2
எஸ்தர் அரசியாதல்
அகாஸ்வேரு அரசனின் கோபம் தணிந்தபின்பு, அவன் வஸ்தியையும், அவள் செய்ததையும், அவளுக்குத் தான் பிறப்பித்த ஆணையையும் நினைவிற்கொண்டான். அப்பொழுது அரசனின் அந்தரங்க ஏவலாட்கள் கூறிய ஆலோசனையாவது: “அரசனுக்காக அழகிய இளம் கன்னிகைகளைக் தேடிப்பார்ப்போம். சூசானிலுள்ள கோட்டைப் பட்டணத்திலிருக்கும் அந்தப்புரத்திற்கு அந்த அழகிய இளம்பெண்களையெல்லாம் கொண்டுவரும்படி, அரசர் தம்முடைய ஆளுகைக்கு உட்பட்ட, எல்லா நாடுகளிலும் மேற்பார்வையாளர்களை நியமிப்பாராக. பெண்களுக்குப் பொறுப்பாயிருக்கிற, அரசனின் அதிகாரியான யேகாயின் பராமரிப்பின்கீழ் அப்பெண்கள் வைக்கப்படட்டும். அங்கு அவர்கள் அழகுபடுத்தப்படுவார்களாக. பின்பு அரசருக்குப் பிரியமாயிருக்கிற இளம்பெண், வஸ்திக்குப் பதிலாக அரசியாயிருக்கட்டும்” என்றார்கள். இந்த ஆலோசனை அரசனுக்குப் பிரியமாயிருந்ததால், அதை அவன் நடைமுறைப்படுத்தினான்.
அக்காலத்தில் சூசான் கோட்டைப் பட்டணத்தில் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த, மொர்தெகாய் என்னும் பெயருடைய ஒரு யூதன் இருந்தான். இவன் யாவீரின் மகன், யாவீர் சீமேயின் மகன், சீமேயி கீசின் மகன். இந்த மொர்தெகாய், யூதா அரசன் எகொனியாவுடன்*, பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரினால் எருசலேமிலிருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களோடுகூட நாடு கடத்தப்பட்டிருந்தவன். மொர்தெகாய்க்கு அத்சாள் என்னும் பெயருடைய ஒன்றுவிட்ட சகோதரி ஒருத்தி இருந்தாள். அவளுக்கு தாய் தகப்பன் இல்லாததினால் அவளை இவன் வளர்த்தான். அவள் எஸ்தர் என்றும் அழைக்கப்பட்டாள். இந்தப் பெண் வடிவத்திலும், தோற்றத்திலும் மிகவும் அழகுள்ளவளாயிருந்தாள். அவளுடைய தகப்பனும் தாயும் இறந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் சொந்த மகளாக எடுத்து வளர்த்தான்.
அரசனுடைய உத்தரவும் கட்டளையும் அறிவிக்கப்பட்டபோது, அநேக பெண்கள் சூசான் கோட்டைப் பட்டணத்திற்கு கொண்டுவரப்பட்டு யேகாயின் பராமரிப்பில் வைக்கப்பட்டார்கள். எஸ்தரும் அரசனின் அரண்மனைக்குக் அழைத்துச்செல்லப்பட்டு, அந்தப்புரத்திற்குப் பொறுப்பாயிருந்த யேகாயிடத்தில் கொடுக்கப்பட்டாள். இந்தப் பெண் அவனுக்குப் பிரியமுள்ளவளாயிருந்து அவனிடத்தில் தயவு பெற்றாள். அவன் உடனடியாக அவளுக்கு அழகுபடுத்தும் பொருட்களையும், விசேஷ உணவையும் கொடுத்தான். அவன் அரசனுடைய அரண்மனையிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட ஏழு தோழிகளையும் அவளுக்குக் கொடுத்து, அவளையும், அவளது தோழிகளையும் அந்தப்புரத்தின் மிகச்சிறந்த இடத்துக்கு மாற்றினான்.
10 எஸ்தர் தான் எந்த இனம் என்றோ, தனது குடும்ப விபரம் என்னவேன்றோ வெளிப்படுத்தவில்லை. ஏனெனில் மொர்தெகாய் அப்படிச் செய்யவேண்டாம் என்று அவளுக்குச் சொல்லியிருந்தான். 11 ஒவ்வொரு நாளும் மொர்தெகாய் எஸ்தர் எப்படியிருக்கிறாள் என்றும், அவளுக்கு என்ன நடக்கிறது என்றும் அறிவதற்கு அந்தப்புரத்தின் முற்றத்தின் அருகே, அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தான்.
