யூதா எழுதின கடிதம்
1
1 இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், யாக்கோபின் சகோதரனுமான யூதா,
பிதாவாகிய இறைவனின் அன்புக்குரியவர்களும், இயேசுகிறிஸ்துவின் பாதுகாப்பில் இருக்கிறவர்களுமான அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:
2 இரக்கமும், சமாதானமும், அன்பும் உங்களிடம் நிறைவாய் பெருகுவதாக.
இறை பக்தியற்றவர்களுக்குத் தண்டனை
3 பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுமென நான் ஆவலாய் இருந்தேன். ஆனால் இந்த விசுவாசத்தின் சத்தியத்தைக் காத்துக்கொள்ளப் போராடும்படி உங்களுக்கு எழுதி உங்களை ஊக்குவிக்க வேண்டியதே இப்பொழுது அவசியம் என்று உணர்ந்தேன். இந்த விசுவாசத்தை இறைவன் என்றென்றைக்குமென ஒரே முறையாய் பரிசுத்தவான்களிடம் ஒப்புக்கொடுத்திருந்தார்.
4 சிலர் திருட்டுத்தனமாக உங்கள் மத்தியிலே நுழைந்து இருக்கிறபடியினாலேயே நான் இப்படி எழுதுகிறேன். அவர்களுடைய அழிவு முற்காலத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்கள் இறை பக்தியற்றவர்கள். அவர்கள் நமது இறைவனுடைய கிருபையை ஒழுக்கக்கேடாய் நடப்பதற்கான அனுமதியாக எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள் நம்முடைய ஒரே ஆண்டவரும் கர்த்தருமாய் இருக்கிற இயேசுகிறிஸ்துவை மறுதலிக்கிறார்கள்.
5 இதையெல்லாம் நீங்கள் ஏற்கெனவே அறிந்திருக்கிறீர்கள். ஆனால் கர்த்தர் தமது மக்களை எகிப்திலிருந்து விடுவித்து, பின்பு விசுவாசிக்காதவர்களை அழித்தார் என்பதை உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறேன்.
6 இன்னும் தங்களுடைய அதிகாரமான நிலைமையில் நிலைத்திராமல், தங்களுடைய குடியிருப்பை கைவிட்ட இறைத்தூதர்களையும் நினைவுகொள்ளுங்கள். இறைவன் அவர்களை நித்தியமான சங்கிலிகளால் கட்டி, காரிருளில் அடைத்து வைத்திருக்கிறார். அந்த மாபெரும் நாளில், அவர்களுக்குத் தீர்ப்புக் கொடுப்பதற்காக, அவர்களை இப்படி வைத்திருக்கிறார்.
7 அதுபோலவே சோதோம், கொமோரா பட்டணங்களையும், அவைகளைச் சுற்றியிருந்த பட்டணங்களையும் சேர்ந்தவர்கள் ஒழுக்கக்கேடான பாலுறவுகளுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். அவர்கள் இயல்புக்கு மாறான பாலுறவுகளிலும் ஈடுபட்டார்கள். அவர்கள் நித்திய நெருப்பின் தண்டனைக்கு உட்பட்டு, வேதனைப்படப் போகிறவர்களின் முன்னுதாரணமாய் இருக்கிறார்கள்.
8 அதேவிதமாகவே இந்தக் கனவுக்காரர் தங்கள் உடல்களைக் கனவீனப்படுத்துகிறார்கள்; அதிகாரத்தை உதாசீனம் செய்கிறார்கள்; மாட்சிமையான இறைத்தூதரைத் தூஷிக்கிறார்கள்.
9 ஆனால் தலைமை இறைத்தூதனான மிகாயேல்கூட, மோசேயின் உடலைக் குறித்து பிசாசுடன் வாக்குவாதம் செய்தபோது, அவனுக்கு எதிராக அவதூறான ஒரு குற்றச்சாட்டைக் கொண்டுவரத் துணியவில்லை. அவன் பிசாசிடம், “கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக” என்று மட்டுமே சொன்னான்.
10 ஆனால் இவர்களோ, தாங்கள் விளங்கிக்கொள்ளாத எல்லாவற்றிற்கும் எதிராக அவதூறாய்ப் பேசுகிறார்கள். பகுத்தறிவற்ற மிருகங்களைப்போல, தங்களுடைய இயல்பினால் அறிந்துகொள்வதையே செய்கிறார்கள், அவற்றினாலேயே அழிந்தும் போகிறார்கள்.
11 இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனின் வழியில் நடக்கிறார்கள்; ஆதாயத்திற்காக பிலேயாமின் தவறைத் தாங்களும் செய்ய விரைகிறார்கள். கோராகைப்போல கலகம்பண்ணி, அழிந்துபோகப் போகிறார்கள்.
