25
பெஸ்துவின்முன் பவுல்
அந்த மாகாணத்திற்கு பெஸ்து வந்து மூன்று நாட்களுக்குப்பின், அவன் செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான். அங்கே தலைமை ஆசாரியர்களும், யூதத்தலைவர்களும் அவனிடம் வந்து பவுலுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எடுத்துக் கூறினார்கள். அவர்கள் பெஸ்துவிடம், தங்களுக்குத் தயவுகாட்டி பவுலை எருசலேமுக்குக் கொண்டுவரும்படி அவசரமாகக் கேட்டுக்கொண்டார்கள். ஏனெனில், வழியிலேயே பவுலை மறைந்திருந்து கொல்ல அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். பெஸ்து அவர்களுக்குப் பதிலாக, “பவுல் செசரியாவில் சிறைவைக்கப்பட்டிருக்கிறான். நானும் சீக்கிரமாய் அங்கே போகிறேன். உங்கள் தலைவர்களில் சிலர் என்னுடன் வந்து, அவன் ஏதாவது குற்றம் செய்திருந்தால், அவனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அங்கேயே அவன்மேல் சுமத்தட்டும்” என்றான்.
அவன் எட்டு அல்லது பத்து நாட்கள் அவர்களுடன் தங்கிவிட்டு, செசரியாவுக்குப் போனான். மறுநாள் அவன் நீதிமன்றத்தைக் கூட்டி, பவுலைத் தனக்கு முன்பாகக் கொண்டுவரும்படி உத்தரவிட்டான். பவுல் அங்கே வந்தபோது, எருசலேமிலிருந்து அங்கு வந்த யூதர் அவனைச்சுற்றி நின்றார்கள், அவர்கள் அவன்மேல் மிகவும் கடுமையான, அநேக குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்கள். ஆனாலும், அவர்களால் அவற்றை நிரூபிக்க முடியாமல் போயிற்று.
அப்பொழுது பவுல் தன் சார்பாகப் பேசிச் சொன்னதாவது: “நான் யூதருடைய சட்டத்திற்கு எதிராகவோ, ஆலயத்திற்கு எதிராகவோ, ரோம பேரரசன் சீசருக்கு எதிராகவோ, எந்தக் குற்றமும் செய்யவில்லை” என்றான்.
பெஸ்து யூதருக்கு தயவுகாட்ட விரும்பியவனாய் பவுலிடம், “நீ எருசலேமுக்கு வந்து, அங்கே எனக்கு முன்பாக இந்தக் குற்றச்சாட்டுகளைக் குறித்து விசாரணை செய்ய உடன்படுகிறாயா?” என்று கேட்டான்.
10 அதற்குப் பவுல் அவனிடம், “நான் இப்பொழுது ரோமப் பேரரசனுடைய நீதிமன்றத்துக்கு முன்பாக நிற்கின்றேன். இங்கேயே நான் விசாரணை செய்யப்படவேண்டும். நீர் நன்றாய் அறிந்திருக்கிறபடி, நான் யூதருக்கு எதிராக எவ்வித குற்றமும் செய்யவில்லை. 11 ஆனால், மரண தண்டனை பெறுவதற்குத் தகுதியான ஏதாவது குற்றத்தை நான் செய்திருந்தால், நான் சாவதற்கு மறுக்கவில்லை. ஆனால், எனக்கு எதிராக இந்த யூதரால் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையற்றவைகளாய் இருக்குமானால், அவர்களிடம் என்னை ஒப்படைக்க யாருக்கும் உரிமை இல்லை. நான் பேரரசன் சீசருக்கு மேல்முறையீடு செய்கிறேன்” என்றான்.
12 பெஸ்து தனது ஆலோசகருடன் கலந்து ஆலோசித்துவிட்டுப் பவுலிடம், “நீ ரோம பேரரசன் சீசருக்கு மேல்முறையீடு செய்திருக்கிறாய், நீ ரோம பேரரசனிடமே போவாய்” என்றான்.
பெஸ்துவும் அகிரிப்பா அரசனும்
13 சில நாட்களுக்குபின் அகிரிப்பா அரசனும், பெர்னிக்கேயாளும், பெஸ்துவை வாழ்த்தும்படி செசரியாவுக்கு வந்தார்கள். 14 அவர்கள் பல நாட்கள் அங்கே தங்கியிருந்ததால், பெஸ்து பவுலின் வழக்கைக் குறித்து அவர்களுடன் கலந்துரையாடினான். அவன் அரசனிடம்: “பேலிக்ஸ் சிறைக்கைதியாய் விட்டுச்சென்ற ஒருவன் இங்கே இருக்கிறான். 15 நான் எருசலேமுக்குப் போனபோது, தலைமை ஆசாரியர்களும், யூதரின் தலைவர்களும் அவனுக்கு விரோதமாய் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவந்து, அவனைக் குற்றவாளியாய் தீர்க்கும்படி என்னைக் கேட்டார்கள்.
