எஸ்தர்
ஆசிரியர்
இந்த புத்தத்தின் ஆசிரியர் யூதனாயும் பெர்சியா இராஜ்ஜியத்தின் அரண்மனையின் காரியங்களை அறிந்தவனாயும் இருந்தான். அரண்மனையின் காரியங்கள், பாரம்பரியங்கள், நிகழ்ச்சிகளை தன் கண்களால் கண்டவனால் எழுதப்பட்டது. செருபாபேல் தலைமையில் யூதா தேசத்திற்கு திரும்பி வந்தவர்களுக்கு எழுதப்பட்டது என்று வேத வல்லுனர்கள் நம்புகிறார்கள். சிலர் மொர்தெகாய் தான் இதன் ஆசிரியர் என்கிறார்கள். சிலர் மற்றவர்கள் என்று சொல்கிறார்கள்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு 464 க்கும் 331 கிமு. க்கும். இடையில் எழுதப்பட்டது. இந்த சரித்திர கதை பெர்சியாவின் இராஜாவாகிய அகாஸ்வேருவின் காலத்தில்.
தலைநகரமான சூசானின் அரண்மனையில் நடந்தது.
யாருக்காக எழுதப்பட்டது
பூரிம் பண்டிகை ஆரம்பமானக் காரணத்தை யூத ஜனங்கள் அறிந்துக் கொள்ள இந்த எஸ்தர் புத்தகம் எழுதப்பட்டது. எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் எப்படி மீட்பு அடைந்தார்களோ அதே மாதிரி இந்த பண்டிகை யூதர்களின் அழிவிலிருந்து இரட்சிக்கப்பட்டதைக் குறித்து ஞாபகப்படுத்தப்பட வருடம்தோறும் கொண்டாடப்படுகிறது.
எழுதப்பட்ட நோக்கம்
தேவன் மனிதர்களின் சித்தத்தை மாற்றி, வெறுப்புகளை நொறுக்கி, ஆபத்துக்காலத்தில் மனிதர்கள் மத்தியில் கிரியை செய்து உதுவுகிறார் என்பதை காட்டுகிறது. தம்முடைய ஜனங்கள் மத்தியில் தேவன் கிரியை செய்கிறார் என்று காண்பிக்கிறது. தம்முடைய தெய்வீக திட்டங்களை நிறைவேற்ற மனிதனுடைய தீர்மானங்களையும், செயல்களையும் உபயோகப்படுத்துவது போல் எஸ்தரின் வாழ்க்கை சூழ்நிலைகளை உபயோகப்படுத்திக்கொண்டார். பூரிம் பண்டிகை ஸ்தாபிக்கப்பட்டதை எஸ்தர் புத்தகம் பதிவு செய்கிறது. இன்றைய காலத்திலும் யூதர்கள் பூரிம் பண்டிகை நாட்களில் எஸ்தர் புத்தகத்தை வாசிக்கிறார்கள்.
