25
அம்மோனுக்கு எதிரான இறைவாக்கு
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. “மனுபுத்திரனே, நீ அம்மோனியருக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி அவர்களுக்கு விரோதமாய் இறைவாக்கு உரைத்து. அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ஆண்டவராகிய யெகோவா சொல்வதைக் கேளுங்கள். ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. என் பரிசுத்த ஆலயம் தூய்மைக் கேடாக்கப்பட்டபோதும், இஸ்ரயேல் பாழாக்கப்பட்டபோதும், யூதா மக்கள் நாடுகடத்தப்பட்டபோதும் “ஆகா!” என்று நீங்கள் சொன்னீர்கள் அல்லவா? ஆகவே நான் உங்களைக் கீழ்த்திசையைச் சேர்ந்த மக்களுக்கு உரிமையாகக் கொடுக்கப்போகிறேன். அவர்கள் உங்கள் மத்தியில் தங்களுக்கு முகாம்களை அமைத்துத் தங்கள் கூடாரங்களையும் போடுவார்கள். உங்கள் பழங்களைச் சாப்பிட்டு, உங்கள் பாலைக் குடிப்பார்கள். நான் ரப்பா பட்டணத்தை ஒட்டகங்களின் மேய்ச்சலிடமாக மாற்றுவேன். அம்மோனை செம்மறியாடுகளின் இளைப்பாறுகிற இடமாகவும் மாற்றுவேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நீங்கள் கைகொட்டி, துள்ளிக் குதித்து, இஸ்ரயேல் நாட்டுக்கு விரோதமாக உங்கள் மனதில் தீய எண்ணங்கொண்டு மகிழ்ந்தீர்கள். ஆகவே நான் உங்களுக்கு விரோதமாய் என் கையை நீட்டி, பல நாடுகளுக்கும் கொள்ளைப்பொருளாக உங்களை ஒப்புவிப்பேன். உங்களைப் பல நாடுகளிலிருந்தும் வேரறுத்து, நாடுகளிலிருந்து முற்றிலும் அழிப்பேன். நான் உங்களை அழிப்பேன். அப்பொழுது நானே யெகோவா’ ” என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
மோவாபுக்கு எதிரான இறைவாக்கு
“ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: ‘ “பாருங்கள் யூதா குடும்பத்தார் மற்ற எல்லா ஜனங்களைப் போலானார்கள்” என மோவாபும் சேயீரும் சொன்னார்களே. ஆகவே நான் மோவாபின் மலைப்பக்கங்களை பகைவர்கள் தாக்க அனுமதிப்பேன். அவர்கள் அந்த நாட்டின் மகிமையான எல்லைப் பட்டணங்களான பெத்யெசிமோத், பாகால் மெயோன், கீரியாத்தாயீம் ஆகியவற்றைத் தாக்குவார்கள். 10 மோவாபியரை அம்மோனியரோடுகூட கீழ்த்திசை மக்களுக்கு உரிமையாகக் கொடுப்பேன். அப்பொழுது அம்மோனியர் பல நாடுகளுக்குள்ளும் நினைக்கப்படமாட்டார்கள். 11 நான் மோவாபியரையும் தண்டிப்பேன். அப்பொழுது அவர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள்.’ ”
ஏதோமுக்கு எதிரான இறைவாக்கு
12 “ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: ‘ஏதோம் யூதா வீட்டாரைப் பழிவாங்கி, அதன் காரணமாக பெரும் குற்றவாளியாகிவிட்டது. 13 ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் ஏதோமுக்கெதிராக எனது கரத்தை நீட்டி, அதன் மனிதரையும் அவர்களுடைய மிருகங்களையும் கொல்லுவேன். அதை நான் பாழாக்குவேன். அங்குள்ளோர் தேமானிலிருந்து தேதான்வரை வாளினால் மடிவார்கள். 14 நான் என் மக்களாகிய இஸ்ரயேலரின் கைகளினால் ஏதோமைப் பழிவாங்குவேன். அவர்கள் என் கோபத்திற்கும் கடுங்கோபத்திற்கும் ஏற்றபடி ஏதோமுக்குச் செய்வார்கள். அப்பொழுது நான் பழிவாங்குவது இன்னதென்று அறிந்துகொள்வார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.’ ”
பெலிஸ்தியாவுக்கு எதிரான இறைவாக்கு
15 “ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. ‘பெலிஸ்தியர் பழைய பகையினிமித்தம் யூதாவை அழிக்க எண்ணி, தங்கள் உள்ளத்தின் தீய எண்ணங்களால் பழிவாங்கினார்கள். 16 ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் பெலிஸ்தியருக்கு விரோதமாய் எனது கரத்தை நீட்டப்போகிறேன். கிரேத்தியரை நான் வேரோடழிப்பேன். கடற்கரையில் எஞ்சி இருப்பவர்களையும் அழிப்பேன். 17 நான் அவர்களைக் கொடுமையாய்ப் பழிவாங்கி, என் கோபத்தில் அவர்களைத் தண்டிப்பேன். அவர்களை நான் பழிவாங்கும்போது, நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்’ ” என்றார்.