21
பென்யமீனியருக்கு மனைவிகள்
மேலும் இஸ்ரயேலர்கள் மிஸ்பாவிலே இருக்கும்போது: “நம்மில் ஒருவனும் தன்னுடைய மகளை பென்யமீனியருக்குத் திருமணம் செய்துகொடுக்கமாட்டோம்” என்று ஆணையிட்டிருந்தார்கள்.
மக்கள் பெத்தேலுக்குச் சென்று, அன்று சாயங்காலம்வரை இறைவனுக்கு முன்பாக அமர்ந்திருந்து, உரத்த சத்தமாய் மனங்கசந்து அழுதனர். “யெகோவாவே, இஸ்ரயேலின் இறைவனே, இஸ்ரயேலுக்கு ஏன் இப்படி நடந்தது? இன்று இஸ்ரயேலில் ஒரு கோத்திரத்தை இழக்க நேரிட்டது ஏன்?” என அவர்கள் புலம்பினார்கள்.
மக்கள் அடுத்தநாள் அதிகாலையில் ஒரு பலிபீடத்தைக் கட்டித் தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தினார்கள்.
அப்பொழுது இஸ்ரயேலர், “எங்கள் எல்லா கோத்திரங்களிலுமிருந்து யெகோவாமுன் ஒன்றுகூடி வரத் தவறினவர்கள் யார்?” என்று விசாரித்தார்கள். ஏனெனில் யெகோவா முன்பாக மிஸ்பாவுக்கு ஒன்றுகூடி வரத் தவறுகிற எவனாயினும் நிச்சயம் கொல்லப்படவேண்டும் என்று ஏற்கெனவே அவர்கள் ஒரு கடுமையான ஆணையிட்டிருந்தார்கள்.
இப்பொழுது இஸ்ரயேலர், “இஸ்ரயேலில் இருந்து ஒரு கோத்திரம் இன்று அறுப்புண்டு போய்விட்டதே” எனத் தங்கள் சகோதரர்களான பென்யமீனியருக்காக மனம் வருந்தினார்கள். அத்துடன், “மீதியாயிருக்கும் இவர்களுக்கு நாம் மனைவியரை எப்படிக் கொடுக்கமுடியும்? இவர்களுக்கு எங்கள் பெண் பிள்ளைகளைக் கொடுப்பதில்லை என்று யெகோவாவுக்கு முன்பாக நாம் தீர்மானித்தோமே” எனச் சொல்லிக்கொண்டார்கள். பின்பு அவர்கள், “இஸ்ரயேல் கோத்திரங்களில் எது மிஸ்பாவிலே யெகோவா முன்பாக ஒன்றுகூடத் தவறியது” எனக் கேட்டார்கள். அப்பொழுது யாபேஸ் கீலேயாத்திலுள்ளவர்கள் ஒருவரும் சபை கூடுதலுக்கான முகாமுக்கு வரவில்லை எனக் கண்டுகொண்டார்கள். அவர்கள் மக்களைக் கணக்கெடுத்தபோது யாபேஸ் கீலேயாத்திலிருந்து ஒருவரும் அங்கு இல்லாதிருந்ததைக் கண்டார்கள்.
10 எனவே அங்கு கூடியிருந்தவர்கள் போர் வீரர்களில் பன்னிரெண்டாயிரம்பேரை, யாபேஸ் கீலேயாத்திலுள்ள பெண்கள் பிள்ளைகள் உட்பட எல்லோரையும் வாளால் வெட்டும்படி அனுப்பினார்கள். 11 “நீங்கள் செய்யவேண்டியது இதுவே. எல்லா ஆண்களையும், கன்னியாயிராத எல்லாப் பெண்களையும் கொலைசெய்யவேண்டும்” எனச் சொன்னார்கள். 12 அவர்கள் யாபேஸ் கீலேயாத்தில் வசித்தவர்களுள் ஒரு ஆணுடன் உறவுகொள்ளாத நானூறு கன்னிப்பெண்களைக் கண்டார்கள். அவர்களைக் கானான் நாட்டிலுள்ள சீலோவிலிருந்த முகாமுக்குக் கொண்டுவந்தார்கள்.
