12
ஒரே வழிபாட்டிடம்
உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா, நீங்கள் உங்களுக்கு உரிமையாக்கிக்கொள்ளும்படி உங்களுக்குக் கொடுத்திருக்கிற நாட்டில் வாழும் காலமெல்லாம், நீங்கள் கைக்கொள்ளும்படி கவனமாயிருக்கவேண்டிய விதிமுறைகளும் சட்டங்களும் இவையே: அங்கே நீங்கள் வெளியேற்றும் நாடுகள் வழிபட்ட உயர்ந்த மலைகளிலும், குன்றுகளின்மேலும், படர்ந்த ஒவ்வொரு மரங்களின் கீழும் இருக்கும் தெய்வங்களின் வழிபாட்டிடங்களை எல்லாம் நீங்கள் முற்றிலும் அழித்துப்போடுங்கள். அவர்களுடைய பலிபீடங்களை உடைத்து, அவர்களுடைய புனிதக் கற்களை நொறுக்கி, அசேரா விக்கிரகக் கம்பத்தை நெருப்பில் எரித்துப்போடுங்கள். அவர்களுடைய தெய்வங்களின் விக்கிரகங்களை வெட்டி வீழ்த்தி, அந்த இடங்களிலிருந்து அவர்களுடைய பெயர்களையே இல்லாமல் செய்துவிடுங்கள்.
நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவை அவர்களுடைய வழிகளில் வழிபடக்கூடாது. நீங்களோ உங்கள் இறைவனாகிய யெகோவா எல்லா கோத்திரங்களிலிருந்தும் தமது உறைவிடமாகத் தெரிந்துகொண்டு, தமது பெயரை இடுகிற அந்த இடத்தையே தேடவேண்டும். அந்த இடத்திற்கே நீங்கள் போகவேண்டும்; நீங்கள் அங்கேயே உங்கள் தகன காணிக்கைகள், பலிகள், உங்கள் பத்திலொரு பங்கு, நீங்கள் கொடுப்பதாக நேர்ந்துகொண்ட விசேஷ அன்பளிப்புகள், சுயவிருப்பு காணிக்கைகள், ஆட்டு மந்தை, மாட்டு மந்தை ஆகியவற்றின் தலையீற்றுகள் அனைத்தையும் கொண்டுவர வேண்டும். அங்கே உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குமுன், நீங்களும் உங்கள் குடும்பங்களும் சாப்பிட்டு, நீங்கள் கையிட்டுச் செய்த எல்லாவற்றையும் குறித்து மகிழ்வீர்கள். ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை ஆசீர்வதித்திருக்கிறார்.
இன்று இங்கே நாம் ஒவ்வொருவரும் நமது விருப்பப்படி நமக்குச் சரியெனப்பட்டதைச் செய்ததுபோல், அங்கே நீங்கள் செய்யக்கூடாது. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமையாகக் கொடுக்கிற இளைப்பாறும் இடத்திற்கும், உரிமைச்சொத்திற்கும் நீங்கள் போய்ச் சேரும்போது அப்படிச் செய்யக்கூடாது. 10 நீங்கள் யோர்தானைக் கடந்து உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமையாகக் கொடுக்கும் நாட்டிலேபோய் வாழப்போகிறீர்கள். அங்கே அவர் உங்களைச்சூழ உள்ள பகைவர்களிடத்தில் இருந்து உங்களுக்கு ஆறுதல் கொடுப்பார். நீங்கள் அங்கே பாதுகாப்பாய் வாழ்வீர்கள். 11 பின்பு உங்கள் இறைவனாகிய யெகோவா தமது பெயர் வழங்கும்படி தமக்கு வசிப்பிடமாகத் தெரிந்துகொள்ளும் இடத்துக்கு நீங்கள் போவீர்கள். அங்கே நான் கட்டளையிடுகிற ஒவ்வொன்றையும் கொண்டுவர வேண்டும். உங்கள் தகன காணிக்கைகளையும், பலிகளையும், உங்கள் பத்திலொரு பங்கையும், கொடைகளையும், யெகோவாவுக்குக் கொடுப்பேன் என நீங்கள் நேர்த்திக்கடன்செய்த எல்லா உடைமைகளையும் கொண்டுவாருங்கள். 12 அங்கே உங்கள் இறைவனாகிய யெகோவா முன்பாக களிகூருங்கள். நீங்களும் உங்கள் மகன்களும், மகள்களும், உங்கள் வேலைக்காரரும், வேலைக்காரிகளும் தங்களுக்கு சொந்தப் பங்கோ உரிமைச்சொத்தோ இல்லாத உங்கள் பட்டணங்களில் இருக்கும் லேவியருமான எல்லோரும் களிகூருங்கள். பலிகளுக்குரிய நிபந்தனைகள் 13 நீங்கள் விரும்பிய இடமெல்லாம் தகன காணிக்கைகளைப் பலியிடாதபடி கவனமாய் இருங்கள். 14 உங்கள் கோத்திரங்களில் யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் மட்டுமே அவற்றைச் செலுத்துங்கள். நான் கட்டளையிட்ட யாவையும் அங்கே செய்யுங்கள்.
