4
இறைவனுடைய மக்களுக்கான ஓய்வு
ஆகவே, இறைவனுடைய இளைப்பாறுதலுக்குள் செல்வதைக் குறித்த வாக்குத்தத்தம் இன்னும் நமக்கு செல்லுபடியானதாகவே இருக்கிறது. அதனால் உங்களில் ஒருவரும் அதை இழந்துபோகாதபடிக்கு, நாம் எல்லோரும் எச்சரிக்கையாய் இருப்போமாக. இஸ்ரயேலர்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது போலவே, நமக்கும் அறிவிக்கப்பட்டது; ஆனால் அவர்கள் கேட்ட செய்தியோ அவர்களுக்கு எவ்வித பயனையும் அளிக்கவில்லை. ஏனெனில் அதைக் கேட்டவர்களோ, விசுவாசத்தில் பங்குபெறாமல் போனார்கள்*. ஆனால் விசுவாசம் உள்ளவர்களாகிய நாமோ, உண்மையாகவே இப்பொழுது அந்த இளைப்பாறுதலுக்குள் நுழைவோம். இறைவன் விசுவாசிக்காதவர்களைக் குறித்து சொன்னதாவது:
“அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலுக்குள் ஒருபோதும் பிரவேசிப்பதில்லை என்று,
என்னுடைய கோபத்திலே நான் ஆணையிட்டு அறிவித்தேன்.”
அப்படியிருந்தும் அவருடைய கிரியைகள், உலகம் படைக்கப்பட்டதிலிருந்தே நிறைவாக்கப்பட்டு இருக்கிறது. ஏனெனில் ஏழாம்நாளைக் குறித்து ஓரிடத்தில்: “இறைவன் தான் செய்துகொண்டிருந்த வேலையை முடித்து, ஏழாம்நாளில் எல்லா வேலையிலிருந்தும் ஓய்ந்திருந்தார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் மேற்கூறிய வசனத்தைத் தொடர்ந்து, “அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலுக்குள் ஒருபோதும் பிரவேசிப்பதில்லை” என்றும் இறைவன் சொல்லியிருக்கிறார்.
முற்காலத்தில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதைக் கேட்டவர்கள் தங்களுடைய கீழ்ப்படியாமையினால் அதற்குள் பிரவேசிக்காதிருந்தார்கள். எனினும் சிலர் இன்னும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள் என்பது நிச்சயம். ஆகையால் இறைவன், அதற்கென வேறொரு நாளை நியமித்தார். அதையே, “இன்று” எனக் குறிப்பிடுகிறார். அதனால்தான் நீண்டகாலத்திற்குப் பின்பு இறைவன், தாவீதின்மூலம் பேசியபோது, முன்பு கூறப்பட்டபடியே:
“இன்று நீங்கள் இறைவனுடைய குரலைக் கேட்பீர்களானால்,
நீங்கள் உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம்”§
என்றார்.
யோசுவா அவர்களுக்கு அந்த இளைப்பாறுதலைக் கொடுத்திருந்தால், இறைவன் பிற்காலத்தில் இன்னொரு நாளைக்குறித்து அப்படிச் சொல்லியிருக்கமாட்டார். ஆகவே, இறைவனுடைய மக்களுக்கான ஓய்வு* இனி வரவேண்டியதாயிருக்கிறது. 10 ஏனெனில், இறைவனுடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் ஒருவன், இறைவன் ஓய்ந்திருந்தது போலவே, தனது வேலையிலிருந்து ஓய்ந்திருக்கிறான். 11 ஆகையால், அந்த இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும்படி, நாம் ஊக்கத்துடன் முயற்சிசெய்வோம். முன்னோர்களுடைய கீழ்ப்படியாமையைப் பின்பற்றி, நாம் ஒருவரும் விழுந்துபோகக் கூடாது.
12 ஏனெனில், இறைவனுடைய வார்த்தை உயிருள்ளதும் செயலாற்றல் உடையதுமாய் இருக்கிறது. அது இருபக்கமும் கூர்மையுள்ள வாளைவிடக் கூர்மையானது. அது ஆத்துமாவையும், ஆவியையும், எலும்பின் மூட்டுக்களையும், மஜ்ஜையையும் பிரிக்கத்தக்கதாய் துளைத்துச் செல்கிறது; அது இருதயத்தின் சிந்தனைகளையும் உள்நோக்கங்களையும் நிதானித்துத் தீர்ப்பிடுகிறது. 13 படைப்பு எல்லாவற்றிலும் எதுவும் இறைவனின் பார்வையிலிருந்து மறைவாய் இருப்பதில்லை. எல்லாம் அவருடைய கண்களுக்கு முன்பாக மறைக்கப்படாமலும், வெளியரங்கமாக்கப்பட்டும் இருக்கின்றன. அவருக்கே நாம் செய்த எல்லாவற்றிற்கும் கணக்குக் கொடுக்கவேண்டும்.
இயேசுவே பிரதான ஆசாரியர்
14 ஆதலால், பரலோகத்திற்குள் சென்றிருக்கிற ஒரு பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறார். அவர் இறைவனுடைய மகனான இயேசுவே; ஆகவே நாம், அவரில் அறிக்கையிடுகிற விசுவாசத்தை உறுதியாய் பற்றிக்கொள்வோமாக. 15 ஏனெனில் நமக்கிருக்கிற இந்த பிரதான ஆசாரியர், நம்முடைய பலவீனங்களைக்குறித்து அனுதாபப்பட முடியாதவர் அல்ல. அவரோ நம்மைப்போலவே, எல்லாவிதத்திலும் சோதனைகளின் மூலமாகச் சென்றவர். ஆனால், அவர் பாவம் செய்யவில்லை. 16 ஆகவே நாம் இரக்கத்தை பெறவும், நமக்கு ஏற்றவேளையில் உதவக்கூடிய கிருபையை நாம் அடையும்படியும் அவருடைய கிருபையின் அரியணையை பயமின்றி துணிவுடன் அணுகிச் செல்வோமாக.
* 4:2 4:2 சில கையெழுத்துப் பிரதிகளில் பங்குபெறாமல் போனார்கள் அதாவது கேட்டவர்கள் விசுவாசத்தோடு கேட்காததினால் 4:3 4:3 சங். 95:11 4:4 4:4 ஆதி. 2:2 § 4:7 4:7 சங். 95:7,8 * 4:9 4:9 சபத்.