13 அதன்பின் முழு இஸ்ரயேல் சபையாரும் ரிம்மோன் மலையிலிருந்த பென்யமீனியரிடம் ஒரு சமாதான உடன்படிக்கையை அனுப்பினார்கள். 14 எனவே பென்யமீனியர் அவ்வேளையில் அங்கே திரும்பி வந்தார்கள்; யாபேஸ் கீலேயாத்திலுள்ள கொலைசெய்யப்படாமல் கொண்டுவந்த அந்த பெண்களை அவர்களுக்கு இவர்கள் கொடுத்தார்கள். ஆனாலும் அங்கிருந்த ஆண்கள் எல்லோருக்கும் பெண்கள் போதாதிருந்தனர்.
15 இஸ்ரயேல் கோத்திரங்களில் இப்படியானதொரு பிரிவை யெகோவா ஏற்படுத்தியதால், மக்கள் பென்யமீனியருக்காகத் துக்கப்பட்டார்கள். 16 அந்த சபையிலுள்ள முதியவர்கள், “பென்யமீன் பெண்கள் அழிந்திருப்பதால் நாங்கள் எப்படி மிகுதியாய் இருக்கும் மனிதருக்கு மனைவிகளைக் கொடுக்கலாம்? 17 இஸ்ரயேலில் ஒரு கோத்திரம் அழிந்துபோகாதபடிக்கு, தப்பியிருக்கும் பென்யமீனியருக்கு வாரிசுகள் இருக்கவேண்டுமே. 18 ஆனால் எம்மில் ஒருவனும் எங்கள் பெண்பிள்ளைகளை அவர்களுக்கு மனைவியாகக் கொடுக்க முடியாது. ஏனெனில், ‘பென்யமீனியருக்கு மனைவியாகப் பெண் கொடுப்பவன் சபிக்கப்படுவான்’ என்று இஸ்ரயேலராகிய நாமே ஆணையிட்டிருக்கிறோம். 19 ஆனாலும் இதோ சீலோவில் கொண்டாடும் யெகோவாவின் வருடாந்த விழா நடக்கிறது. அது பெத்தேல் நகருக்கு வடக்காகவும், தெற்காகவும், பெத்தேலிலிருந்து சீகேமுக்குப் போகிற வழியில் கிழக்கிலும், லிபோனாவுக்கு தெற்கிலும் இருக்கிற சீலோவிலே நடைபெறும் அல்லவோ!” என்றார்கள்.
20 எனவே அவர்கள் எஞ்சியிருந்த பென்யமீனியரிடம் அறிவுறுத்திச் சொன்னதாவது: “நீங்கள் போய் திராட்சைத் தோட்டத்திற்குள் மறைந்திருந்து பாருங்கள்; 21 அங்கே சீலோவிலே உள்ள பெண்கள் வெளியே நடனமாட வருவதைக் காண்பீர்கள்; அப்பொழுது திராட்சைத் தோட்டத்திலிருந்து நீங்கள் விரைவாக வெளியே வந்து, ஒவ்வொருவரும் உங்களுக்கேற்ற சீலோவியப் பெண்ணை மனைவியாக்கும்படி தூக்கிக்கொண்டு உங்கள் பென்யமீன் நாட்டிற்குத் திரும்பி ஓடிப்போங்கள். 22 பின்பு அப்பெண்களின் தகப்பன்மாரோ, சகோதரரோ வந்து எங்களிடம் முறையிட்டால், நாங்கள் அவர்களிடம், ‘அவர்களை மன்னியுங்கள். நாங்கள் போர்முனையில் மனைவியரை எடுப்பது போலவே செய்திருக்கிறார்கள். நீங்களோ அவர்களுக்குப் பெண் கொடுக்கவில்லை. அதனால் நீங்கள் குற்றமற்றவர்கள்’ எனச் சொல்வோம்” என்றார்கள்.
23 எனவே அவ்வாறே பென்யமீனியர் செய்தார்கள். பெண்கள் நடனமாடிக்கொண்டிருக்கையில் ஒவ்வொரு மனிதனும் ஒரு பெண்ணை தனக்கு மனைவியாக்கும்படி தூக்கிச்சென்றான். அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பிச்சென்று தங்கள் பட்டணங்களைத் திரும்பவும் கட்டி அங்கே வாழ்ந்துவந்தனர்.
24 அந்த நேரத்தில் இஸ்ரயேலரும் அவரவர் கோத்திரங்களின்படியும், வம்சங்களின்படியும் தங்கள் சொந்த இடங்களிலுள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
25 அந்நாட்களில் இஸ்ரயேலில் அரசன் இருக்கவில்லை. ஒவ்வொருவனும் தன் பார்வைக்குச் சரியானதையே செய்து வந்தான்.