அத்தியாயம் 9
யெகூ இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்யப்படுதல்
1 அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலிசா தீர்க்கதரிசிகளின் கூட்டத்தாரில் ஒருவனை அழைத்து: நீ பயணத்திற்கான உடையணிந்துகொண்டு, இந்தத் தைலக்குப்பியை உன் கையில் எடுத்துக்கொண்டு, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போ.
2 நீ அங்கே சென்றபின்பு, நிம்சியின் மகனான யோசபாத்தின் மகன் யெகூ எங்கே இருக்கிறான் என்று பார்த்து, அங்கே சென்று, அவனைத் தன் சகோதரர்களின் நடுவிலிருந்து எழுந்திருக்கச்செய்து, அவனை ஒரு உள் அறையிலே அழைத்துக்கொண்டுபோய்,
3 தைலக்குப்பியை எடுத்து, அவனுடைய தலையின்மேல் ஊற்றி: உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து தாமதிக்காமல் ஓடிப்போ என்றான்.
4 அப்படியே தீர்க்கதரிசியின் ஊழியக்காரனாகிய அந்த வாலிபன் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போனான்.
5 அவன் அங்கே சென்றபோது, சேனாதிபதிகள் அங்கே உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது அவன்: சேனாதிபதியே, உமக்குச் சொல்லவேண்டிய ஒரு வார்த்தை உண்டு என்றான். அதற்கு யெகூ: எங்களில் யாருக்கு என்று கேட்டதற்கு, அவன், சேனாதிபதியாகிய உமக்குத்தான் என்றான்.
6 அவன் எழுந்து, அறைவீட்டிற்குள் பிரவேசித்தான்; அவன் அந்தத் தைலத்தை அவன் தலையின்மேல் ஊற்றி:, அவனை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், உன்னைக் யெகோவாவுடைய மக்களாகிய இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தேன்.
7 நான் என் ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழியையும், யெகோவாவுடைய சகல ஊழியக்காரர்களின் இரத்தப்பழியையும், யேசபேலின் கையிலே வாங்கும்படி நீ உன் ஆண்டவனாகிய ஆகாபின் குடும்பத்தை அழித்துவிடவேண்டும்.
8 ஆகாபின் குடும்பமெல்லாம் அழியும்படி, நான் ஆகாபுக்குச் சுவரில் நீர்விடும் ஒரு நாய்முதலாக இருக்காதபடி, இஸ்ரவேலிலே அவனுடையவர்களில் அடிமைபட்டவனையும் மற்றவனையும் கருவறுத்து,
9 ஆகாபின் குடும்பத்தை நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் குடும்பத்திற்கும், அகியாவின் மகனாகிய பாஷாவின் குடும்பத்திற்கும் சரியாக்குவேன்.
10 யேசபேலை யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் தின்றுவிடும்; அவளை அடக்கம்செய்கிறவன் இல்லையென்று சொல்கிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து ஓடிப்போனான்.
11 யெகூ தன் எஜமானுடைய ஊழியக்காரர்களிடத்திற்குத் திரும்பிவந்தபோது, அவர்கள் அவனை நோக்கி: சுகசெய்தியா? அந்தப் பயித்தியக்காரன் உன்னிடத்திற்கு எதற்காக வந்தான் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: அந்த மனிதனையும், அவன் சொன்ன காரியத்தையும் நீங்கள் அறிவீர்கள் என்றான்.
12 அதற்கு அவர்கள்: அது பொய், அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள். அப்பொழுது அவன்: நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தேன் என்று யெகோவா உரைக்கிறார் என்று இன்ன இன்ன பிரகாரமாக என்னிடத்தில் சொன்னான் என்றான்.
13 அப்பொழுது அவர்கள் துரிதமாக அவரவர் தங்கள் ஆடைகளைப் படிகளின் உயரத்தில் அவனுக்கு கீழே விரித்து, எக்காளம் ஊதி: யெகூ ராஜாவானான் என்றார்கள்.
யோராமையும் அகசியாவையும் யெகூ கொன்றுபோடுதல்
14 அப்படியே நிம்சியின் மகனாகிய யோசபாத்தின் மகன் யெகூ என்பவன் யோராமுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டினான்; யோராமோ இஸ்ரவேலர்கள் எல்லோரோடுங்கூட கீலேயாத்திலுள்ள ராமோத்திலே சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலினிமித்தம் காவல் வைத்துவைத்தான்.
