தலனாகவும், நற்செய்திக்கான போதகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
௧௨ நற்செய்தியைப் பரப்பிக்கொண்டிருப்பதால் இப்போது துன் பப்படுத்தப்படுகிறேன். இதற்காக நான் வெட்கப்படவில்லை. நான் நம்புகிற இயேசுவைப்பற்றி எனக்குத் தெரியும். என்னிடத்தில் நம்பி ஒப்படைத்தவற்றை அந்த நாள்வரைக்கும் காத்துக்கொள்ளும் வல்லமை இயேசுவுக்கு உண்டு. இதனை நான் உறுதியாக நம்புகிறேன்.
௧௩ என்னிடமிருந்து நீங்கள் கேட்ட உண்மையான போதனைகளைப் பின்பற்றுங்கள். கிறிஸ்து இயேசுவுக்குள் அன்பும் விசுவாசமும் கொண்டு அப்போதனைகளைப் பின்பற்றுங்கள். அப்போதனைகள் நீங்கள் போதிக்க வேண்டியவற்றைப் பற்றி உங்களுக்குச் சான்றாகக் காட்டும்.
௧௪ உங்களிடம் கொடுக்கப்பட்ட உண்மைகளைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவர் நம்மில் இருக்கிறார். அவர் அவ்வுண்மைகளைப் பாதுகாக்க உதவுவார்.
௧௫ ஆசிய நாடுகளில் உள்ள பலர் என்னை விட்டு விலகிவிட்டார்கள் என்பதை நீ அறிவாய். பிகெல்லும் எர்மொகெனேயும் கூட என்னைவிட்டு விலகிவிட்டனர்.
௧௬ கர்த்தரானவர் ஒநேசிப்போருவின் வீட்டாருக்குக் கிருபை காட்டும்படி நான் பிரார்த்தனை செய்கிறேன். பலமுறை அவன் எனக்கு உதவியிருக்கிறான். நான் சிறையில் இருந்தது பற்றி அவன் வெட்கப்படவில்லை.
௧௭ அவன் ரோமுக்கு வந்தபோது என்னைக் காணும் பொருட்டு பல இடங்களில் கடைசி வரைக்கும் தேடியிருக்கிறான்.
௧௮ ஒநேசிப்போரு அந்த நாளில் கர்த்தரிடமிருந்து கிருபை பெறவேண்டும் என்று நான் கர்த்தரிடம் வேண்டுகிறேன். எபேசு நகரில் அவன் எவ்வகையில் உதவியிருக்கிறான் என்று உனக்கு நன்றாகவே தெரியும்.