15 ஆனாலும் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் ஆசீர்வாதத்தின்படியே, உங்கள் பட்டணங்களில் நீங்கள் உங்கள் வளர்ப்பு மிருகங்களைக் கொன்று, விரும்பிய அளவு இறைச்சியைச் சாப்பிடுங்கள். வெளிமானையும், கலைமானையும் அடித்துச் சாப்பிடுவதுபோல அடித்துச் சாப்பிடலாம். சம்பிரதாய முறைப்படி அசுத்தமாயிருக்கிறவர்களும், சுத்தமாயிருக்கிறவர்களும் அதைச் சாப்பிடலாம். 16 ஆனால் இரத்தத்தை நீங்கள் சாப்பிடக்கூடாது. தண்ணீரை ஊற்றுவது போல் அதை நிலத்தில் ஊற்றுங்கள். 17 நீங்கள் உங்கள் சொந்தப் பட்டணங்களில் உங்கள் தானியம், புதுத் திராட்சை இரசம், ஒலிவ எண்ணெய் ஆகியவற்றின் பத்திலொரு பங்கை சாப்பிடக்கூடாது. உங்கள் ஆடு, மாடு மந்தைகளின் தலையீற்றையோ அல்லது நீங்கள் நேர்ந்துகொண்ட எதையுமோ அல்லது உங்கள் சுயவிருப்பக் காணிக்கையையோ அல்லது விசேஷ கொடைகளையோ அங்கு சாப்பிடக்கூடாது. 18 பதிலாக நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா முன்பாக, உங்கள் இறைவனாகிய யெகோவா தனக்கென்று தெரிந்துகொண்ட இடத்தில் இருந்தே சாப்பிடவேண்டும். அப்படியே நீங்களும், உங்கள் மகன்களும், மகள்களும், வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும் உங்கள் பட்டணங்களில் இருக்கும் லேவியர்களும் அந்த இடத்திலிருந்தே சாப்பிடவேண்டும். உங்கள் இறைவனாகிய யெகோவா முன்பாக நீங்கள் கையிட்டுச்செய்யும் எல்லாவற்றிற்காகவும் மகிழ்ச்சியடையவேண்டும். 19 நீங்கள் உங்கள் நாட்டில் வாழும் காலமெல்லாம் லேவியரை கைவிடாதபடி கவனமாயிருங்கள்.
