4
நீதிமன்றத்தில் பேதுருவும் யோவானும்
1 பேதுருவும் யோவானும் மக்களிடத்தில் பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும், ஆலயக்காவலர் தலைவனும், சதுசேயரும் அங்கு வந்தார்கள்.
2 இயேசுவில் இறந்தோருக்கு உயிர்த்தெழுதல் உண்டென்று மக்களுக்கு அப்போஸ்தலர் போதித்து, அறிவித்ததினால் அவர்கள் மிகவும் எரிச்சலடைந்தார்கள்.
3 அவர்கள் பேதுருவையும் யோவானையும் பிடித்து, மாலை நேரமாய் இருந்ததால் அவர்களை மறுநாள் வரைக்கும் சிறையில் போட்டார்கள்.
4 ஆனால், வசனத்தைக் கேட்ட பலர் விசுவாசித்தார்கள். விசுவாசித்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது.
5 மறுநாளிலே ஆளுநர்களும், யூதரின் தலைவர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் எருசலேமில் சந்தித்தார்கள்.
6 பிரதான ஆசாரியனாகிய அன்னாவும் அங்கே இருந்தான். காய்பா, யோவான், அலெக்சாந்தர் ஆகியோருடன் பிரதான ஆசாரியனின் குடும்பத்தைச் சேர்ந்த இன்னும் பலரும் அங்கே இருந்தார்கள்.
7 அவர்கள் பேதுருவையும் யோவானையும் தங்களுக்குமுன் கொண்டுவரும்படிச்செய்து, அவர்களிடம் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள்: “எந்த வல்லமையினால் அல்லது எந்தப் பெயரினால் நீங்கள் இதைச் செய்தீர்கள்?” என்றார்கள்.
8 அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, அவர்களிடம்: “ஆளுநர்களே, யூதரின் தலைவர்களே,
9 ஒரு முடவனுக்குக் காண்பிக்கப்பட்ட ஒரு அனுதாபச் செயலுக்கு நாங்கள் இன்று காரணம் காட்டவேண்டுமென்றும், அவன் எப்படி சுகமானானென்றும் நாங்கள் விசாரிக்கப்படுகிறோம் என்றால்,
10 நீங்களும் எல்லா இஸ்ரயேல் மக்களும் அறியவேண்டியது இதுவே: நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் பெயரால், இந்த மனிதன் உங்களுக்கு முன்பாக சுகமடைந்தவனாய் நிற்கிறான். அந்த இயேசுவையே நீங்கள் சிலுவையில் அறைந்தீர்கள், ஆனால் இறைவனோ இறந்த அவரை உயிருடன் எழுப்பினார்.
11 அந்த இயேசுவே,
“ ‘கட்டிடம் கட்டுகிறவர்களாகிய நீங்கள் புறக்கணித்த கல்,
அவரே இன்று மூலைக்குத் தலைக்கல்லானவர்.’
12 இயேசு அல்லாமல், வேறு எவரிலும் இரட்சிப்பு இல்லை. ஏனெனில் நாம் இரட்சிக்கப்படும்படிக்கு, வானத்தின்கீழ், மனிதரிடையே அவருடைய பெயரின்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை” என்றான்.
13 பேதுரு, யோவான் ஆகிய இருவருடைய துணிச்சலையும், இவர்கள் கல்வியறிவு இல்லாத சாதாரண மனிதர் என்பதையும் தெரிந்துகொண்டபோது, அவர்கள் மலைத்துப்போனார்கள். இவர்கள் இயேசுவோடுகூட இருந்தவர்கள் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள்.
14 சுகமடைந்த மனிதன் இவர்கள் முன்பு நின்றுகொண்டிருந்ததை அவர்கள் கண்டார்கள். அதனால் அவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை.
15 எனவே, ஆலோசனைச் சங்கத்திலிருந்து இவர்களை வெளியே போகும்படி உத்தரவிட்டபின், அவர்கள் இந்த விஷயத்தைக்குறித்து ஒருவரோடொருவர் கலந்து பேசினார்கள்:
16 “நாம் இவர்களுக்கு என்ன செய்யலாம்? ஏனென்றால், குறிப்பிடத்தக்க ஒரு பெரிய அடையாளத்தை இவர்கள் செய்துள்ளார்கள் என்பது, எருசலேமில் வாழ்கிற அனைவருக்கும் தெரியும்; இதை நாமும் மறுக்க முடியாது.
17 ஆனால், இது தொடர்ந்து மக்களிடையே பரவாதபடி தடைசெய்வதற்கு, ‘இந்தப் பெயரிலே அவர்கள் இனிமேல் யாருடனும் பேசக்கூடாது’ என்று, நாம் அவர்களை எச்சரிக்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டார்கள்.
18 எனவே அவர்கள் மீண்டும் பேதுருவையும், யோவானையும் உள்ளே கூப்பிட்டு, “இயேசுவின் பெயரால் எதையும் பேசவோ, போதிக்கவோ கூடாது” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
19 ஆனால் பேதுருவும் யோவானும் அவர்களிடம், “நாங்கள் இறைவனுக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும், உங்களுக்குக் கீழ்ப்படிவது இறைவனுடைய பார்வையில் சரியானதோ என்று? நீங்களே நிதானித்துப் பாருங்கள்.
