12
பவுலுடைய தரிசனமும் முள்ளும்
நான் இன்னும் பெருமை பேசவேண்டுமானால் பேசுவேன். ஆனால், அதனால் நன்மை ஏதும் இல்லை. அப்படியானால் கர்த்தர் எனக்குக் கொடுத்த தரிசனங்களையும் வெளிப்பாடுகளையுங்குறித்து நான் சொல்வேன். கிறிஸ்துவில் இருந்த ஒரு மனிதனை எனக்குத் தெரியும். அவன் பதினான்கு வருடங்களுக்கு முன்பதாக மூன்றாம் பரலோகம் வரைக்கும், அதாவது பரலோகத்தின் உயர்ந்த இடங்கள்வரைக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டான். அப்படி எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவன் தன் உடலின்றி சென்றானோ, அல்லது உடலைவிட்டுச் சென்றானோ நான் அறியேன். இறைவனே அதை அறிவார். நான் மீண்டும் சொல்கிறேன், இந்த மனிதனை எனக்குத் தெரியும். ஆனால் அவன் தனது உடலின்றி போனானோ, உடலைவிட்டுப் போனானோ, நான் அறியேன். இறைவனே அதை அறிவார். இந்த மனிதன் சொர்க்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டான் என்பது எனக்குத் தெரியும். அங்கே அவன் வார்த்தைகளால் விவரிக்க முடியாத காரியங்களைத் தன் காதுகளால் கேட்டான். அவை மனிதரால் சொல்லவும் உச்சரிக்கவும் அனுமதிக்கப்படாதவை. இப்படிப்பட்ட மனிதனைக் குறித்தே நான் பெருமை பேசுவேன். ஆனால் என்னைக்குறித்தோ, என் பெலவீனங்களைத்தவிர வேறு எதிலும் பெருமை பேசமாட்டேன். அப்படி நான் பெருமை பேச விரும்பினாலும், அது முட்டாள்தனமாய் இராது. ஏனெனில் நான் உண்மையையே பேசுவேன். ஆனால் நான் அப்படிச் செய்யமாட்டேன். ஏனெனில் ஒருவனும், நான் என் வாழ்வில் உண்மையாய் செய்தவற்றையும், சொல்லிப் போதித்தவற்றையும்விட மேலாக என்னைக்குறித்து எண்ணக்கூடாது. ஆனால் எனக்குக் கொடுக்கப்பட்ட ஒப்பற்ற மேன்மையான வெளிப்பாடுகளின் காரணமாக, பெருமைகொள்ளாதபடி எனது உடலில் ஒருமுள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது என்னைத் துன்புறுத்தும்படி சாத்தானால் அனுப்பப்பட்ட தூதுவனாயிருக்கிறது. அதை என்னைவிட்டு நீக்கும்படி மூன்றுமுறை நான் கர்த்தரிடம் கெஞ்சிக்கேட்டேன். ஆனால் அவர் என்னிடம், “என்னுடைய கிருபை உனக்குப் போதும். ஏனெனில் உன் பெலவீனத்தில், என் வல்லமை முழு நிறைவாக விளங்கும்” என்றார். எனவே நான் எனது பெலவீனங்களைக் குறித்து இன்னும் அதிக மகிழ்ச்சியுடன் பெருமையாய்ப் பேசுவேன். இவ்விதமாக கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கட்டும். 10 அந்தப்படியே கிறிஸ்துவின் நிமித்தம் நான் அனுபவித்த பெலவீனங்களைக் குறித்தும், அவமானங்களைக் குறித்தும், பாடுகளைக் குறித்தும், துன்புறுத்தல்களைக் குறித்தும், பாடுகளைக் குறித்தும், நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் நான் பெலவீனமுள்ளவனாய் இருக்கும்போது பெலமுள்ளவனாய் இருக்கிறேன்.
கொரிந்தியரில் பவுலின் அக்கறை
11 நான் என்னை ஒரு முட்டாள் ஆக்கினேன். ஆனால் நீங்களே என்னை அந்நிலைக்கு உள்ளாக்கினீர்கள். நீங்கள் என்னைப் பாராட்டியிருக்க வேண்டும். நான் ஒன்றுமில்லை என்றாலும், உங்களுடைய இந்த “மாண்புமிகு அப்போஸ்தலர்களைவிட” எவ்விதத்திலும் குறைந்தவனுமல்ல. 12 நான் உங்களோடிருக்கையில் உண்மையான அப்போஸ்தலனுக்குரிய செயல்கள் உங்களிடையே தொடர்ந்து செய்யப்பட்டன. அடையாளங்களும், அற்புதங்களும், வல்லமையான செயல்களும் உங்களுக்குள் நடப்பிக்கப்பட்டதே. 13 நீங்கள் மற்றத் திருச்சபைகளைவிட, எந்த வகையில் குறைவாக நடத்தப்பட்டீர்கள்? நான் உங்களுக்கு ஒரு சுமையாய் இருக்காதது மட்டும்தானே! அந்தத் தவறை எனக்கு மன்னித்து விடுங்கள்.