20 உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு வாக்குப்பண்ணியபடி, உங்கள் ஆட்சியின் எல்லையை விரிவாக்குவார். அப்பொழுது நீங்கள் இறைச்சியை விரும்பி, “எனக்கு இறைச்சி விருப்பமாயிருக்கிறது” என்று சொன்னால், நீங்கள் விரும்பிய அளவு சாப்பிடலாம். 21 உங்கள் இறைவனாகிய யெகோவா தமது பெயர் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடம் உங்களுக்கு அதிக தூரமாயிருந்தால், நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் ஆட்டு மந்தைகளிலும், மாட்டு மந்தைகளிலும் உள்ள மிருகங்களைக் கொன்று, உங்கள் சொந்தப் பட்டணங்களில் நீங்கள் விரும்பிய அளவு அவற்றைச் சாப்பிடலாம். 22 வெளிமானையோ, கலைமானையோ சாப்பிடுவதுபோல அதைச் சாப்பிடுங்கள். சம்பிரதாய முறைப்படி அசுத்தமானவர்களும், சுத்தமானவர்களும் அதைச் சாப்பிடலாம். 23 ஆனால் இரத்தத்தைச் சாப்பிடாமல் இருக்கக் கவனமாயிருங்கள். ஏனெனில் இரத்தமே உயிர். நீங்கள் உயிரை இறைச்சியுடன் சாப்பிடக்கூடாது. 24 நீங்கள் இரத்தத்தைச் சாப்பிடக்கூடாது. அதை நிலத்திலே தண்ணீரைப்போல் ஊற்றுங்கள். 25 அதைச் சாப்பிடாதீர்கள். அப்பொழுது நீங்களும், உங்கள் பிள்ளைகளும் நலமாயிருப்பீர்கள். ஏனெனில் யெகோவாவின் பார்வையில் எது சரியானதோ அதையே நீங்கள் செய்வீர்கள்.
26 ஆனால் அர்ப்பணிக்கப்பட்ட உங்கள் பொருட்களையும், கொடுப்பதற்காக நீங்கள் நேர்ந்துகொண்டதையும் எடுத்துக்கொண்டு யெகோவா தெரிந்துகொண்ட இடத்திற்குப் போங்கள். 27 அங்கே உங்கள் இறைவனாகிய யெகோவாவின் பலிபீடத்தின்மேல் உங்கள் தகன காணிக்கைகளைச் செலுத்துங்கள். இறைச்சியும், இரத்தமுமான இரண்டையும் பலி செலுத்துங்கள். உங்கள் பலிகளின் இரத்தம் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் பலிபீடத்தின் அருகில் ஊற்றப்படவேண்டும். இறைச்சியை நீங்கள் சாப்பிடலாம். 28 இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற இந்த எல்லா நியமங்களுக்கும் கீழ்ப்படியக் கவனமாயிருங்கள். அப்பொழுது நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நலமாயிருப்பீர்கள். ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் பார்வையில் நல்லதையும், சரியானதையும் செய்து கொண்டிருப்பீர்கள்.
29 நீங்கள் படையெடுத்து வெளியேற்றப்போகும் நாடுகளை உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு முன்பாக அழித்துப்போடுவார். ஆனால் அவர்களை நீங்கள் துரத்தி, அவர்களுடைய நாட்டில் குடியிருக்கையில், 30 அவர்கள் அழிக்கப்பட்ட பின்பும் நீங்கள் கவனமாய் இருங்கள். “இந்த நாடுகள் தங்கள் தெய்வங்களுக்கு எப்படிப் பணிசெய்கிறார்கள்? நாங்களும் அப்படியே செய்வோம்” என்று சொல்லி, அவர்களுடைய தெய்வங்களைப்பற்றி விசாரிப்பதன் மூலம் அவர்களுடைய கண்ணியில் சிக்கிக்கொள்ளாமல் கவனமாய் இருங்கள். 31 உங்களுடைய இறைவனாகிய யெகோவாவை அவர்களுடைய வழியில் வழிபடக்கூடாது. ஏனெனில், அவர்களுடைய தெய்வ வழிபாட்டில், யெகோவா வெறுக்கும் எல்லா வகையான அருவருப்பையும் அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் தங்கள் மகன்களையும், மகள்களையும்கூட தங்கள் தெய்வங்களுக்குப் பலியாக நெருப்பில் எரிக்கிறார்கள்.
32 நான் உங்களுக்குக் கட்டளையிடுகிற எல்லாவற்றின்படியும் செய்யக் கவனமாயிருங்கள்; அவற்றுடன் ஒன்றையும் கூட்டவோ, அவற்றிலிருந்து ஒன்றையும் குறைக்கவோ வேண்டாம்.