20 நாங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பேசாமல் இருக்க எங்களால் முடியாது” என்றார்கள்.
21 அவர்கள் மீண்டும் பேதுருவையும் யோவானையும் பயமுறுத்தியபின், அனுப்பிவிட்டார்கள். எல்லா மக்களும் நடந்த அற்புதத்திற்காக இறைவனைத் துதித்துக்கொண்டிருந்தபடியால், இவர்களை எப்படிக் கண்டிப்பது என்று அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை.
22 ஏனெனில், அற்புதமாய் சுகமடைந்தவன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான்.
விசுவாசிகளின் மன்றாட்டு
23 பேதுருவும் யோவானும் விடுதலை செய்யப்பட்டதும், தங்களைச் சேர்ந்த மக்களிடம் திரும்பிப்போய், ஆசாரியர்களும், யூதரின் தலைவர்களும் தங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.
24 அவர்கள் இதைக் கேட்டதும், ஒன்றாக சத்தமிட்டு இறைவனிடம் மன்றாடினார்கள். அவர்கள், “எல்லாம் வல்ல கர்த்தாவே, நீரே வானத்தையும், பூமியையும், கடலையும், அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தீர்.
25 நீர் பரிசுத்த ஆவியானவரால் உமது ஊழியனும், எங்கள் தந்தையுமான தாவீதின் வாயினால் பேசியதாவது:
“ ‘நாடுகள் ஏன் கொதித்து எழும்புகின்றன?
மக்கள் ஏன் வீணாய் சூழ்ச்சி செய்கின்றார்கள்?
26 பூமியின் அரசர்கள் எதிர்த்து நிற்கிறார்கள்.
ஆளுநர்களும் கர்த்தருக்கு விரோதமாகவும்,
அவரால் அபிஷேகம் பண்ணப்பட்டவருக்கு
விரோதமாகவும் ஒன்றுகூடுகிறார்கள்.’
27 நீர் அபிஷேகம் செய்த உமது பரிசுத்த ஊழியரான இயேசுவுக்கு எதிராய் சூழ்ச்சி செய்வதற்கென, இந்த நகரத்தில் ஏரோதுவும் பொந்தியு பிலாத்துவும் ஒன்றுகூடினார்கள். அவர்கள் யூதரல்லாத மக்களுடனும் இஸ்ரயேல் மக்களுடனும் ஒன்றுசேர்ந்தார்களே.
28 என்ன நடக்கவேண்டும் என்று முன்னதாகவே உம்முடைய வல்லமையும் திட்டமும் தீர்மானித்ததையே அவர்கள் செய்தார்கள்.
29 இப்பொழுதும் கர்த்தாவே, அவர்களுடைய பயமுறுத்தல்களைக் கவனத்தில் கொள்ளும்; உமது வார்த்தையை அதிகத் துணிவுடன் பேசுவதற்கு, உமது ஊழியக்காரருக்கு ஆற்றலைக் கொடும்.
30 உமது பரிசுத்த ஊழியரான இயேசுவின் பெயரினால் சுகப்படுத்துவதற்கும், அற்புத அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்வதற்கும் உமது கரத்தை நீட்டும்” என்று மன்றாடினார்கள்.
31 அவர்கள் மன்றாடி முடிந்ததும், அவர்கள் கூடியிருந்த இடம் முழுவதும் அதிர்ந்தது. அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, இறைவனுடைய வார்த்தையை பயமின்றிப் பேசினார்கள்.
சொத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுதல்
32 விசுவாசிகள் அனைவரும், இருதயத்திலும் மனதிலும் ஒன்றாய் இருந்தார்கள். ஒருவருமே தங்களுடைய சொத்துக்களைத் தங்களுடையது என்று உரிமை கருதவில்லை. ஆனால் அவர்கள் தங்களிடமிருந்த எல்லாவற்றையும் பொதுவாய்ப் பகிர்ந்துகொண்டார்கள்.
33 கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து அப்போஸ்தலர் மிகுந்த வல்லமையுடன் சாட்சி கொடுத்தார்கள். அவர்கள் எல்லோர்மேலும் மிகுந்த கிருபை இருந்தது.
34 அவர்களுக்குள்ளே குறையுள்ளவர் யாரும் இருக்கவில்லை. ஏனெனில், காலத்திற்குக் காலம் சொந்த நிலங்களும் வீடுகளும் இருந்தவர்கள் அவற்றை விற்று, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டுவந்து,
35 அப்போஸ்தலரின் பாதத்தில் வைத்தார்கள். அது தேவையுள்ள எல்லோருக்கும் தேவைக்கு ஏற்றபடி பகிர்ந்துகொடுக்கப்பட்டது.
36 சீப்புரு தீவைச்சேர்ந்த யோசேப்பு என்னும் ஒரு லேவியன் இருந்தான். அப்போஸ்தலர் அவனைப் பர்னபா என அழைத்தார்கள். பர்னபா என்றால், “ஆறுதலின் மகன்” என்று அர்த்தமாகும்.
37 இவன் தனக்குச் சொந்தமான வயலை விற்று, பணத்தைக் கொண்டுவந்து அப்போஸ்தலரின் பாதத்தில் வைத்தான்.