19
சோதோம், கொமோராவின் அழிவு
அன்று மாலை, சோதோம் பட்டணத்து வாசலிலே லோத்து உட்கார்ந்திருந்தபோது, அவ்விரு தூதர்களும் அவ்விடம் வந்தார்கள். லோத்து அவர்களைக் கண்டவுடன், அவர்களைச் சந்திப்பதற்காக எழுந்துபோய் தரைமட்டும் குனிந்து வணங்கினான். லோத்து அவர்களிடம், “ஐயாமார்களே” நீங்கள் இருவரும், அடியேனுடைய வீட்டிற்கு வாருங்கள். “நீங்கள் உங்கள் கால்களைக் கழுவி இன்றிரவு என்னுடன் தங்கி, அதிகாலையில் உங்கள் பயணத்தைத் தொடரலாம்” என்றான்.
அதற்கு அவர்கள், “வேண்டாம், நாங்கள் இன்றிரவு நகரச் சதுக்கத்திலே தங்குவோம்” என்றார்கள்.
அவன் அவர்களை வற்புறுத்தி அழைத்ததால், அவர்கள் அவனுடைய வீட்டிற்குள் போனார்கள். லோத்து புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு உணவு தயாரித்தான். அவர்கள் அதைச் சாப்பிட்டார்கள். அவர்கள் படுக்கைக்குப் போகுமுன், சோதோம் பட்டணத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் வாலிபர்முதல் முதியோர்வரை எல்லா ஆண்களும் வந்து லோத்தின் வீட்டைச் சூழ்ந்துகொண்டார்கள். அவர்கள் லோத்தைக் கூப்பிட்டு, “இன்றிரவு, உன்னிடம் வந்த மனிதர் எங்கே? நாங்கள் அவர்களுடன் பாலுறவுகொள்ளும்படி அவர்களை வெளியே கொண்டுவா” என்றார்கள்.
உடனே லோத்து, வீட்டுக்கு வெளியே வந்து, கதவைத் தனக்குப் பின்னால் பூட்டிக்கொண்டு அவர்களிடம், “வேண்டாம் நண்பர்களே! இந்தக் கொடுமையான செயலைச் செய்யவேண்டாம். இதோ, எனக்குக் கன்னியரான இரு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களை உங்களிடம் கொண்டுவருகிறேன். உங்களுக்கு விருப்பமானபடி அவர்களுடன் நடவுங்கள். ஆனால் இந்த மனிதரை ஒன்றும் செய்யவேண்டாம். ஏனெனில், அவர்கள் பாதுகாப்புக்காக என் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்” என்றான்.
அதற்கு அவர்கள், “அப்பாலே போ; அந்நியனாக இவ்விடத்திற்கு வந்த இவன் இப்பொழுது எங்களுக்கு நீதிபதியாக இருக்கப் பார்க்கிறான். அவர்களைவிட இப்பொழுது உன்னை மோசமாக நடத்துவோம்” என்று சொல்லி, லோத்தைத் தள்ளி கதவை உடைக்கப் போனார்கள்.
10 ஆனால், வீட்டுக்குள் இருந்த இரு மனிதரும் தங்கள் கைகளை வெளியே நீட்டி, லோத்தை வீட்டிற்குள்ளே இழுத்துக் கதவைப் பூட்டினார்கள். 11 பின்பு அந்த மனிதர், வீட்டுக்கு வெளியே நின்ற வாலிபர்முதல் முதியோர்வரை எல்லோருடைய கண்களையும் குருடாக்கினார்கள். அதனால் அவர்களால் வீட்டு வாசலைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
12 அவ்விருவரும் லோத்திடம், “இங்கு உனக்கு வேறு யாராவது இருக்கிறார்களா? உன் மகன்களோ, மகள்களோ, மருமகன்களோ அல்லது உனக்குச் சொந்தமான வேறு யாரேனும் இந்தப் பட்டணத்தில் இருந்தால், அவர்களையும் கூட்டிக்கொண்டு இவ்விடத்திலிருந்து வெளியே போ. 13 ஏனெனில், நாங்கள் இவ்விடத்தை அழிக்கப்போகிறோம்; இங்கு உள்ளவர்களுக்கு எதிராக யெகோவாவின் முன்னிலையில் எட்டியுள்ள கூக்குரல் மிகவும் அதிகமாக இருக்கிறது. அதனால், இப்பட்டணத்தை அழிக்கும்படி அவர் எங்களை அனுப்பியிருக்கிறார்” என்றார்கள்.
