15
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்
இப்பொழுதும் பிரியமானவர்களே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியை நான் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அதை நீங்கள் ஏற்றுக்கொண்டு, அதிலேயே உறுதியாய் நிற்கிறீர்கள். நான் உங்களுக்குப் பிரசங்கித்த வார்த்தையில், நீங்கள் உறுதியாய் நின்றால், இந்த நற்செய்தியினால் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். அப்படியில்லாவிட்டால், வீணாகவே நீங்கள் விசுவாசித்தீர்கள்.
நான் பெற்றுக்கொண்டதும், மிக முக்கியமானதும் என்று கருதி உங்களுக்கு ஒப்படைத்ததாவது: வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கிறபடியே, கிறிஸ்து நமது பாவங்களுக்காக இறந்து. அவர் அடக்கம் செய்யப்பட்டு, வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி, அவர் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் கேபாவுக்கு காட்சியளித்தார். பின்பு பன்னிரண்டு அப்போஸ்தலருக்கும் காட்சியளித்தார். அதற்குப் பின்பு, அவர் ஒரே நேரத்தில் ஐந்நூறுக்கும் அதிகமான சகோதரர்களுக்கும் காட்சியளித்தார். அவர்களில் பலர் இன்னும் உயிருடனேயே இருக்கிறார்கள். ஆனால் சிலர் மரண நித்திரையடைந்து விட்டார்கள். பின்பு அவர், யாக்கோபுக்கு காட்சியளித்தார். அதற்குப் பின்பு அவர் எல்லா அப்போஸ்தலர்களுக்கும் காட்சியளித்தார். இறுதியாக, குறைமாதத்தில் பிறந்த பிள்ளை போன்ற எனக்குங்கூட காட்சியளித்தார்.
ஏனெனில், அப்போஸ்தலரில் நானே மிகச்சிறியவன். நான் அப்போஸ்தலன் என்று அழைக்கப்படத் தகுதியுடையவனும் அல்ல. ஏனெனில் நான் இறைவனுடைய திருச்சபையைத் துன்புறுத்துகிறவனாய் இருந்தேனே. 10 ஆனால் இறைவனுடைய கிருபையினாலேயே, நான் இப்பொழுது இந்நிலையில் இருக்கிறேன். அவர் எனக்குக் கொடுத்த கிருபை வீணாய்ப் போகவில்லை. மற்ற அப்போஸ்தலர் எல்லோரையும்விட, நான் அதிகம் பாடுபட்டு ஊழியம் செய்தேன். ஆனால், அந்த ஊழியத்தைச் செய்தது நான் அல்ல, எனக்குள் செயலாற்றுகின்ற இறைவனுடைய கிருபையே அதைச் செய்கிறது. 11 எனவே நானாயிருந்தாலென்ன, அவர்களாயிருந்தாலென்ன, இந்த நற்செய்தியையே நாங்கள் எல்லோரும் பிரசங்கிக்கிறோம். இதையே நீங்கள் விசுவாசித்தீர்கள்.
இறந்தோரின் உயிர்த்தெழுதல்
12 ஆனால், கிறிஸ்து இறந்தோரிலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டார் என்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை என்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்? 13 இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை என்றால், கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லையே. 14 கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நாங்கள் பிரசங்கம் செய்வதும் வீண். உங்கள் விசுவாசமும் வீணானதே. 15 அதுவுமல்லாமல், இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படவில்லை என்பது உண்மையானால், இறைவன் கிறிஸ்துவையும் உயிருடன் எழுப்பவில்லை என்றே அர்த்தமாகிறது. எனவே, இறைவன் கிறிஸ்துவை உயிருடன் எழுப்பினார் என்று நாங்கள் சாட்சி கூறியிருக்கிறபடியால், நாங்கள் இறைவனைப்பற்றி பொய்ச்சாட்சி சொல்கிறவர்களாய் காணப்படுவோமே. 16 ஏனெனில், இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகிறது இல்லையென்றால், கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை. 17 கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், உங்களுடைய விசுவாசமும் பயனற்றது; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களிலேயே இருக்கிறீர்கள். 18 அப்படியானால், கிறிஸ்துவில் மரண நித்திரையானவர்களுங்கூட அழிந்துபோனார்கள். 19 இவ்வுலக வாழ்வுக்காக மாத்திரமே நாம் கிறிஸ்துவில் நம்பிக்கைகொண்டவர்களாய் இருந்தால், எல்லா மனிதருக்குள்ளும் நாமே மிகவும் பரிதாபத்திற்குள்ளானவர்கள் ஆவோம்.
