௧௦
கர்த்தருடைய வாக்குறுதிகள்
௧ மழைக்காலத்தில் மழைக்காகக் கர்த்தரிடம் ஜெபம் செய். கர்த்தர் மின்னலை அனுப்புவார், மழை விழும். ஒவ்வொருவரின் வயலிலும் தேவன் செடிகளை வளரச் செய்வார்.
௨ ஜனங்கள், தங்கள் சிறிய சிலைகளையும், மந்திரத்தையும் பயன்படுத்தி வருங்காலத்தை அறிந்துக்கொள்ள முயல்வார்கள். ஆனால் அவை பயனற்றதாகும். அந்த ஜனங்கள் தரிசனங்களைப் பார்த்து, அவர்கள் கனவுகளைப்பற்றி சொல்வார்கள். ஆனால் இது வீணானது. அவைகள் பொய்கள். எனவே ஜனங்கள் உதவிக்காக அங்கும் இங்கும் அலைந்து ஆடுகளைப்போல் கதறுவார்கள். ஆனால் அவர்களை வழிகாட்டி அழைத்துச் செல்ல மேய்ப்பன் எவரும் இருக்கமாட்டார்கள்.
௩ கர்த்தர் கூறுகிறார்: “நான் மேய்ப்பர்கள் மீது (தலைவர்கள்) கோபமாக இருக்கிறேன். எனது ஆடுகளுக்கு (ஜனங்கள்) என்ன நிகழ்கிறதோ அவற்றுக்கு அத்தலைவர்களைப் பொறுப்பாளர்களாக ஆக்கினேன்.” (யூதாவின் ஜனங்கள் தேவனுடைய மந்தை. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் உண்மையிலேயே தமது மந்தையைப்பற்றி அக்கறை கொள்வார். ஒரு போர்வீரன் தனது அழகிய போர்க்குதிரையைக் காப்பது போன்று அவர் காப்பார்.)
௪ “யூதாவிலிருந்து மூலைக்கல், கூடார முனை, போர்வில் முன்னேறும் வீரர்கள் எல்லாம் சேர்ந்து வரும்.
௫ அவர்கள் தம் பகைவரை வெல்வார்கள். இது வீரர்கள், தெருவில் உள்ள சேற்றில் செல்வது போல் இருக்கும். அவர்கள் போரிடுவார்கள். கர்த்தர் அவர்களோடு இருக்கும்வரை அவர்கள் குதிரை வீரர்களைக் கூடத் தோற்கடிப்பார்கள்.
௬ நான் யூதாவின் குடும்பத்தை வலிமை உள்ளவர்களாக்குவேன். போரில் யோசேப்பிற்கு வெற்றிப் பெற நான் உதவுவேன். நான் அவர்களைப் பாதுகாப்போடு திரும்பக் கொண்டு வருவேன். நான் அவர்களை ஆறுதல்படுத்துவேன், இது நான் அவர்களை என்றும் புறம்பாக்கிவிடாமல் இருப்பவர்களைப்போல் இருப்பார்கள். நான் அவர்களின் தேவனாகிய கர்த்தர். நான் அவர்களுக்கு உதவுவேன்.
௭ எப்பிராயீமின் ஜனங்கள் அளவுக்கு மீறி மதுபானம் குடித்த வீரர்களைப்போன்று மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களது குழந்தைகளும் கூட மகிழுவார்கள். அவர்கள் இதயம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியடையும்.
௮ “நான் அவர்களைப் பார்த்து பரிகசிப்பேன். நான் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பேன். நான் உண்மையாக அவர்களைக் காப்பாற்றுவேன். அங்கே ஏராளமான ஜனங்கள் இருப்பார்கள்.
௯ ஆம், நான் எனது ஜனங்களை நாடுகள் முழுவதும் சிதறடித்திருக்கிறேன். ஆனால் அத்தொலை நாடுகளிலிருந்து அவர்கள் என்னை நினைவுகூருவார்கள். அவர்களும் அவர்களது பிள்ளைகளும் வாழுவார்கள். அவர்கள் திரும்ப வருவார்கள்.
௧௦ நான் எகிப்திலிருந்தும், அசீரியாவிலிருந்தும் அவர்களை மீண்டும் அழைத்து வருவேன். நான் அவர்களை கீலேயாத் பகுதிக்கு கொண்டு வருவேன். அவர்களுக்கு இடம் போதாமல் போவதால், நான் அவர்களை அருகிலுள்ள லீபனோனிலும் வாழச் செய்வேன்.
௧௧ தேவன் முன்பு அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தபோது இருந்ததுபோல் இருக்கும். அவர் கடலின் அலைகளை அடிப்பார். கடல் பிளக்கும், ஜனங்கள் துன்பக்கடலை நடந்து கடப்பார்கள். கர்த்தர் நதியின் ஓடைகளை வறண்டு போகச் செய்வார். அவர் அசீரியாவின் கர்வத்தையும், எகிப்தின் அதிகாரத்தையும் அழிப்பார்.
௧௨ கர்த்தர் தமது ஜனங்களைப் பலமுள்ளவராகச் செய்வார். அவர்கள் அவருக்காக அவரது நாமத்தில் வாழ்வார்கள்.” கர்த்தர் இவற்றைச் சொன்னார்.