12 இவர்கள் உங்களுடன் அன்பின் விருந்துகளில் எந்தப் பயமுமின்றி கலந்துகொண்டு, அவற்றைக் கறைப்படுத்துகிறார்கள். இவர்கள் தங்கள் சுயநலனை மட்டுமே தேடுகிற மேய்ப்பர்களாய் இருக்கிறார்கள். இவர்கள் காற்றில் அடிபட்டுப்போகும் மழையற்ற மேகங்கள்; இவர்கள் பருவகாலத்திலும் கனிகொடாத, வேரோடு பிடுங்கப்பட்ட, இரண்டுமுறை செத்த மரங்கள்.
13 இவர்கள் கடலின் கட்டுக்கடங்காத அலைகள்; இவர்கள் வெட்கக்கேடான செயல்களை அலைகளின் நுரையைப்போல் கக்குகிறார்கள். இவர்கள் வழிவிலகி அலைகின்ற நட்சத்திரங்கள்; காரிருளே இவர்களுக்கென்று என்றென்றைக்குமென நியமிக்கப்பட்டிருக்கிறது.
14 ஆதாமிலிருந்து ஏழாவது தலைமுறையில் வந்த ஏனோக்கு இவர்களைக்குறித்து இறைவாக்குரைத்தான்: “பாருங்கள், கர்த்தர் தமது ஆயிரம் ஆயிரமான பரிசுத்தர்களுடன் வருகிறார்.
15 அவர் உலக மக்கள் எல்லோருக்கும் நியாயத்தீர்ப்பைக் கொடுக்க வருகிறார். இறை பக்தியற்றவர்கள் தீய வழிகளில் செய்த அநேக செயல்களுக்காகவும், இறை பக்தியற்றவர்கள் இறைவனுக்கெதிராகப் பேசிய ஏளனமான வார்த்தைகளுக்காகவும், அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பதற்காகவும் அவர் வருகிறார்.”
16 இவர்கள் முறுமுறுக்கிறவர்களும் மற்றவர்களில் குற்றம் கண்டுபிடிக்கிறவர்களுமாய் இருக்கிறார்கள்; அவர்கள் தங்களுடைய தீய ஆசைகளின்படியே நடக்கிறார்கள். அவர்கள் தங்களைக்குறித்து பெருமையாகப் பேசிக்கொள்கிறார்கள். தங்களுடைய சுயநலன் கருதி, மற்றவர்களுக்கு முகஸ்துதி செய்கிறார்கள்.
விடாமுயற்சிக்கு அழைப்பு
17 ஆனால் அன்பான நண்பரே, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர் முன்னறிவித்தவைகளை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
18 கடைசிக் காலங்களில், “ஏளனம் செய்கிறவர்கள் வருவார்கள் என்றும், அவர்கள் இறை பக்தியற்ற தங்கள் தீய ஆசைகளின்படியே நடப்பார்கள் என்றும்” அவர்கள் உங்களுக்குச் சொல்லியிருந்தார்களே.
19 இந்த ஏளனக்காரர் உங்களைப் பிரிவினைக்கு உள்ளாக்குகிறார்கள். இவர்கள் மனித இயல்பின் உணர்ச்சிகளைப் பின்பற்றுபவர்கள். இவர்களில் பரிசுத்த ஆவியானவர் குடியிருப்பதில்லை.
20 ஆனால் அன்பானவர்களே, நீங்களோ உங்களது மகா பரிசுத்தமான விசுவாசத்தில் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவியானவரில் ஜெபம் பண்ணுங்கள்.
21 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரக்கம், உங்களை நித்திய வாழ்வுக்குக் கொண்டுவரும்வரை, நீங்கள் காத்திருக்கும்போது, இறைவனின் அன்பில் நிலைத்திருங்கள்.
22 நம்பத் தயங்குவோரிடம் இரக்கமாயிருங்கள்.
23 மற்றவர்களை தண்டனைத் தீர்ப்பின் நெருப்பிலிருந்து இழுத்து எடுத்துக் காப்பாற்றுங்கள். மற்றவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள்; ஆனால், அப்போது எச்சரிக்கையாயிருங்கள். அவர்களுடைய உடைகளும்கூட மாம்சத்தால் கறைபட்டிருக்கின்றன. எனவே, அவற்றையும் வெறுத்துத் தள்ளிவிடுங்கள்.
இறைவனைப் புகழ்தல்
24 விழுந்துபோகாதபடி உங்களைக் காக்க வல்லவராயிருக்கிறவரும், உங்களைக் குற்றமற்றவர்களாய் தமது மகிமையின் முன்பாக மகிழ்ச்சியுடன் நிறுத்த வல்லவராய் இருக்கிறவருமான
25 நமது இரட்சகராகிய ஒரே இறைவனுக்கு, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக மகிமையும், மாட்சிமையும், வல்லமையும், அதிகாரமும் உண்டாவதாக. யுகங்களுக்கு முன்பும், இப்பொழுதும் என்றென்றும், அவருக்கே உண்டாவதாக. ஆமென்.