9
சவுலின் மனமாற்றம்
1 இதற்கிடையில், சவுல் இன்னும் கர்த்தருடைய சீடர்களைக் கொன்றுவிடுவதாக பயமுறுத்தி வந்தான். அவன் பிரதான ஆசாரியனிடத்திற்குப் போய்,
2 கிறிஸ்துவின் வழியைச் சார்ந்த ஆண் பெண் யாராய் இருந்தாலும் அவர்களைக் கைதுசெய்து எருசலேமுக்குக் கொண்டுவருவதற்கென்று தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்குக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டான்.
3 சவுல் தன் பிரயாணத்தில் தமஸ்குவை நெருங்கி வருகையில், திடீரென வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச்சுற்றிலும் பிரகாசித்தது.
4 அதனால் அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது, தன்னுடன் பேசுகிற ஒரு குரலைக் கேட்டான். அந்த குரல், “சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?” என்றது.
5 அதற்கு அவன், “ஆண்டவரே, நீர் யார்?” என்று கேட்டான்.
அதற்கு அவர், “நீ துன்புறுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைப்பது உனக்கு கடினமானதே.
6 எனவே, இப்பொழுது நீ எழுந்து பட்டணத்திற்குள்ளே போ. நீ என்ன செய்யவேண்டும் என்பது உனக்குச் சொல்லப்படும்” என்றார்.
7 சவுலுடன் பயணம் செய்தவர்கள், பேச்சற்று நின்றார்கள். அவர்களோ சத்தத்தைக் கேட்டார்கள், ஆனால் ஒருவரையுமே காணவில்லை.
8 சவுல் தரையில் இருந்து எழுந்து, தன் கண்களைத் திறந்தபோது, அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. எனவே அவர்கள் அவனுடைய கையைப் பிடித்து, தமஸ்கு பட்டணத்திற்குள்ளே கூட்டிக்கொண்டு சென்றார்கள்.
9 அங்கே அவன் மூன்று நாட்களாய் பார்வையற்றவனாய் இருந்தான். அவன் எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ இல்லை.
10 தமஸ்குவிலே, அனனியா என்னும் பெயருடைய ஒரு சீடன் இருந்தான். கர்த்தர் தரிசனத்தில் அவனைக் கூப்பிட்டு, “அனனியா!” என்றார்.
அதற்கு அவன், “ஆண்டவரே, இதோ அடியேன்!” என்றான்.
11 அப்பொழுது கர்த்தர் அவனிடம், “நீ நேர்த்தெரு எனப்பட்ட தெருவிலிருக்கிற யூதாவின் வீட்டிற்குப்போய், அங்கே தர்சுவைச் சேர்ந்த சவுல் என்னும் பெயருடைய ஒருவனைப்பற்றி விசாரி. அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்.
12 அவன் அனனியா என்னும் பெயருடைய ஒருவன் தன்னிடம் வந்து, பார்வையடையும்படி தன்மேல் கைகளை வைப்பதாகவும் தரிசனத்திலே கண்டிருக்கிறான்” என்றார்.
13 அப்பொழுது அனனியா, “ஆண்டவரே, நான் இவனைப்பற்றி அநேக செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறேன். எருசலேமிலே அவன் உமது பரிசுத்தவான்களுக்குச் செய்த எல்லாத் தீமைகளையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
14 உமது பெயரை அறிக்கையிடுகிற எல்லோரையும் கைதுசெய்வதற்குப் பிரதான ஆசாரியனிடமிருந்து அதிகாரம் பெற்றவனாய் அவன் இங்கே வந்திருக்கிறான்” என்றான்.
15 ஆனால் அதற்குக் கர்த்தர் அனனியாவிடம், “நீ போ, இவன் என்னால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு கருவி. யூதரல்லாதவர்களுக்கும், அவர்களின் அரசர்களுக்கு முன்பாகவும் இஸ்ரயேல் மக்களுக்கு முன்பாகவும் என் பெயரை அறிவிப்பதற்காக, நான் அவனைத் தெரிந்தெடுத்திருக்கிறேன்.
16 எனது பெயருக்காக அவன் எவ்வளவாய் துன்பம் அனுபவிக்கவேண்டும் என்று நான் அவனுக்குக் காண்பிப்பேன்” என்றார்.