14 உடனே லோத்து வெளியே போய், தன் மகள்களுக்கு திருமணம் செய்ய நியமிக்கப்பட்டிருந்த மருமகன்களிடம், “விரைவாய் இந்த இடத்தைவிட்டு வெளியேறுங்கள். ஏனெனில், யெகோவா இப்பட்டணத்தை அழிக்கப்போகிறார்” என்றான். ஆனால் அவனுடைய மருமகன்களோ, அவன் கேலிசெய்கிறான் என்று நினைத்தார்கள்.
15 பொழுது விடியும்போது, தூதர்கள் லோத்தைப் பார்த்து, “இங்கே இருக்கும் உன் மனைவியையும், உன் இரு மகள்களையும் கூட்டிக்கொண்டு, விரைவாக வெளியேறு; இல்லாவிட்டால் இப்பட்டணம் தண்டிக்கப்படும்போது நீயும் அழிந்துபோவாய்” என்றார்கள்.
16 லோத்து வெளியேபோகத் தயங்கியபோது, யெகோவா லோத்தின் குடும்பத்தார்மேல் இரக்கமாயிருந்தபடியால், அந்த மனிதர் அவனுடைய கையையும், அவன் மனைவி மற்றும் இரு மகள்களுடைய கைகளையும் பிடித்துப் பட்டணத்திற்கு வெளியே பாதுகாப்பாய்க் கொண்டுபோய்விட்டார்கள். 17 அவர்கள் வெளியே வந்ததும், அவர்களில் ஒருவன் அவர்களிடம், “உயிர்தப்பும்படி ஓடிப்போங்கள்! திரும்பிப் பார்க்கவே வேண்டாம்; சமபூமியில் எந்த இடத்திலும் தங்காமல் மலைகளுக்கே ஓடிப்போங்கள்; இல்லாவிட்டால் நீங்களும் அழிந்துபோவீர்கள்” என்றான்.
18 அதற்கு லோத்து அவர்களிடம், “ஐயாமார்களே, தயவுசெய்து அப்படி வேண்டாம். 19 நான் உங்கள் கண்களிலே தயவு பெற்றிருக்கிறேன். எனக்குப் பெரிதான தயவுகாட்டி என்னுயிரைக் காப்பாற்றினீர்கள். ஆனால் மலைகளுக்குத் தப்பியோட என்னாலோ முடியாது. இந்த பேராபத்து என்னை மேற்கொண்டு நான் இறந்து விடுவேனே. 20 இதோ நான் ஓடிப்போகக் கூடிய அளவுக்கு அருகாமையில் ஒரு சிறிய பட்டணம் இருக்கிறதே. அங்கே நான் தப்பியோட என்னை விடுங்கள். அது மிகவும் சிறிய பட்டணம்தானே. அப்பொழுது நான் உயிர்பிழைப்பேன்” என்றான்.
21 அதற்கு அந்த தூதன் லோத்திடம், “நல்லது, இந்த வேண்டுகோளையும் நான் உனக்குக் கொடுக்கிறேன். நீ சொன்ன அப்பட்டணத்தை நான் அழிக்கமாட்டேன். 22 ஆனால் நீ விரைவாக அங்கே தப்பியோடு, ஏனென்றால், நீ அங்கேபோய்ச் சேரும்வரை என்னால் எதுவுமே செய்யமுடியாது” என்றார். அதனால் அப்பட்டணம் சோவார்* என அழைக்கப்பட்டது.