15 ஆனாலும் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடே செய்த போரிலே, சீரியர்கள் தன்னை வெட்டின காயங்களை யெஸ்ரயேலிலே ஆற்றிக்கொள்வதற்கு, ராஜாவாகிய யோராம் திரும்பிப்போயிருந்தான். யெகூ என்பவன்; இது உங்களுக்குச் சம்மதமாயிருந்தால் யெஸ்ரயேலில் இதை அறிவிக்கிறதற்கு ஒருவரும் பட்டணத்திலிருந்து தப்பிச்செல்ல விடாதிருங்கள் என்றான்.
16 அப்பொழுது யெகூ இரதத்தின்மேல் ஏறி, யெஸ்ரயேலுக்கு நேராகப் போனான், யோராம் அங்கே வியாதியாகக் கிடந்தான்; யோராமைப்பார்க்க, யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் அங்கே வந்திருந்தான்.
17 யெஸ்ரயேலில் கோபுரத்தின்மேல் நிற்கிற ஜாமக்காரன், யெகூவின் கூட்டம் வருகிறதைக் கண்டு: ஒரு கூட்டத்தைக் காண்கிறேன் என்றான். அப்பொழுது யோராம்: நீ ஒரு குதிரைவீரனைக் கூப்பிட்டு, அவர்களுக்கு எதிராக அனுப்பி சமாதானமா என்று கேட்கச்சொல் என்றான்.
18 அந்தக் குதிரைவீரன்: அவனுக்கு எதிர்கொண்டுபோய், சமாதானமா என்று ராஜா கேட்கச்சொன்னார் என்றான். அதற்கு யெகூ: சமாதானத்தைப்பற்றி உனக்கு என்ன? என் பின்னே திரும்பிவா என்றான். அப்பொழுது ஜாமக்காரன்: அனுப்பப்பட்டவன் அவர்கள் இருக்கும் இடம்வரை போனபோதிலும் திரும்பிவரவில்லை என்றான்.
19 ஆகையால் வேறொரு குதிரைவீரனை அனுப்பினான், அவன் அவர்களிடத்தில் போய்: சமாதானமா என்று ராஜா கேட்கச்சொன்னார் என்றான். அதற்கு யெகூ: சமாதானத்தைப்பற்றி உனக்கு என்ன? என் பின்னே திரும்பிவா என்றான்.
20 அப்பொழுது ஜாமக்காரன்: அவன் அவர்கள் இருக்கும் இடம்வரை போனபோதிலும் திரும்பிவரவில்லை என்றும், ஓட்டுகிறது நிம்சியின் மகனாகிய யெகூ ஓட்டுகிறதுபோல இருக்கிறது; அதிவேகமாக ஓட்டுகிறான் என்றும் சொன்னான்.
21 அப்பொழுது யோராம்: இரதத்தை ஆயத்தப்படுத்து என்றான்; அவனுடைய இரதத்தை ஆயத்தப்படுத்தினபோது, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமும், யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் அவனவன் தன்தன் இரதத்தில் ஏறி யெகூவுக்கு நேராகப் புறப்பட்டு, யெஸ்ரயேலயனாகிய நாபோத்தின் நிலத்திலே அவனுக்கு எதிர்ப்பட்டார்கள்.
22 யோராம் யெகூவைக் கண்டவுடனே: யெகூவே, சமாதானமா என்றான். அதற்கு யெகூ: உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லி சூனியங்களும், இத்தனை ஏராளமாயிருக்கும்போது சமாதானம் ஏது என்றான்.
23 அப்பொழுது யோராம் தன் இரதத்தைத் திருப்பிக்கொண்டு ஓடிப்போய், அகசியாவை நோக்கி: அகசியாவே, இது சதி என்றான்.
24 யெகூ தன் கையால் வில்லை நாணேற்றி, அம்பு யோராமுடைய நெஞ்சில் ஊடுருவிப் போகத்தக்கதாக, அவனை அவனுடைய புயங்களின் நடுவே எய்தான்; அதினால் அவன் தன் இரதத்திலே சுருண்டு விழுந்தான்.