17 அப்பொழுது அனனியா, அந்த வீட்டை அடைந்து, அதற்குள் போனான். அவன் சவுலின்மேல் தன் கைகளை வைத்து, “சகோதரனாகிய சவுலே, நீ இங்கே வருகையில் வழியிலே உனக்குத் தரிசனம் கொடுத்த கர்த்தராகிய இயேசு என்னை உன்னிடம் அனுப்பியிருக்கிறார்; நீ மீண்டும் பார்வை பெறும்படியாகவும், பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படும்படியாகவுமே அவர் என்னை அனுப்பினார்” என்றான்.
18 உடனேயே சவுலின் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்ற ஏதோ விழுந்தன. அப்பொழுது அவனால் பார்க்கமுடிந்தது. அவன் எழுந்திருந்து திருமுழுக்கு பெற்றான்.
19 பின்பு அவன் சிறிதளவு உணவைச் சாப்பிட்டு, தன் பெலத்தைத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
தமஸ்குவிலும் எருசலேமிலும் சவுல்
சவுல் தமஸ்குவில் இருந்த சீடர்களுடன் சில நாட்களைக் கழித்தான்.
20 உடனே அவன் யூத ஜெப ஆலயங்களில், இயேசு இறைவனின் மகன் என்று பிரசங்கிக்கத் தொடங்கினான்.
21 அவன் சொன்னதைக் கேட்ட அனைவரும் வியப்புற்று, “எருசலேமிலே இந்தப் பெயரை அறிக்கையிடுகிறவர்களை ஒழிக்க முற்பட்டவன் இவனல்லவா? இவன் அவர்களைக் கைதுசெய்து, பிரதான ஆசாரியனிடம் கொண்டுபோக அல்லவா இங்கே வந்தான்?” என்று கேட்டார்கள்.
22 ஆனால் சவுல், மேன்மேலும் வல்லமை பெற்று, தமஸ்குவிலே வாழுகிற யூதர்கள் அனைவருக்கும் இயேசுவே கிறிஸ்து என்று நிரூபித்து, அவர்களைக் குழப்பத்திற்குள்ளாக்கினான்.
23 இவ்வாறு பல நாட்கள் சென்றபின்பு, யூதர்கள் சவுலைக் கொலைசெய்வதற்கு சூழ்ச்சி செய்தார்கள்.
24 சவுலோ அவர்களுடைய திட்டத்தை அறிந்துகொண்டான். அவர்கள் அவனைக் கொலை செய்யும்படி இரவும் பகலுமாக அந்நகரத்தின் வாசல்களைக் கவனமாய் காத்துக்கொண்டிருந்தார்கள்.
25 ஆனால் அவனைப் பின்பற்றியவர்கள், இரவிலே அவனைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையில் வைத்து நகரத்தின் மதில் வழியாய் இறக்கிவிட்டார்கள்.
26 சவுல் எருசலேமுக்கு வந்தபோது, சீடர்களுடன் சேர்ந்துகொள்ள முயற்சித்தான். ஆனால் அவர்களோ, இவனைக்குறித்துப் பயமடைந்திருந்தபடியால், இவன் உண்மையாகவே ஒரு சீடன் என்று நம்பவில்லை.
27 ஆனால் பர்னபா அவனைக் கூட்டிக்கொண்டு அப்போஸ்தலரிடம் வந்தான். அவன் அவர்களுக்குச் சவுல் எவ்விதம் தன் பயணத்தில் கர்த்தரைக் கண்டான் என்பதையும், எவ்விதம் கர்த்தர் அவனுடன் பேசினார் என்பதையும், அவன் எவ்விதம் தமஸ்குவில் இயேசுவின் பெயரில் பயமின்றி பிரசங்கித்தான் என்பதையும் எடுத்துச்சொன்னான்.
28 எனவே சவுல் அவர்களுடன் தங்கி, எருசலேமில் சுதந்திரமாய்ச் சுற்றித்திரிந்து, கர்த்தரின் பெயரில் துணிவுடன் பேசினான்.
29 அவன் கிரேக்க யூதருடன் பேசி விவாதித்தான். அவர்களோ அவனைக் கொலைசெய்ய முயற்சித்தார்கள்.