மையக் கருத்து
மாறாட்டம்/ தவறான போக்கு
பொருளடக்கம்
1 எஸ்தர் இராணியாக தெரிந்தெடுக்கப்படுகிறாள் — 1:1-2:23
2 தேவ ஜனங்களுக்கு வந்த பேராபத்து — 3:1-15
3 எஸ்தரும் மொர்தெகாயும் எடுத்த நடவடிக்கைகள் — 4:1-5:14
4 மரண ஆபத்திலிருந்து யூதர்களுக்கு விடுதலை — 6:1-10:3
அத்தியாயம் 1
ராணியாகிய வஸ்தி பதவியிழத்தல்
இந்திய தேசம் முதல் கூஷ் *தேசம்வரையுள்ள 127 நாடுகளையும் அரசாட்சி செய்த அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது: ராஜாவாகிய அகாஸ்வேரு சூசான் அரண்மனையில் இருக்கிற தன்னுடைய ராஜ்ஜியத்தின் சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருந்தான். அவனுடைய அரசாட்சியின் மூன்றாம் வருடத்திலே தன்னுடைய அதிகாரிகளுக்கும் வேலைக்காரர்களுக்கும் விருந்தளித்தான்; அப்பொழுது பெர்சியா மேதியா தேசங்களிலுள்ள மகத்தானவர்களும், நாடுகளின் ஆளுனர்களும், பிரபுக்களும், அவனுடைய சமுகத்தில் வந்திருந்தார்கள். அவன் தன்னுடைய ராஜ்ஜியத்தின் மகிமையான ஐசுவரியத்தையும், தன்னுடைய மகத்துவத்தின் மகிமையான பெருமைகளையும் 180 நாட்கள்வரையும் காண்பித்துக்கொண்டிருந்தான். அந்த நாட்கள் முடிந்தபோது, ராஜா சூசான் அரண்மனையில் வந்திருந்த பெரியோர்முதல் சிறியோர்வரையுள்ள எல்லா மக்களுக்கும் ராஜ அரண்மனையைச்சேர்ந்த சிங்காரத்தோட்டத்திலுள்ள மண்டபத்தில் ஏழு நாட்கள் விருந்தளித்தான். அங்கே வெண்கலத் தூண்களின்மேலே உள்ள வெள்ளி வளையங்களில் மெல்லிய நூலும் சிவப்பு நூலுமான கயிறுகளால் வெள்ளையும் பச்சையும் இளநீலமுமாகிய தொங்குதிரைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது; சிவப்பும் நீலமும் வெள்ளையும் கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின்மேல் பொற்சரிகையும் வெள்ளிச்சரிகையுமான மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தது. பொன்னால் செய்யப்பட்ட பலவித பாத்திரங்களிலே பானம் கொடுக்கப்பட்டது; முதல்தரமான திராட்சைரசம் ராஜாவின் கொடைத்தன்மைக்கு ஏற்றவாறு பரிபூரணமாகப் பரிமாறப்பட்டது. அவரவருடைய மனதின்படியே செய்யலாம் என்று ராஜா தன்னுடைய அரண்மனையின் பெரிய மனிதர்களுக்கெல்லாம் கட்டளையிட்டிருந்தபடியால், முறைப்படி குடித்தார்கள்; ஒருவனும் கட்டாயப்படுத்தவில்லை. ராணியாகிய வஸ்தியும் ராஜாவாகிய அகாஸ்வேருவின் அரண்மனையிலே பெண்களுக்கு ஒரு விருந்தளித்தாள். 10 ஏழாம் நாளிலே ராஜா திராட்சைரசத்தினால் சந்தோஷமாக இருக்கும்போது, பேரழகியாயிருந்த ராணியாகிய வஸ்தியின் அழகை மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் காண்பிப்பதற்காக, ராஜகிரீடம் அணிந்தவளாக, அவளைத் தனக்கு முன்பாக அழைத்துவரவேண்டுமென்று, 11 ராஜாவாகிய அகாஸ்வேருவின் சமுகத்தில் பணிவிடை செய்கிற மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் என்னும் ஏழு பிரதானிகளுக்கும்
ராஜா கட்டளையிட்டான்.