14 இப்பொழுதும் நான் மூன்றாவது முறையாக உங்களிடம் வர ஆயத்தமாய் இருக்கிறேன். ஆனால், உங்களுக்குச் சுமையாய் இருக்கமாட்டேன். ஏனெனில் நான் உங்களுடைய உடைமைகளையல்ல, உங்களையே விரும்புகிறேன். பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்காக சேமித்துவைக்க வேண்டியதில்லை. பெற்றோரே தங்கள் பிள்ளைகளுக்காக சேமித்துவைக்க வேண்டும். 15 எனவே நான் உங்களுக்காக மிக்க மகிழ்ச்சியோடு, எனக்குள்ள எல்லாவற்றையும் செலவு செய்வேன். என்னையும் இழக்க ஆயத்தமாயிருக்கிறேன். நான் இவ்வாறு உங்களில் அதிகம் அன்பாயிருக்கும் போது, நீங்கள் என்னில் குறைவான அன்பு செலுத்தலாமா? 16 அப்படியிருந்தாலும், நான் உங்களுக்குச் சுமையாயிருக்கவில்லை என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? ஆனால் நான் உங்களில் சிலரை, தந்திரமாய் உங்களை வளைத்துப் பிடித்தேன் என்றும் சொல்லப்படுகிறது. 17 நான் உங்களிடம் அனுப்பியவர்களின் மூலமாக உங்களிடமிருந்து எதையாவது சுரண்டி எடுத்தேனா? 18 உங்களிடம் போகும்படி நானே தீத்துவைக் கேட்டுக்கொண்டேன். அவனுடன் மற்றச் சகோதரனையும் அனுப்பினேன். தீத்து உங்களிடமிருந்து எதையாவது சுரண்டிப் பிழைத்தான் என்று உங்களால் சொல்லமுடியுமா? நாங்கள் உங்களுடனே ஒரே ஆவியுள்ளவர்களாய் நடந்துகொள்ளவில்லையா? ஒரே பாதையைப் பின்பற்றவில்லையா?
19 உங்களுக்கு முன்பாக எங்களைக் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க முயலுகிறோமென்றா நீங்கள் இதுவரை எண்ணியிருக்கிறீர்கள்? இறைவனுடைய பார்வையில், கிறிஸ்துவில் உள்ளவர்களாகவே நாங்கள் பேசியிருக்கிறோம்; அன்பான நண்பரே, உங்களைக் கட்டியெழுப்புவதற்காகவே நாங்கள் எல்லாவற்றையும் செய்கிறோம். 20 ஒருவேளை நான் உங்களிடம் வரும்போது, நான் விரும்புகிறபடி நீங்கள் இருப்பீர்களோ என்னவோ, நானும் நீங்கள் விரும்புகிறபடி நடந்துகொள்ளாமல் இருப்பேனோ என்னவோ என்று நான் பயப்படுகிறேன். உங்களிடையே வாக்குவாதங்களும், பொறாமையும், கோபங்களும், சுயநலமும், அவதூறு பேசுதலும், புறங்கூறுதலும், அகங்காரமும், ஒழுங்கீனமும், இருக்குமோ என்றும் பயப்படுகிறேன். 21 நான் மீண்டும் உங்களிடம் வரும்போது, என்னுடைய இறைவன் உங்களுக்கு முன்பாக என்னைச் சிறுமைப்படுத்துவாரோ என்று, நான் பயப்படுகிறேன். உங்களில் பலர் முன்பு செய்த பாவங்களாகிய அசுத்தத்தையும், பாலியல் சம்பந்தமான பாவத்தையும், காமவெறியையும் விட்டு, ஒருவேளை மனந்திரும்பாதிருக்கலாம். அப்படியானவர்களைக் குறித்து நான் துக்கப்பட வேண்டியிருக்குமோ என்றும் பயப்படுகிறேன்.