30 சகோதரர் இதை அறிந்தபோது, அவர்கள் சவுலை செசரியாவுக்குக் கூட்டிக்கொண்டுபோய், அவனுடைய சொந்த ஊராகிய தர்சுவுக்கு அனுப்பிவைத்தார்கள்.
31 அந்நாட்களில் யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய இடங்களில் இருந்த திருச்சபையோ சமாதானம் பெற்று, பெலனடைந்து, கர்த்தருடைய பயபக்தியில் வாழ்ந்து, பரிசுத்த ஆவியானவரால் உற்சாகமூட்டப்பட்டு, எண்ணிக்கையிலும் பெருகிற்று.
ஐனேயாவும் தொற்காளும்
32 பேதுரு நாட்டுப் பகுதிகளில் பிரயாணம் பண்ணிக்கொண்டிருக்கையில், லித்தாவில் இருந்த பரிசுத்தவான்களைச் சந்திக்கும்படி போனான்.
33 அங்கே அவன் ஐனேயா என்னும் பெயருடைய ஒருவனைக் கண்டான். அவன் முடக்குவாதமுடையவனாய் எட்டு வருடங்களாகப் படுக்கையிலே கிடந்தான்.
34 பேதுரு அவனைப் பார்த்து, “ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைச் சுகப்படுத்துகிறார். நீ எழுந்து உன் படுக்கையை மடித்து வை” என்றான். உடனே, ஐனேயா எழுந்து நின்றான்.
35 லித்தாவிலும் சாரோனிலும் வாழ்ந்த அனைவரும் அவன் நடப்பதைக் கண்டு கர்த்தரிடம் திரும்பினார்கள்.
36 யோப்பாவிலே தபீத்தா என்னும் பெயருடைய சீஷி ஒருத்தி இருந்தாள். கிரேக்க மொழியிலே அவளைத் தொற்காள் என்று அழைத்தார்கள். அவள் எப்பொழுதும் நன்மை செய்கிறவளாயும், ஏழைகளுக்கு உதவி செய்கிறவளாயும் இருந்தாள்.
37 அந்நாட்களில் அவள் வியாதிப்பட்டு இறந்துபோனாள். அவளுடைய உடல் கழுவப்பட்டு, ஒரு வீட்டின் மேலறையில் கிடத்தப்பட்டிருந்தது.
38 லித்தா யோப்பாவுக்கு அருகே இருந்தது. எனவே, பேதுரு லித்தாவில் இருக்கிறான் என்று சீடர்கள் கேள்விப்பட்டபோது, இரண்டு மனிதரை அவனிடம் அனுப்பி, “தயவுசெய்து உடனே வாரும்” என்று சொல்லச் சொன்னார்கள்.
39 பேதுரு அவர்களுடனே போனான். அவன் வந்து சேர்ந்தவுடனே, அவனை வீட்டின் மேலறைக்குக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். எல்லா விதவைகளும் அவனைச்சுற்றி நின்று அழுதார்கள். தொற்காள் தங்களுடன் உயிரோடு இருக்கையில் அவள் செய்த அங்கிகளையும் ஆடைகளையும் அவனுக்குக் காண்பித்தார்கள்.
40 பேதுரு அவர்கள் எல்லோரையும் அறைக்கு வெளியே அனுப்பிவிட்டு, முழங்காற்படியிட்டு மன்றாடினான். அவன் இறந்திருந்த பெண்ணின் பக்கமாகத் திரும்பி, “தபீத்தா எழுந்திரு” என்றான். அவள் கண்களைத் திறந்து பேதுருவைக் கண்டபோது, எழுந்து உட்கார்ந்தாள்.
41 பேதுரு அவளுடைய கையைப் பிடித்து, அவள் நிற்பதற்கு உதவி செய்தான். பின்பு அவன் விசுவாசிகளையும் விதவைகளையும் கூப்பிட்டு, அவர்களிடம் அவளை உயிருடன் ஒப்படைத்தான்.
42 இது யோப்பா பட்டணம் முழுவதும் தெரியவந்தபோது, அநேக மக்கள் கர்த்தரில் விசுவாசம் வைத்தார்கள்.
43 பேதுரு யோப்பாவிலே தோல் பதனிடுகிற சீமோனுடன் சிலகாலம் தங்கியிருந்தான்.