27
தகன பலிபீடம்
“சித்தீம் மரத்தினால் மூன்று முழம் உயரமான ஒரு பலிபீடத்தைச் செய்யவேண்டும். அது ஐந்து முழம் நீளமும், ஐந்து முழம் அகலமுமுள்ள சதுரமாய் இருக்கவேண்டும். அதன் நான்கு மூலைகளிலும் மூலைக்கு ஒவ்வொன்றாக நான்கு கொம்புகளைச் செய்யவேண்டும். கொம்புகளும், பலிபீடமும் ஒரே அமைப்பாய் இருக்கவேண்டும். பலிபீடத்தை வெண்கலத் தகட்டினால் மூடவேண்டும். அதற்குரிய எல்லா பாத்திரங்களையும், வெண்கலத்தினாலேயே செய்யவேண்டும். சாம்பலை அகற்றுவதற்கான பானைகளும், சாம்பல் அள்ளும் வாரிகளும், தெளிப்பதற்கான கிண்ணங்களும், இறைச்சியைக் குத்தும் முட்கரண்டிகளும், நெருப்புச் சட்டிகளும் வெண்கலத்தால் செய்யப்படவேண்டும். வெண்கலப் பின்னல் வேலைப்பாடான ஒரு கிராதியைச் செய்து, அதன் நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு வெண்கல வளையத்தை அமைக்கவேண்டும். பலிபீடத்தின் விளிம்பின் கீழ் அந்தக் கிராதியை வை. அது பலிபீடத்தின் அடியிலிருந்து பாதி உயரத்தில் இருக்கும். சித்தீம் மரத்தினால் பலிபீடத்திற்குத் தண்டுகளைச் செய்து, அவற்றை வெண்கலத் தகடுகளால் மூடவேண்டும். பலிபீடத்தைக் கொண்டுசெல்லும்போது, அதன் இரண்டு பக்கங்களிலும் இருக்கத்தக்கதாக அந்தத் தண்டுகள் வளையங்களிலே மாட்டப்படவேண்டும். பலிபீடத்தை மரப்பலகைகளினால் செய்யவேண்டும். அதன் உட்புறம் இடைவெளிவிட்டு வெறுமையாய் இருக்கவேண்டும். உனக்கு மலையில் காண்பிக்கப்பட்டபடியே அது செய்யப்படவேண்டும்.
முற்றம்
“இறைசமுகக் கூடாரத்திற்கு ஒரு முற்றத்தை அமைக்கவேண்டும். முற்றத்தின் தெற்குப் பக்கம் நூறுமுழம் நீளமாய் இருக்கவேண்டும். திரித்த மென்பட்டு நூலினால் நெய்யப்பட்ட திரைகள் அங்கு இடப்பட வேண்டும். 10 அங்கே இருபது கம்பங்களும், அவற்றுக்கான இருபது வெண்கல அடித்தளங்களும் அமைக்கப்பட வேண்டும். அந்தக் கம்பங்களில் வெள்ளிக் கொக்கிகளும், பூண்களும் இருக்கவேண்டும். 11 அப்படியே வடக்குப் பக்கமும் நூறுமுழம் நீளமாய் இருக்கவேண்டும். அங்கேயும் திரைகள் இருக்கவேண்டும். அவற்றுடன் இருபது கம்பங்களும், அவற்றுக்கான இருபது வெண்கல அடித்தளங்களும் அமைக்கப்பட வேண்டும். அந்தக் கம்பங்களில் வெள்ளிக் கொக்கிகளும், பூண்களும் இருக்கவேண்டும்.
12 “முற்றத்தின் மேற்குப் பக்கமும் ஐம்பது முழம் அகலமாய் இருக்கவேண்டும். அங்கே பத்து கம்பங்களுடனும், பத்து அடித்தளங்களுடனும் திரைகள் இருக்கவேண்டும். 13 சூரியன் உதிக்கும் திசையை நோக்கியிருக்கிற முற்றத்தின் கிழக்குப் பக்கமும் ஐம்பது முழம் அகலமாய் இருக்கவேண்டும். 14 வாசலின் ஒரு பக்கத்தில் பதினைந்து முழம் நீளமான திரைகள் இருக்கவேண்டும். அவற்றுடன் மூன்று கம்பங்களும், மூன்று அடித்தளங்களும் இருக்கவேண்டும். 15 வாசலின் மறுபக்கத்திலும், பதினைந்து முழம் நீளமான திரைகள் இருக்கவேண்டும். அவற்றிற்கும் மூன்று கம்பங்களும், மூன்று அடித்தளங்களும் இருக்கவேண்டும்.
16 “முற்றத்தின் நுழைவு வாசலுக்கு இருபது முழம் நீளமான ஒரு திரையைச் செய்யவேண்டும். நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரிக்கப்பட்ட மென்பட்டு ஆகியவற்றைக்கொண்டு சித்திரத்தையற்காரனின் வேலையாய் அது செய்யப்படவேண்டும். நான்கு கம்பங்களும், நான்கு அடித்தளங்களும் அதற்கு இருக்கவேண்டும். 17 முற்றத்தைச் சுற்றியுள்ள கம்பங்கள் எல்லாம் வெள்ளிப் பூண்களும், கொக்கிகளும் வெண்கல அடித்தளங்களும் உடையதாய் இருக்கவேண்டும். 18 முற்றத்தின் நீளம் நூறு முழமாகவும், அகலம் ஐம்பது முழமாகவும் இருக்கவேண்டும். அதைச் சுற்றிலும் திரித்த மென்பட்டினாலான ஐந்து முழம் உயரமான திரைகளும் அவற்றின் வெண்கல அடித்தளங்களும் இருக்கவேண்டும். 19 இறைசமுகக் கூடாரத்திற்கான முளைகளும், முற்றத்திற்கான முளைகளும், எல்லா உபயோகத்திற்காகவும் அங்கு பயன்படுத்தப்படும் எல்லா பொருட்களும் வெண்கலத்தினாலேயே செய்யப்படவேண்டும்.
விளக்குக்குரிய எண்ணெய்
20 “விளக்குகள் தொடர்ந்து எரிந்து ஒளி கொடுக்கும்படியாக, ஒலிவ விதைகளை இடித்துப் பிழிந்தெடுத்த தெளிந்த எண்ணெயைக் கொண்டுவரும்படி இஸ்ரயேலருக்குக் கட்டளையிடு. 21 சபைக் கூடாரத்தில் சாட்சிப்பெட்டியின் முன்னால் இருக்கும் திரைக்கு வெளியே, ஆரோனும் அவன் மகன்களும் விளக்குகளை மாலைவேளை தொடங்கி விடியும்வரை யெகோவாவுக்கு முன்னால் எரிந்துகொண்டிருக்கச் செய்யவேண்டும். இது தலைமுறைதோறும் இஸ்ரயேலர் மத்தியில் நிரந்தர நியமமாய் இருக்கும்.