12 அரசன் அகாஸ்வேருவினிடம் ஒரு பெண் போவதற்கான தன்னுடைய முறை வருவதற்குமுன், அவள் பெண்களுக்காக நியமிக்கப்பட்டிருந்தபடி, பன்னிரண்டு மாத காலம் தன்னை அழகுபடுத்திக் கொள்ளவேண்டும். ஆறு மாதங்களுக்கு வெள்ளைப்போள எண்ணெயாலும், மற்ற ஆறு மாதங்களுக்கு வாசனைத் தைலத்தினாலும், அழகுசாதனப் பொருட்களினாலும் தன்னை அழகுபடுத்த வேண்டும். 13 அவள் அரசனிடம் போகவேண்டியது எப்படியெனில், அவள் அந்தப்புரத்திலிருந்து அரசனுடைய அரண்மனைக்கு தான் எடுத்துச்செல்ல விரும்பிய எதுவும் அவளுக்குக் கொடுக்கப்படும். 14 மாலையில் அவள் அரசனிடம் போய், மறுநாள் காலையில், அந்தப்புரத்தின் இன்னொரு பகுதியில் மறுமனையாட்டிகளுக்குப் பொறுப்பாயிருந்த அரசனுடைய அதிகாரியான சாஸ்காசின் பராமரிப்பில் விடப்படுவாள். ஒருத்தியின்மேல் அரசன் பிரியப்பட்டு அவளைப் பெயர்சொல்லி அழைத்தால் அன்றி, அவள் திரும்பவும் அரசனிடம் போகமுடியாது.
15 மொர்தெகாயின் வளர்ப்பு மகளும், அவனுடைய சிறிய தகப்பன் அபிகாயிலின் மகளுமான எஸ்தர், அரசனிடம் போவதற்கான முறை வந்தபோது, அந்தப்புரத்திற்குப் பொறுப்பாயிருந்த அரசனின் அதிகாரியான யேகாய் கொண்டுபோகும்படி சொன்னதைத்தவிர, அவள் வேறு எதையும் கேட்கவில்லை. எஸ்தர் தன்னைக் கண்ட எல்லோரிடமிருந்தும் தயவைப் பெற்றாள். 16 அரசன் அகாஸ்வேருவின் ஆட்சியின் ஏழாம் வருடத்தில் பத்தாவது மாதமாகிய தேபேத் மாதத்தில் அவள் அரசர் குடியிருக்கும் பகுதிக்கு அரசனிடத்தில் அழைத்துச் செல்லப்பட்டாள்.
17 அரசன் மற்ற எந்தப் பெண்ணையும் விட, எஸ்தரினால் அதிகமாய் கவரப்பட்டான். அவள் அவனிடமிருந்து மற்ற கன்னிகைகளையும்விட, அதிக தயவையும், பாராட்டையும் பெற்றாள். எனவே அவன் அரச கிரீடத்தை அவள் தலையில் வைத்து வஸ்திக்குப் பதிலாக அவளை அரசியாக்கினான். 18 அரசன் எஸ்தருக்கான விருந்தாக, ஒரு பெரிய விருந்தை எல்லா உயர்குடி மனிதருக்கும், அதிகாரிகளுக்கும் கொடுத்தான். அவன் மாகாணங்கள் எங்கும் ஒரு விடுமுறை நாளை அறிவித்து, அரசனுடைய நிறைவின்படியே அன்பளிப்புகளை வழங்கினான்.
மொர்தெகாய் சதியை வெளிப்படுத்துதல்
19 கன்னிப்பெண்கள் இரண்டாவது முறையாக கூடுகிறபோது, மொர்தெகாய் அரச வாசலில் உட்கார்ந்திருந்தான். 20 மொர்தெகாய் தனக்குச் சொன்னபடியே எஸ்தர் தனது குடும்ப விபரத்தையும், தான் எந்த நாட்டைச் சேர்ந்தவள் என்பதையும் இரகசியமாய் வைத்திருந்தாள். ஏனெனில், மொர்தெகாய் தன்னை வளர்க்கிறபோது செய்தபடியே அவள் அவனுடைய அறிவுறுத்தல்களைக் கைக்கொண்டாள்.
21 மொர்தெகாய், அரசனுடைய வாசலில் இருக்கும் நாட்களில், வாசலைக் காவல்காக்கும் அரசனின் இரு அதிகாரிகளான பிக்தானும், தேரேசும் அரசன் அகாஸ்வேருவுடன் கோபமடைந்து, அவனைக் கொலைசெய்யச் சதி செய்தார்கள். 22 ஆனால் மொர்தெகாய் இந்த சதியைப்பற்றி அறிந்து அரசி எஸ்தருக்குச் சொன்னான். அவள் அதை மொர்தெகாய் சொன்னதாகக் குறிப்பிட்டு, அரசனுக்கு அறிவித்தாள். 23 அந்த அறிக்கை விசாரணை செய்யப்பட்டு, உண்மையெனக் கண்டுபிடிக்கப்பட்ட போது, அந்த இரண்டு அதிகாரிகளும் தூக்கிலிடப்பட்டார்கள். இவை எல்லாம் அரசனின் முன்னிலையில் வரலாற்றுப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டன.
* 2:6 2:6 எபிரெயத்தில் எகொனியா அல்லது யோயாக்கீன் 2:18 2:18 வேலையிலிருந்து விடுப்பு அல்லது வரி நிவாரணம்