12 ஆனாலும் பிரதானிகள் மூலமாய் ராஜா சொல்லியனுப்பின கட்டளைக்கு ராணியாகிய வஸ்தி வரமாட்டேன் என்றாள்; அப்பொழுது ராஜா கடுங்கோபமடைந்து, தனக்குள்ளே எரிச்சல் அடைந்தான். 13 அந்த சமயத்தில் ராஜசமுகத்தில் இருக்கிறவர்களும், ராஜ்ஜியத்தின் முதன்மை ஆசனங்களில் உட்காருகிறவர்களுமான கர்ஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் என்னும் பெர்சியர்கள் மேதியர்களுடைய ஏழு பிரபுக்களும் அவன் அருகில் இருந்தார்கள். 14 ராஜா நியாயப்பிரமாணத்தையும் ராஜநீதியையும் அறிந்தவர்களிடம் பேசுவது தனக்கு வழக்கமானபடியால், காலாகால செயல்பாடுகளை அறிந்த பண்டிதர்களை நோக்கி: 15 ராஜாவாகிய அகாஸ்வேரு அதிகாரிகளின் மூலமாகச் சொல்லியனுப்பின கட்டளையின்படி ராணியாகிய வஸ்தி செய்யாமற்போனதினால், தேசத்தின் சட்டப்படி அவளுக்குச் செய்யவேண்டியது என்ன என்று கேட்டான். 16 அப்பொழுது மெமுகான் ராஜாவிற்கும் பிரபுக்களுக்கும் முன்னே மறுமொழியாக: ராணியாகிய வஸ்தி ராஜாவிற்கு மட்டும் அல்ல, ராஜாவாகிய அகாஸ்வேருவினுடைய எல்லா நாடுகளிலுமுள்ள எல்லாபிரபுக்களுக்கும் எல்லா மக்களுக்குங்கூட அநியாயம் செய்தாள். 17 ராஜாவாகிய அகாஸ்வேரு ராணியாகிய வஸ்தியைத் தமக்கு முன்பாக அழைத்துவரச் சொன்னபோது, அவள் வரமாட்டேன் என்று சொன்ன செய்தி எல்லாப் பெண்களுக்கும் தெரியவந்தால், அவர்களும் தங்களுடைய கணவன்களைத் தங்களுடைய பார்வையில் அற்பமாக நினைப்பார்கள். 18 இன்றையதினமே பெர்சியாவிலும் மேதியாவிலுமுள்ள பிரபுக்களின் பெண்கள் ராணியின் செய்தியைக் கேட்கும்போது, ராஜாவின் பிரபுக்களுக்கெல்லாம் அப்படியே சொல்லுவார்கள்; மிகுந்த அசட்டையும் எரிச்சலும் விளையும். 19 ராஜாவிற்கு விருப்பமாக இருந்தால், வஸ்தி இனி ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு முன்பாக வரக்கூடாது என்றும், அவளுடைய ராஜமேன்மையை அவளைவிட சிறந்த மற்றொரு பெண்ணுக்கு ராஜா கொடுப்பாராக என்றும், அவரால் ஒரு ராஜகட்டளை அனுப்பி, அது மீறப்படாதபடி, பெர்சியாவுக்கும் மேதியாவுக்கும் உரிய தேசத்தின் சட்டத்திலும் எழுதப்படவேண்டும். 20 இப்படி ராஜா முடிவெடுத்த காரியம் தமது ராஜ்ஜியமெங்கும் கேட்கப்படும்போது, பெரியோர்முதல் சிறியோர்வரையுள்ள எல்லாப் பெண்களும் தங்கள் கணவன்களை மதிப்பார்கள் என்றான். 21 இந்த வார்த்தை ராஜாவிற்கும் பிரபுக்களுக்கும் நலமாகத் தோன்றியதால், ராஜா மெமுகானுடைய வார்த்தையின்படியே செய்து, 22 எந்த கணவனும் தன்னுடைய வீட்டிற்குத் தானே அதிகாரியாக இருக்கவேண்டும் என்றும், இதை அந்தந்த மக்களுடைய மொழியிலே அறிவிக்கப்பட வேண்டும் என்றும், அந்தந்த நாட்டில் வழங்குகிற சொந்த எழுத்திலும், அந்தந்த தேசத்தில் பேசுகிற மொழிகளிலும், ராஜாவின் எல்லா நாடுகளுக்கும் கட்டளை எழுதி அனுப்பினான்.
* அத்தியாயம் 1:1 எத்தியோப்பியா அத்தியாயம் 1:11 இவர்கள் விதையடிக்கப்பட்ட ஆண்கள், இராஜா மாளிகையில் இராணிகளை பாதுகாக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகள்