39
ஆசாரியர்களின் உடைகள்
பரிசுத்த இடத்தில் ஊழியம் செய்வதற்காக நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்பு நூல்களினால் நெய்யப்பட்ட உடைகளைச் செய்தார்கள். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோனுக்குப் பரிசுத்த உடைகளையும் செய்தார்கள்.
ஏபோத்
ஏபோத்தைத் தங்கத்தினாலும், நீலம், ஊதா, கருஞ்சிவப்பு ஆகிய நூல்களினாலும் திரித்த மென்பட்டுத் துணியினாலும் செய்தார்கள். தங்கத்தை மெல்லிய தகடுகளாக அடித்து, அதைச் சரிகை நூலாக வெட்டி, நீலம், ஊதா, கருஞ்சிவப்புநூல், மென்பட்டுத் துணிகளுடன் நெய்து திறமையான சித்திரத்தையல் வேலையாகச் செய்தார்கள். ஏபோத்தின் இரண்டு மூலைகளிலும் தொடுக்கப்படுவதற்கு, இணைக்கக்கூடிய ஏபோத்தின் தோள்பட்டிகளைச் செய்தார்கள். அதன் நுட்பமாக நெய்யப்பட்ட இடைப்பட்டியும் அதைப் போலவே செய்யப்பட்டு, அதுவும் ஏபோத்துடன் ஒரே இணைப்பாக தங்கம், நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரித்த மென்பட்டு ஆகியவற்றைக்கொண்டு இணைத்து, யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
கோமேதகக் கற்களைத் தங்கச்சரிகை வேலைப்பாடுகளில் பதித்து, அவற்றின்மேல் இஸ்ரயேலின் மகன்களின் பெயர்களை ஒரு முத்திரையைப்போல் பொறித்தார்கள். பின்பு அவற்றை இஸ்ரயேலின் மகன்களுக்கான நினைவுச்சின்னக் கற்களாக ஏபோத்தின் தோள்பட்டியில் இணைத்தார்கள். இவை யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டன.
மார்பு அணி
அவர்கள் ஒரு திறமையான கைவினைக் கலைஞனின் வேலைப்பாடாக மார்பு அணியைச் செய்தார்கள். ஏபோத்தைப்போலவே அதைத் தங்கம், நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரித்த மென்பட்டு ஆகியவற்றைக்கொண்டு செய்தார்கள். மார்பு அணி ஒரு சாண் நீளமும், ஒரு சாண் அகலமும் உடைய இரண்டாக மடிக்கப்பட்ட சதுரத்துண்டாயிருந்தது. 10 அதில் நான்கு வரிசைகளில் இரத்தினக் கற்களைப் பதித்தார்கள். முதல் வரிசையில் பத்மராகம், புஷ்பராகம், மாணிக்கம்; 11 இரண்டாம் வரிசையில் மரகதம், இந்திரநீலம், வைரம்; 12 மூன்றாம் வரிசையில் கெம்பு, வைடூரியம், சுகந்தி; 13 நான்காம் வரிசையில் படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி ஆகியவை இருந்தது. அவற்றைத் தங்கச்சரிகை வேலையாக பதித்தார்கள். 14 இஸ்ரயேலின் மகன்களின் பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கற்களாக, பன்னிரண்டு கற்கள் இருந்தன. பன்னிரண்டு கோத்திரங்களின் பெயர்களும் ஒவ்வொரு கல்லிலும் முத்திரையைப்போல் பொறிக்கப்பட்டிருந்தன.
15 மார்பு அணிக்காக கயிறுபோல் பின்னப்பட்ட ஒரு சங்கிலியைச் சுத்தத் தங்கத்தினால் செய்தார்கள். 16 அவர்கள் இரண்டு தங்கச்சரிகை நூல் வேலைகளையும், இரண்டு தங்க வளையங்களையும் செய்தார்கள். அந்த இரண்டு வளையங்களையும் மார்பு அணியின் இரண்டு மூலைகளிலும் பொருத்தினார்கள். 17 மார்பு அணியின் இரண்டு பக்கங்களிலும் உள்ள வளையங்களில் தங்கச்சங்கிலிகளைத் தொடுத்தார்கள். 18 சங்கிலிகளின் மற்ற நுனிகளைச் சரிகை நூல் வேலைகளுடன் தொடுத்து, அவற்றைத் தோள்பட்டிகளுடன் ஏபோத்தின் முன்பக்கத்தில் இணைத்தார்கள். 19 அவர்கள் தங்கத்தால் இன்னும் இரண்டு வளையங்களைச் செய்து, அவற்றை ஏபோத்தை ஒட்டியுள்ள மார்பு அணியின் கீழ் விளிம்பின் இரண்டு மூலைகளில் உட்பக்கத்தில் வைத்தார்கள். 20 அவர்கள் வேறு இரண்டு தங்க வளையங்களையும் செய்து, ஏபோத்தின் முன்பக்கத்தில் அதன் இடைப்பட்டிகளுக்கு மேல் இருந்த மூட்டுக்கு அடுத்துள்ள பொருத்தில், தோள்பட்டிகளின் அடிப்பாகத்துடன் அவற்றைப் பொருத்தினார்கள். 21 மார்பு அணியை இடைப்பட்டியுடன் இணைக்கும்படியாகவும், அது ஏபோத்திலிருந்து விலகாமல் இருக்கும்படியாகவும், ஏபோத்தின் வளையங்களுடன் மார்பு அணியின் வளையங்களை நீல நாடாவால் கட்டினார்கள். இவற்றை யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
மற்ற ஆசாரிய உடைகள்
22 அவர்கள் ஏபோத்தின் மேலங்கி முழுவதையும் நீலநிறத் துணியினால் ஒரு நெசவாளியின் வேலையாகச் செய்தார்கள். 23 அந்த அங்கியின் நடுவில் கழுத்துப்பட்டியின் திறப்பைப் போன்ற ஒரு திறப்பை அமைத்தார்கள். கழுத்துத் துவாரம் கிழியாதபடி சுற்றிலும் ஒரு பட்டியை வைத்துத் தைத்தார்கள். 24 அந்த அங்கியின் கீழ்ப்பக்க ஓரத்தைச் சுற்றிலும், நீலம், ஊதா, கருஞ்சிவப்பு நூல்களினாலும், திரித்த மென்பட்டுத் துணியினாலும் மாதுளம் பழங்களைச் செய்து அலங்கரித்தார்கள். 25 அங்கியின் ஓரங்களைச் சுற்றிலும் மாதுளம் பழங்களின் இடையிடையே இருக்கத்தக்கதாக சுத்தத் தங்கத்தினால் மணிகளைச் செய்து தொங்கவிட்டார்கள். 26 யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, ஆசாரியப் பணியைச் செய்வதற்காக ஆரோன் உடுத்தியிருக்கும் அங்கியின் கீழ்ப்பக்க ஓரத்தைச் சுற்றிலும் ஒரு மாதுளம் பழமும், ஒரு மணியுமாக, மாறிமாறி அலங்கரிக்கப்பட்டிருந்தன.