23 லோத்து சோவாருக்குப் போய்ச் சேர்ந்தபோது, அந்த நாட்டின் மேலாகச் சூரியன் உதித்திருந்தது. 24 அப்பொழுது யெகோவா எரியும் கந்தகத்தை சோதோமின் மேலும், கொமோராவின் மேலும் பொழியப்பண்ணினார். அது யெகோவாவிடமிருந்து வானத்திலிருந்தே வந்தது. 25 இவ்வாறு அவர் அந்தப் பட்டணங்களை அதில் வாழ்ந்த எல்லோருடனும் சேர்த்து, சமபூமி முழுவதையும் அழித்தார். அந்த நாட்டிலுள்ள தாவரங்களையும் அழித்தார். 26 ஆனாலும் லோத்தின் மனைவியோ போகும்போது திரும்பிப் பார்த்ததினால், உப்புத்தூண் ஆனாள்.
27 அடுத்தநாள் அதிகாலையில் ஆபிரகாம் எழுந்து, தான் முன்பு யெகோவாவின் முன்னிலையில் நின்ற இடத்திற்குத் திரும்பிப்போனான். 28 அங்கிருந்து அவன் சோதோம், கொமோரா பட்டணங்களையும், சமபூமி முழுவதையும் நோக்கிப் பார்த்தபோது, சூளையிலிருந்து எழும்பும் புகையைப்போல் அந்த நாட்டிலிருந்து பெரும்புகை எழும்புவதைக் கண்டான்.
29 இவ்வாறு இறைவன் சமபூமியிலுள்ள பட்டணங்களை அழித்தபோது, ஆபிரகாமை நினைவில்கொண்டார். எனவே லோத்து குடியிருந்த பட்டணங்களை அழித்தபோது, அந்த பேரழிவிலிருந்து அவனை வெளியே கொண்டுவந்து தப்புவித்தார்.
லோத்தும் அவன் மகள்களும்
30 அதன்பின், லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்ததினால், தன் இரு மகள்களுடன் சோவாரைவிட்டுப் புறப்பட்டு, மலைநாட்டுக்குப் போய், ஒரு குகையில் வசித்தான். 31 ஒரு நாள், மூத்த மகள் இளையவளிடம், “நம் தகப்பன் வயது முதிர்ந்தவரானார்; உலக வழக்கத்தின்படி, நம்மை திருமணம் செய்து நம்முடன் உறவுகொள்ள இப்பகுதியில் ஆண்கள் யாரும் இல்லை. 32 நமது தகப்பனை திராட்சை மதுவைக் குடிக்கப்பண்ணி அவருடன் உறவுகொண்டு, அவர் மூலமாய் நமது குடும்ப வம்சாவழியைப் பாதுகாப்போம்” என்றாள்.
33 அப்படியே அவர்கள் அன்றிரவு தங்கள் தகப்பனுக்குத் திராட்சை மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்த மகள் போய் அவனுடன் உறவுகொண்டாள். அவள் தன்னுடன் உறவு கொண்டதையோ, எழுந்து போனதையோ அவன் அறியவில்லை.
34 மறுநாள் மூத்த மகள் இளையவளிடம், “நேற்றிரவு நம்முடைய தகப்பனுடன் நான் உறவுகொண்டேன். இன்றிரவு மறுபடியும் நாம் அவருக்குக் குடிக்கக் கொடுப்போம். இன்றிரவு நீ அவருடன் போய் உறவுகொள். இவ்விதமாய் நம் தகப்பன் மூலமாய், நாம் நமது குடும்ப வம்சாவழியைப் பாதுகாப்போம்” என்றாள். 35 அப்படியே அன்றிரவும் தங்கள் தகப்பனுக்குத் திராட்சை மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். இளையவள் போய் அவனுடன் உறவுகொண்டாள். அவள் தன்னுடன் உறவு கொண்டதையோ, எழுந்து போனதையோ இம்முறையும் அவன் அறியவில்லை.
36 இவ்விதமாக லோத்தின் மகள்கள் இருவரும் தங்கள் தகப்பனால் கர்ப்பமானார்கள். 37 மூத்த மகள் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு மோவாப் என்று பெயரிட்டாள். இக்காலத்து மோவாபியரின் தகப்பன் இவனே. 38 இளையமகள் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு பென்னமி என்று பெயரிட்டாள். இக்காலத்திலுள்ள அம்மோனியரின் தகப்பன் இவனே.
* 19:22 19:22 சோவார் என்பதற்கு சிறிய பட்டணம் அல்லது சிறிய இடம் என்று பொருள்.