25 அப்பொழுது யெகூ, தன் சேனாதிபதியாகிய பித்காரை நோக்கி: அவனை எடுத்து, யெஸ்ரயேலயனாகிய நாபோத்தின் வயல்நிலத்தில் எறிந்துபோடு; நானும் நீயும் ஒன்றுசேர்ந்து அவனுடைய தகப்பனாகிய ஆகாபின் பின்னே குதிரையில் ஏறிவருகிறபோது, யெகோவா இந்த ஆக்கினையை அவன்மேல் சுமத்தினார் என்பதை நினைத்துக்கொள்.
26 நேற்று நாபோத்தின் இரத்தத்தையும், அவனுடைய மகன்களின் இரத்தத்தையும் கண்டேன் அல்லவா என்றும், இந்த நிலத்தில் உனக்கு நீதியைச் சரிக்கட்டுவேன் என்றும் அப்பொழுது யெகோவா சொன்னாரே; இப்போதும் அவனை எடுத்து, யெகோவாவுடைய வார்த்தையின்படியே இந்த நிலத்தில் எறிந்துபோடு என்றான்.
27 இதை யூதாவின் ராஜாவாகிய அகசியா கண்டு, தோட்டத்தின் வீட்டுவழியாக ஓடிப்போனான்; யெகூ அவனைப் பின்தொடர்ந்து: அவனையும் இரதத்திலே வெட்டிப்போடுங்கள் என்றான்; அவர்கள் இப்லேயாம் அருகில் இருக்கிற கூர் என்னும் மலையின்மேல் ஏறுகிற வழியிலே அப்படிச் செய்தார்கள்; அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கே இறந்துபோனான்.
28 அவனுடைய வேலைக்காரர்கள் அவனை இரதத்தில் ஏற்றி எருசலேமுக்குக் கொண்டுபோய், அவனைத் தாவீதின் நகரத்தில் அவனுடைய முன்னோர்களோடு அவனுடைய கல்லறையிலே அடக்கம்செய்தார்கள்.
29 இந்த அகசியா, ஆகாபுடைய மகனாகிய யோராமின் பதினோராம் வருடத்தில் யூதாவின்மேல் ராஜாவானான்.
யேசபேல் யெகூவினால் கொல்லப்படுதல்
30 யெகூ யெஸ்ரயேலுக்கு வந்தான்; அதை யேசபேல் கேட்டபோது, தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையை அலங்கரித்துக்கொண்டு, ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து,
31 யெகூ பட்டணத்து நுழைவாயிலுக்கு வந்தபோது, அவள்: தன் ஆண்டவனைக் கொன்ற சிம்ரி பாதுகாக்கப்பட்டானா என்றாள்.
32 அப்பொழுது அவன் தன் முகத்தை அந்த ஜன்னலுக்கு நேராக ஏறெடுத்து: என்னுடன் இருக்கிறது யார் யார் என்று கேட்டதற்கு, இரண்டு மூன்று அதிகாரிகள் அவனை எட்டிப்பார்த்தார்கள்.
33 அப்பொழுது அவன்: அவளைக் கீழே தள்ளுங்கள் என்றான்; அப்படியே அவளைக் கீழே தள்ளினதால், அவளுடைய இரத்தம் சுவரிலும் குதிரைகளிலும் தெறித்தது; அவன் அவளை மிதித்துக்கொண்டு,
34 உள்ளேபோய், சாப்பிட்டுக் குடித்த பின்பு: நீங்கள் போய் சபிக்கப்பட்ட அந்த பெண்ணைப் பார்த்து, அவளை அடக்கம் செய்யுங்கள்; அவள் ஒரு ராஜகுமாரத்தி என்றான்.
35 அவர்கள் அவளை அடக்கம்செய்யப்போகிறபோது, அவளுடைய தலையோட்டையும் கால்களையும் உள்ளங்கைகளையும் தவிர வேறொன்றையும் காணவில்லை.
36 ஆகையால் அவர்கள் திரும்பிவந்து அவனுக்கு அறிவித்தார்கள்; அப்பொழுது அவன்: இது யெகோவா திஸ்பியனாகிய எலியா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு சொன்ன வார்த்தை; யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் யேசபேலின் மாம்சத்தைத் தின்னும் என்றும்,
37 இதுதான் யேசபேலென்று சொல்லமுடியாத அளவிற்கு, யேசபேலின் பிரேதம் யெஸ்ரயேலின் நிலத்திலே வயல்வெளியின்மேல் போடும் எருவைப்போல் ஆகும் என்றும் சொன்னாரே என்றான்.