16 “அதற்கு நான் அவர்களிடம், ‘ஒருவன் தன்மேல் குற்றம் சாட்டுகிறவர்களுக்கு முன்நின்று, அவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்கு எதிராக, தனது சார்பாகப் பேசுவதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். அதற்குமுன், அவனைக் குற்றவாளியாக ஒப்படைப்பது ரோமரின் வழக்கம் அல்ல’ என்று அவர்களுக்குச் சொன்னேன். 17 அவர்கள் என்னுடன் இங்கே வந்தபோது, நான் வழக்கைத் தாமதப்படுத்தவில்லை. மறுநாளே நான் நீதிமன்றத்தைக் கூட்டி, பவுல் என்கிற அவனைக் கொண்டுவரும்படி உத்தரவிட்டேன். 18 அவன்மேல் குற்றம் சாட்டியவர்கள் பேசுவதற்கு எழுந்து நின்றபோது, நான் எதிர்பார்த்த குற்றங்கள் எதையும் அவர்கள் அவன்மேல் சுமத்தவில்லை. 19 ஆனால் அவர்கள் தங்களுடைய சொந்த பாரம்பரியத்தைக் குறித்தும், உயிரோடு இருப்பதாகப் பவுல் கூறும் இயேசு என்னும் இறந்துபோன ஒருவனைக் குறித்து தகராறு செய்தார்கள். 20 இப்படிப்பட்ட காரியங்களை எப்படி விசாரணை செய்வது என்று தெரியாமல் நான் இருந்தேன்; அதனால் நான் அவனிடம், ‘நீ எருசலேமுக்குப் போய், இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி அங்கே விசாரணை செய்யப்பட உடன்படுகிறாயா?’ என்று கேட்டேன். 21 ஆனால் பவுலோ, ரோமப் பேரரசனுடைய தீர்ப்புக்காக தன்னைக் காவலில் வைத்துக்கொள்ளும்படி மேல்முறையீடு செய்தான். எனவே அவன் ரோமப் பேரரசனிடம் அனுப்பப்படும் வரைக்கும், தடுப்புக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டேன்” என்றான்.
22 அப்பொழுது அகிரிப்பா அரசன் பெஸ்துவிடம், “அவன் சொல்வதை நானும் கேட்க விரும்புகிறேன்” என்றான்.
அதற்கு பெஸ்து, “நாளைக்கே அவன் பேசுவதை நீர் கேட்கலாம்” என்றான்.
அகிரிப்பாவின்முன் பவுல்
23 மறுநாள் அகிரிப்பா அரசனும், பெர்னிக்கேயாளும் சிறப்பான வரவேற்புடன் மக்கள் அரங்கத்திற்குள் வந்தார்கள். அவர்களுடன் உயர் அதிகாரிகளும், பட்டணத்தில் உயர் மதிப்புக்குரிய மனிதரும் வந்தார்கள். பெஸ்துவின் கட்டளைப்படி, பவுல் அங்கு கொண்டுவரப்பட்டான். 24 அப்பொழுது பெஸ்து: “அகிரிப்பா அரசனே, எங்களோடு இங்கே இருக்கிறவர்களே, இவனை நீங்கள் பார்க்கிறீர்கள்; இவனைக் குறித்து எருசலேமிலும், இங்கே செசரியாவிலும் யூத சமூகத்தவர் யாவரும் என்னிடம், அவன் இனியும் உயிர் வாழக்கூடாது என்று சத்தமிட்டு முறையிட்டார்கள். 25 ஆனால் மரண தண்டனை பெறக்கூடிய எதையும் அவன் செய்யவில்லை என்று நான் கண்டுகொண்டேன். இவன் ரோமப் பேரரசன் சீசருக்கு மேல்முறையீடு செய்திருக்கிறபடியால், நான் இவனை ரோம் நகருக்கு அனுப்பத் தீர்மானித்திருக்கிறேன். 26 ஆனால் ரோமப் பேரரசன் சீசருக்கு இவனைக் குறித்து நான் எழுதுவதற்கு குறிப்பிடத்தக்கது எதுவும் என்னிடம் இல்லை. எனவேதான், நான் இப்பொழுது இவனை உங்கள் எல்லோருக்கும் முன்பாகக் கொண்டுவந்திருக்கிறேன். விசேஷமாக, அகிரிப்பா அரசனுக்கு முன்பாகக் கொண்டுவந்திருக்கிறேன். இந்த விசாரணையின் முடிவில், இவனைக் குறித்து எழுதுவதற்கு ஏதாவது எனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன். 27 ஒரு கைதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டு எழுதாமல் அவனை அனுப்புவது நியாயமல்ல என்று நான் எண்ணுகிறேன்” என்றான்.