அத்தியாயம் 3
யோபுவின் வார்த்தைகள் 
 
1 அதற்குப் பின்பு யோபு தன் வாயைத்திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து,  
2 வசனித்துச் சொன்னது என்னவென்றால்:   
3 நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியானது என்று சொல்லப்பட்ட இரவும் அழிவதாக.   
4 அந்த நாள் இருளாக்கப்படுவதாக;  
தேவன் உயரத்திலிருந்து அதை விசாரிக்காமலும்,  
வெளிச்சம் அதின்மேல் பிரகாசிக்காமலும்,   
5 கடுமையான இருளும்  
மரண இருளும் அதைக் கறைப்படுத்தி, கருமேகம் அதை மூடி,  
மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை பயமுறுத்துவதாக.   
6 அந்த இரவை இருள் பிடிப்பதாக;  
வருடத்தின் நாட்களில் அது சந்தோஷப்படுகிற நாளாக இராமலும் மாதக்கணக்கிலே அது வராமலும் போவதாக.   
7 அந்த இரவு தனிமையாயிருப்பதாக; அதிலே கெம்பீரசத்தம் இல்லாமற்போவதாக.   
8 நாளைச் சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பச் செய்கிறவர்களும்,  
அதைச் சபிப்பார்களாக.   
9 அதின் மறையும் காலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு,  
அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் தோன்றாமலும், விடியற்காலத்து வெளுப்பை அது பார்க்காமலும் இருப்பதாக.   
10 நான் இருந்த கர்ப்பத்தின் வாசலை அது அடைக்காமலும்,  
என் கண்கள் காண்கிற வருத்தத்தை மறைத்துவிடாமலும் இருந்ததே.   
11 நான் கர்ப்பத்தில் அழியாமலும்,  
கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே இறக்காமலும் போனதென்ன?   
12 என்னை ஏந்திக்கொள்ள மடியும்,  
நான் பாலுண்ண மார்பகங்களும் இருந்ததென்ன?   
13 அப்படியில்லாதிருந்தால்,  
அசையாமல்கிடந்து அமர்ந்திருந்து,   
14 பாழ்நிலங்களில் தங்களுக்கு மாளிகையைக் கட்டின பூமியின் ராஜாக்களுடனும் மந்திரிமார்களுடனும்,   
15 அல்லது, பொன்னை உடையவர்களும்,  
தங்கள் வீடுகளை வெள்ளியினால் நிரப்பினவர்களுமான பிரபுக்களுடன் நான் இப்பொழுது தூங்கி இளைப்பாறுவேனே.   
16 அல்லது, வெளிப்படாத வளர்ச்சியடையாத கருவைப்போலவும்,  
வெளிச்சத்தைப் பார்க்காத குழந்தைகளைப்போலவும் இருப்பேனே.   
17 துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது;  
பெலனற்று சோர்ந்து போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள்.   
18 சிறைப்பட்டிருந்தவர்கள் அங்கே ஏகமாக அமர்ந்திருக்கிறார்கள்;  
ஒடுக்குகிறவனுடைய சத்தம் அங்கே கேட்கப்படுகிறதில்லை.   
19 சிறியவனும் பெரியவனும் அங்கே சமமாக இருக்கிறார்கள்;  
அடிமை தன் எஜமானுக்கு நீங்கலாயிருக்கிறான்.   
20 மரணத்திற்கு ஆசையாகக் காத்திருந்து,  
புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும்,   
21 கல்லறையைக் கண்டுபிடித்ததினால் மிகவும் மகிழ்ந்து,   
22 அதற்காகச் சந்தோஷப்படுகிற பாக்கியம் இல்லாதவராகிய இவர்களுக்கு வெளிச்சமும்,  
மனவருத்தமும் உள்ள இவர்களுக்கு உயிர் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன?   
23 தன் வழியைக் காணமுடியாதபடிக்கு,  
தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன?   
24 என் சாப்பாட்டுக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது;  
என் கதறுதல் வெள்ளம்போல் புரண்டுபோகிறது.   
25 நான் பயந்த காரியம் எனக்குச் சம்பவித்தது;  
நான் பயப்பட்டது எனக்கு வந்தது.   
26 எனக்குச் சுகமுமில்லை,  
நிம்மதியுமில்லை, அமைதலுமில்லை;  
எனக்குத் துன்பமே வந்தது.