20 ஆனால் உண்மையிலேயே கிறிஸ்து மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டிருக்கிறார். மரண நித்திரை அடைந்தவர்களில், அவரே முதற்கனி ஆவார். 21 ஏனெனில் ஒரு மனிதனின் வழியாக மரணம் வந்தது போலவே, ஒரு மனிதனின் வழியாக இறந்தவர்களின் உயிர்த்தெழுதலும் வருகிறது. 22 ஆதாமுக்குள் எல்லோரும் இறந்து போகிறதுபோல, கிறிஸ்துவில் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். 23 ஆனால் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய ஒழுங்கு வரிசையின்படியே உயிருடன் எழுப்பப்படுவார்கள்: கிறிஸ்துவே முதற்கனி; அதற்குப் பின்பு அவர் மீண்டும் வரும்போது, அவருக்குரியவர்கள் உயிருடன் எழுப்பப்படுவார்கள். 24 அப்பொழுது முடிவுவரும். கிறிஸ்து எல்லா ஆட்சிகளையும், அதிகாரங்களையும், வல்லமைகளையும் அழித்துவிட்டு, பிதாவாகிய இறைவனிடம் அரசை ஒப்படைப்பார். 25 எனவே, எல்லாப் பகைவர்களையும் இறைவன் கிறிஸ்துவினுடைய கால்களின்கீழ் போடும் வரைக்கும், கிறிஸ்துவே ஆளுகை செய்யவேண்டும். 26 அழிக்கப்பட வேண்டிய கடைசிப் பகைவன், மரணமே. 27 ஏனெனில் இறைவன், “எல்லாவற்றையும்” அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினார்* என்று எழுதியிருக்கிறது. “எல்லாம்” அவருக்குக் கீழாக கொண்டுவரப்பட்டிருக்கின்றன என்று சொல்லும்போது, அது இறைவனை உள்ளடக்கவில்லை என்பது தெளிவாகின்றது. ஏனெனில், இறைவனே எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படுத்தினார். 28 அவர் இவற்றையெல்லாம் செய்தபின்பு, மகனாகிய அவரும் எல்லாவற்றையும் தனக்குக் கீழ்ப்படுத்தியவருக்குத் தன்னைக் கீழ்ப்படுத்துவார். எனவே, இறைவனே எல்லாவற்றிலும் எல்லாமாய் இருப்பார்.
29 உயிர்த்தெழுதல் இல்லையெனில், இறந்தவர்களின் சார்பாக திருமுழுக்கு பெற்றுக்கொள்கிறவர்கள் என்ன செய்வார்கள்? இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படுவதில்லை என்றால், இறந்தவர்களின் சார்பாக மற்றவர்கள் ஏன் திருமுழுக்கு பெற்றுக்கொள்கிறார்கள்? 30 நாங்களும் ஏன் ஒவ்வொரு மணிநேரமும் ஆபத்துக்கு உள்ளாகிறோம்? 31 ஒவ்வொரு நாளும் நான் சாவை சந்திக்கிறேன். இது உண்மையே. நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் உங்கள்மேல் நான் கொண்டுள்ள பெருமையைப்போல், அதுவும் உண்மையே. 32 நான் எபேசுவில் உலக வாழ்வுக்காக மாத்திரம் கொடிய மிருகங்களோடு போராடியிருந்தால், எனக்குக் கிடைத்த பலன் என்ன? இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படுவதில்லை என்றால்,
“நாமும் உண்போம் குடிப்போம்,
நாளைக்குச் சாவோம்”
என்று சொல்லலாமே.
