௭
கர்த்தர் இரக்கத்தையும் கருணையையும் விரும்புகிறார்
௧ தரியுவின் நான்காவது ஆட்சியாண்டில் கர்த்தரிடமிருந்து சகரியாவுக்கு ஒரு செய்தி வந்தது. இது ஒன்பதாவது மாதத்தின் நான்காம் நாள். (அது கிஸ்லே எனப்படும்)
௨ பெத்தேல் ஜனங்கள் சரேத்சேரையும், ரெகெம்மெலேகும், அவனது ஆட்களையும் சில கேள்விகள் கேட்க கர்த்தரிடம் அனுப்பினார்கள்.
௩ அவர்கள் தீர்க்கதரிசிகளிடமும், சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள ஆசாரியர்களிடமும் சென்றனர். அம்மனிதர்கள் அவர்களிடம் இந்த கேள்வியைக் கேட்டனர்: “பல ஆண்டுகளாக ஆலயத்தின் அழிவுக்காக நாங்கள் துக்கம் கொண்டோம். ஒவ்வொரு ஆண்டின் ஐந்தாவது மாதத்திலும்நாங்கள் அழுவதற்கும், உபவாசிப்பதற்கும் தனியான காலத்தை நியமித்திருந்தோம். நாங்கள் இதனைத் தொடரவேண்டுமா?”
௪ நான் சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து இந்தச் செய்தியைப் பெற்றேன்
௫ “ஆசாரியர்களுக்கும் இந்த நாட்டிலுள்ள பிறருக்கும் இதனைக் கூறு. நீங்கள் ஐந்தாவது மாதத்திலும், ஏழாவது மாதத்திலும், உபவாசம் இருந்து 70 வருடங்கள் உங்கள் துக்கத்தைக் காட்டினீர்கள். ஆனால் அந்த உபவாசம் எனக்காகவா?
௬ இல்லை. நீங்கள் உண்ணுவதும், குடிப்பதும் எனக்காகவா? இல்லை. இது உங்கள் சொந்த நலனுக்காக.
௭ தேவன் முற்கால தீர்க்கதரிசிகளைக் கெண்டு இதே செய்தியைச் சொல்லியிருக்கிறார். எருசலேம் ஒரு வளமான நகரமாக ஜனங்களால் நிறைந்திருந்தபோது அவர் இவற்றைச் சொன்னார். எருசலேமைச் சுற்றியுள்ள நகரங்களிலும் நெகேவ், மேற்கத்திய மலை அடிவாரங்களிலும் ஜனங்கள் வாழ்ந்த காலத்தில் தேவன் இவற்றைச் சொன்னார்.”
௮ இதுதான் சகரியாவுக்கான கர்த்தருடைய செய்தி.
௯ சர்வ வல்லமையுள்ள கர்த்தர்,
“எது நன்மையும் நேர்மையும் கொண்டதோ அவற்றை நீ செய்ய வேண்டும்.
நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையும் இரக்கமும் கொள்ளவேண்டும்.
௧௦ விதவைகளையும், அநாதைகளையும்,
அயல் நாட்டாரையும், ஏழைகளையும் துன்புறுத்தாதேயுங்கள்.
ஒருவருக்கொருவர் தீமைச் செய்ய எண்ணவும் வேண்டாம்!” என்றார்.
௧௧ ஆனால் அந்த ஜனங்கள் கேட்க மறுத்தனர்.
அவர்கள் அவர் விரும்பியதை செய்ய மறுத்தனர்.
அவர்கள் தங்கள் காதுகளை மூடினார்கள்.
எனவே, தேவன் என்ன சொல்கிறார் என்பதை கேட்க முடியவில்லை.
௧௨ அவர்கள் மிகவும் கடின மனமுடையவர்கள்.
அவர்கள் சட்டங்களுக்கு அடிபணிவதில்லை.
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தனது ஆவியைக்கொண்டு
தனது ஜனங்களுக்குத் தீர்க்கதரிசிகள் மூலமாக செய்திகளை அனுப்பினார்.
ஆனால் ஜனங்கள் கேட்கவில்லை.
எனவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் மிகவும் கோபமுற்றார்.
௧௩ ஆகவே சர்வ வல்லமையுள்ள கர்த்தர்,
“நான் அவர்களைக் கூப்பிட்டேன்.
அவர்கள் பதில் சொல்லவில்லை.
இப்பொழுது அவர்கள் என்னைக் கூப்பிட்டால்,
நான் பதில் சொல்லமாட்டேன்.
௧௪ நான் மற்ற நாடுகளை, ஒரு புயலைப்போன்று அவர்களுக்கு எதிராகக் கொண்டுவருவேன்.
அவர்கள் அந்த நாடுகளை அறியமாட்டார்கள்.
ஆனால், இந்த நாடு பிற நாடுகள் வந்து போன பிறகு அழிக்கப்படும்.
இந்த செழிப்பான நாடு அழிக்கப்படும்” என்றார்.