3
திருச்சபையின் பிரிவுகள்
பிரியமானவர்களே, நான் ஆவிக்குரியவர்களிடம் பேசுவதைப்போல், என்னால் உங்களுடன் பேச முடியவில்லை. உலகப்பிரகாரமானவர்களாக, கிறிஸ்துவில் குழந்தைகள் என்று எண்ணியே பேச வேண்டியதாயிற்று. நான் உங்களுக்குப் பாலையே கொடுத்தேன். பலமான உணவை உங்களுக்குக் கொடுக்கவில்லை. ஏனெனில், நீங்கள் அதை உட்கொள்ளக்கூடிய நிலையில் இருக்கவில்லை. இன்னும் நீங்கள் அதை உட்கொள்ள முடியாதவர்களாகவே இருக்கிறீர்கள். ஏனெனில், இன்னமும் உலகத்திற்குரியவர்களாகவே இருக்கிறீர்கள். இன்னும் உங்களிடையே பொறாமையும் சண்டை சச்சரவுகளும் இருக்கிறபடியால், நீங்கள் உலகத்திற்குரியவர்கள்தானே. நீங்கள் சாதாரண மனிதர்களைப்போல் அல்லவா நடந்துகொள்கிறீர்கள்? “நான் பவுலைப் பின்பற்றுகிறவன்” என்று ஒருவன் சொல்லும்போது, மற்றவன், “நான் அப்பொல்லோவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான். அப்படியென்றால், நீங்கள் சாதாரண மனித இயல்பின்படிதானே நடந்துகொள்கிறீர்கள்.
அப்பொல்லோ யார்? பவுல் யார்? உங்களை விசுவாசத்திற்கு வழிநடத்திய கர்த்தரின் ஊழியர்கள்தானே. அப்படியே ஒவ்வொருவரும் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த பணியையே அவர்கள் செய்கிறார்கள். நான் விதையை நட்டேன், அப்பொல்லோ தண்ணீர் ஊற்றினான், ஆனால் இறைவனே அதை வளரச்செய்தார். எனவே நடுகிறவனும், தண்ணீர் ஊற்றுகிறவனும் முக்கியமானவர்களல்ல. அவற்றை வளரச்செய்கிற இறைவன் மட்டுமே முக்கியமானவர். நடுகிறவனுக்கும் தண்ணீர் ஊற்றுகிறவனுக்கும் ஒரே நோக்கமே உண்டு. அவர்கள் ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ற கூலியைப் பெறுவார்கள். நாங்கள் இறைவனின் உடன் வேலையாட்கள்; நீங்களோ இறைவனின் வயல்நிலம், இறைவனின் கட்டிடம்.
10 இறைவன் எனக்குத் தந்த கிருபையின்படி, ஒரு கட்டிட நிபுணனைப்போல நான் ஓர் அஸ்திபாம் போட்டேன். வேறு ஒருவன் அதன்மேல் கட்டுகிறான். ஆனால் ஒவ்வொருவனும், தான் எவ்வாறு கட்டுகிறான் என்பதைக்குறித்துக் கவனமாயிருக்க வேண்டும். 11 ஏற்கெனவே போடப்பட்ட அஸ்திபாரத்தைத் தவிர, வேறு அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் முடியாது. அந்த அஸ்திபாரம் இயேசுகிறிஸ்துவே. 12 யாராவது இந்த அஸ்திபாரத்தின்மேல் கட்டும்போது தங்கம், வெள்ளி, மாணிக்கக் கற்கள், மரம், புல், அல்லது வைக்கோல் ஆகியவற்றைக்கொண்டு கட்டலாம். 13 ஆனால் கிறிஸ்துவின் நாளில், அவனவனுடைய வேலைப்பாடு உண்மையாகவே எப்படியானது என்று வெளிப்படும். அது நெருப்பினால் வெளிப்படுத்தப்படும். மேலும், ஒவ்வொரு மனிதனுடைய வேலையின் தரத்தையும் நெருப்பு பரிசோதிக்கும். 14 அவன் கட்டியது நிலைத்திருந்தால், அவன் தனக்குரிய வெகுமதியைப் பெறுவான். 15 அவன் கட்டியது எரிந்துபோகுமாயின், அவன் நஷ்டமடைவான்; ஆனால் அவனோ இரட்சிக்கப்படுவான். ஆயினும் அவனுடைய நிலை அக்கினி ஜுவாலையில் அகப்பட்டுத் தப்பிய ஒருவனைப்போல் இருக்கும்.
16 நீங்கள் இறைவனின் ஆலயமாயிருக்கிறீர்கள் என்றும், இறைவனுடைய ஆவியானவர் உங்களுக்குள் குடிகொண்டிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? 17 யாராகிலும் ஒருவன் இறைவனுடைய ஆலயத்தை அழித்தால், இறைவன் அவனை அழித்துப்போடுவார். ஏனெனில், இறைவனின் ஆலயம் பரிசுத்தமானது; நீங்களே அந்த ஆலயம்.
18 உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதிருங்கள். உங்களில் யாராவது ஒருவன் இவ்வுலக மதிப்பீட்டின்படி, தன்னை உண்மையாகவே ஞானமுள்ளவன் என எண்ணினால் அவன் மூடனாக வேண்டும். அப்பொழுதே அவன் ஞானமுள்ளவனாவான். 19 இவ்வுலகத்தின் ஞானம் இறைவனின் பார்வையில் மூடத்தனமாயிருக்கிறது. எழுதியிருக்கிறபடி: “இறைவன் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலேயே பிடிக்கிறார்.”* 20 மேலும், “ஞானிகளுடைய சிந்தனைகள் வீணானவைகள் என்று கர்த்தர் அறிவார்” எனவும் எழுதப்பட்டிருக்கிறது. 21 எனவே, இனிமேல் மனிதர்களைக்குறித்துப் பெருமைகொள்ள வேண்டாம்! எல்லாக் காரியங்களும் உங்களுடையவைதான். 22 பவுலானாலும், அப்பொல்லோவானாலும், கேபாவானாலும், அவர்கள் எல்லோரும் உங்களுடையவர்களே. இந்த உலகமானாலும், வாழ்வானாலும், மரணமானாலும், நிகழ்காலமானாலும், எதிர்காலமானாலும், அவையெல்லாமே உங்களுடையதே. 23 நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள், கிறிஸ்து இறைவனுக்குரியவர்.
* 3:19 யோபு 5:13 3:20 சங். 94:11