33 ஏமாந்து போகவேண்டாம்: “கெட்டவர்களின் நட்பு நல்லொழுக்கங்களைக் கெடுத்துவிடும்.” 34 ஆகவே, புத்தியாய் நடவுங்கள். பாவம் செய்வதை நிறுத்துங்கள். உங்களில் சிலர் இறைவனைப்பற்றிய அறிவு இல்லாதவர்களாய் இருக்கிறார்கள். இதை உங்களுக்கு வெட்கம் உண்டாகும்படியே நான் சொல்கிறேன்.
உயிர்த்தெழுந்த உடல்
35 ஆனால், “இறந்தவர்கள் எப்படி உயிருடன் எழுப்பப்படுவார்கள்? அவர்கள் எப்படியான உடலைப் பெற்றுக்கொள்வார்கள்?” என்று சிலர் கேட்கலாம். 36 இது மூடத்தனமான கேள்வியே. நீங்கள் விதைக்கின்ற விதை, முதலில் செத்தால்தானே அது முளைவிட்டு வளரும். 37 நீங்கள் விதைக்கும்போது, முழு வளர்ச்சி பெறப்போகும் செடியை நீங்கள் விதைக்கவில்லையே. நீங்கள் வெறும் விதையையே விதைக்கிறீர்கள். அது கோதுமையாகவோ, அல்லது வேறு தானியமாகவோ இருக்கலாம். 38 இறைவனே தாம் தீர்மானித்தபடி, அதற்கு உடலைக் கொடுக்கிறார். ஒவ்வொருவிதமான விதைக்கும், அதற்குச் சொந்தமான உடலை அவர் கொடுக்கிறார். 39 உயிரினங்களின் சதைகள் எல்லாம் ஒரே விதமானவை அல்ல: மனித உடலின் சதை ஒரு விதமானது, மிருகங்களுக்கு ஒருவிதமும், பறவைகளுக்கு இன்னொரு விதமும், மீன்களுக்கு மற்றொரு விதமாகவும் சதையுள்ளது. 40 வானுலக உருவங்களும் உண்டு, பூவுலக உருவங்களும் உண்டு. வானுலக உருவங்களின் சிறப்பு ஒரு விதமானது, பூவுலக உருவங்களின் சிறப்பு இன்னொரு விதமானது. 41 சூரியனின் சிறப்பு ஒரு விதமானது, சந்திரனின் சிறப்பு மற்றொரு விதமானது, நட்சத்திரங்களின் சிறப்பும் இன்னொரு விதமானது; நட்சத்திரங்களும்கூட சிறப்பில் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகிறது.
42 இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படும்போது, இவ்விதமாகவே இருக்கும். புதைக்கப்படும் உடல் அழிவுக்குரியது, அது அழியாமைக்குரியதாய் எழுப்பப்படுகிறது. 43 அது மதிப்பற்றதாய் புதைக்கப்படுகிறது, மகிமையில் எழுப்பப்படுகிறது. அது பலவீனமானதாய் புதைக்கப்படுகிறது, பலமுள்ளதாய் எழுப்பப்படுகிறது. 44 அது இயற்கை உடலாய்ப் புதைக்கப்படுகிறது, ஆவிக்குரிய உடலாய் எழுப்பப்படுகிறது.