27 ஆரோனுக்காகவும், அவனுடைய மகன்களுக்காகவும் மென்பட்டு நூலினால் ஒரு நெசவாளியின் வேலையாக உள் அங்கிகளைச் செய்தார்கள். 28 மென்பட்டினால் தலைப்பாகையையும், அதன் கச்சையையும், திரித்த மென்பட்டுத் துணியினால் கால் சட்டைகளையும் செய்தார்கள். 29 திரித்த மென்பட்டுத் துணி, நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல் ஆகியவற்றால் சித்திரத்தையற்காரனின் வேலையாய் ஒரு இடைப்பட்டியையும் செய்தார்கள். இவை யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டன.
30 மேலும் அவர்கள் சுத்தத் தங்கத்தினால் தகடு ஒன்றைச் செய்து, முத்திரையைப்போல அதில் இதைப் பொறித்தார்கள்:
“யெகோவாவுக்குப் பரிசுத்தம்”
31 அதில் ஒரு நீலநிற நாடாவைக் கட்டி தலைப்பாகையோடு இருக்கும்படி அதை இணைத்தார்கள். இவை யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டன.
மோசே இறைசமுகக் கூடாரத்தை மேற்பார்வையிடுதல்
32 சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தின் வேலைகளெல்லாம் செய்துமுடிக்கப்பட்டன. யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேல் மக்கள் எல்லாவற்றையும் செய்தார்கள். 33 அதன்பின் இறைசமுகக் கூடாரத்தை மோசேயிடம் கொண்டுவந்தார்கள்:
 
கூடாரமும், அதன் எல்லா பணிமுட்டுகளும், கொக்கிகள், சட்டப்பலகைகள், குறுக்குச் சட்டங்கள், கம்பங்கள், அடித்தளங்கள்,
34 அத்துடன் சிவப்புச் சாயம் தோய்க்கப்பட்ட ஆட்டுக்கடாத் தோலினால் செய்யப்பட்ட மூடுதிரை, கடல்பசுத் தோலினால் செய்யப்பட்ட மூடுதிரை, மறைக்கும் திரை,
35 சாட்சிப்பெட்டியுடன் அதன் கம்புகள், அதன் கிருபாசனம்,
36 மேஜையுடன் அதற்குரிய எல்லா பொருட்கள், இறைசமுக அப்பம்,
37 சுத்தத் தங்கத்தாலான குத்துவிளக்கு, அதில் வரிசையாக உள்ள அகல்விளக்குகள், அதன் உபகரணங்கள், வெளிச்சத்துக்கான எண்ணெய்,
38 தங்கத் தூபபீடம், அபிஷேக எண்ணெய், நறுமணத்தூள், கூடார வாசலின் திரை,
39 வெண்கலப் பலிபீடம், அதன் வெண்கலச் சல்லடை, அதன் கம்புகள், அதன் எல்லா பாத்திரங்கள்,
தொட்டி, அதன் கால்கள்,
40 முற்றத்திற்கான திரைகள், அதற்குரிய கம்புகள், அடித்தளங்கள், முற்ற வாசலுக்கான திரைகள்,
அதன் கயிறுகள், முற்றத்திலுள்ள முளைகள்,
சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தின் எல்லா பொருட்கள்;
41 உட்பட ஆசாரியனான ஆரோனுக்கான பரிசுத்த உடைகளும், அவன் மகன்கள் பரிசுத்த இடத்தில் ஆசாரியப் பணிசெய்யும்போது உடுத்தும் உடைகளுமான நெய்யப்பட்ட உடைகளையும் கொண்டுவந்தார்கள்.
 
42 யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேல் மக்கள் எல்லா வேலைகளையும் செய்திருந்தார்கள். 43 மோசே அவைகளையெல்லாம் பார்வையிட்டான். அப்பொழுது யெகோவா கட்டளையிட்டபடியே அவைகளைச் செய்திருக்கிறார்கள் என்று மோசே கண்டான். எனவே மோசே அவர்களை ஆசீர்வதித்தான்.