மனிதனுக்கு இயற்கை உடல் இருப்பதுபோலவே, ஆவிக்குரிய உடலும் இருக்கிறது. 45 ஏனெனில் எழுதப்பட்டிருக்கிறபடி: “முதல் மனிதனாகிய ஆதாம் உயிருள்ளவனானான்”; கடைசி ஆதாமோ, உயிர்கொடுக்கும் ஆவியானார். 46 முதலில் வந்தது ஆவிக்குரிய உடல் அல்ல, மனிதனின் இயற்கை உடலே. பின்பே ஆவிக்குரிய உடல் வந்தது. 47 முதல் மனிதன் பூமியின் புழுதியினால் ஆனவன். இரண்டாவது வந்த மனிதரோ, பரலோகத்திலிருந்து வந்தவர். 48 பூமியின் மனிதன் எப்படியோ, பூமியைச் சேர்ந்தவர்களும் அப்படியே; பரலோகத்திலிருந்து வந்தவரைப் போலவே, பரலோகத்துக்குரியவர்களும் இருக்கிறார்கள். 49 நாம் பூமியிலிருந்து படைக்கப்பட்ட மனிதனின் தன்மையை உடையவர்களாய் இருக்கிறது போலவே, நாம் பரலோகத்திற்குரிய மனிதரின் தன்மையையும் பெறுவோம்.
50 பிரியமானவர்களே, நான் உங்களுக்கு அறிவிக்கிறதாவது, மாம்சமும், இரத்தமும் இறைவனுடைய அரசை உரிமையாகப் பெற்றுக்கொள்வதில்லை. அழிவுக்குரியது அழியாமையை உரிமையாகப் பெற்றுக்கொள்ள முடியாது. 51 கேளுங்கள், நான் உங்களுக்கு ஒரு இரகசியத்தைச் சொல்கிறேன்: நாம் எல்லோரும் மரண நித்திரையடைவதில்லை. நாம் எல்லோரும் மாற்றமடைவோம். 52 கடைசி எக்காளம் தொனிக்கும்போது, கண்ணிமைக்கும் ஒரு நொடிப்பொழுதில் இது நடைபெறும். ஏனெனில், எக்காளம் தொனிக்கும்போது, இறந்து போனவர்கள் அழியாமையுடன் எழுப்பப்படுவார்கள். அப்பொழுது நாமும் மாற்றமடைவோம். 53 ஏனெனில் அழிவுக்குரியது தன்னை அழியாமையினால் உடுத்திக்கொள்ளவேண்டும். சாகும் தன்மையுடையது சாகாநிலையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 54 அழிவுக்குரியது அழியாமையை அணிந்துகொள்ளும்போதும், சாகும் தன்மையுள்ளது சாகாமையைப் பெற்றுக்கொள்ளும்போதும், எழுதப்பட்ட வசனங்கள் இவ்வாறு நிறைவேறும்: “மரணம் வெற்றியினால் விழுங்கப்பட்டது.”§
55 “மரணமே, உன் வெற்றி எங்கே? மரணமே,
துன்புறுத்தும் உன் கொடுக்கு எங்கே?”*
56 மரணத்தின் கொடுக்கு பாவம். பாவத்திற்கு பெலன் கொடுப்பது மோசேயின் சட்டமே. 57 ஆனால் இறைவனுக்கே நன்றி, அவரே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நமக்கு வெற்றியைக் கொடுக்கிறார்.
58 ஆகவே பிரியமானவர்களே! உறுதியாய் நில்லுங்கள். எதுவும் உங்களை அசைக்கிறதற்கு இடங்கொடாதேயுங்கள். கர்த்தருடைய பணிக்கே எப்பொழுதும் உங்களை முற்றுமாய் ஒப்புக்கொடுங்கள். ஏனெனில், கர்த்தரில் உங்கள் உழைப்பு வீணாகப் போகாது என்பது உங்களுக்குத் தெரியுமே.
* 15:27 சங். 8:6 15:32 சங். 22:13 15:45 ஆதி. 2:7 § 15:54 ஏசா. 25:8 * 15:55 ஓசி. 13:14