8
சேபாவும் சல்முனாவும்
அப்பொழுது எப்பிராயீம் மனிதர்கள் கிதியோனிடம், “நீ மீதியானியருடன் சண்டைக்குப் போகும்போது ஏன் எங்களை அழைக்கவில்லை? ஏன் எங்களை இப்படி நடத்தினாய்” என்று மிகவும் கடுமையாகக் குறை கூறினார்கள்.
ஆனால் அவன் அவர்களிடம், “நீங்கள் செய்ததோடு ஒப்பிடும்போது நான் செய்தது எம்மாத்திரம்? அபியேசரியரின் முழுமையான அறுவடையின் திராட்சைப் பழங்களைவிட எப்பிராயீமின் பொறுக்கியெடுத்த திராட்சைப் பழங்கள் சிறந்தது அல்லவா? இறைவன் மீதியானியரின் தலைவர்களான ஓரேப்பையும், சேபையும் உங்கள் கையில் கொடுத்தார். உங்களோடு ஒப்பிடுகையில் நான் செய்யக்கூடியதாக இருந்தது எம்மாத்திரம்?” எனக் கேட்டான். அப்பொழுது அவனுக்கெதிராக இருந்த அவர்களுடைய கோபம் சிறிது சிறிதாகத் தணிந்தது.
கிதியோனும் அவனோடிருந்த முந்நூறுபேரும் களைப்பாயிருந்தும் மீதியானியரைத் தொடர்ந்து துரத்திக்கொண்டு யோர்தான்வரை வந்து அதைக் கடந்தார்கள். அவன் சுக்கோத்தின் மனிதரிடம், “என்னோடிருக்கும் படைக்கு கொஞ்சம் உணவு கொடுங்கள். அவர்கள் மிகவும் களைப்பாயிருக்கிறார்கள். நான் மீதியானியரின் அரசர்களான சேபாவையும், சல்முனாவையும் இன்னும் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறேன்” எனச் சொன்னான்.
அதற்கு சுக்கோத்தின் அதிகாரிகள், “சேபாவையும், சல்முனாவையும் ஏற்கெனவே நீ பிடித்து உன் வசத்தில் வைத்திருக்கிறாயோ? நாங்கள் ஏன் உனது படைக்கு உணவு கொடுக்கவேண்டும்?” என்றார்கள்.
அப்பொழுது கிதியோன், “உங்களது இந்த செயலுக்காக யெகோவா என் கையில் சேபாவையும், சல்முனாவையும் ஒப்படைக்கும்போது, நான் உங்களது சதையை பாலைவனத்தின் முட்களாலும், முட்செடிகளினாலும் கிழித்துவிடுவேன்” என்றான்.
பின்பு அவன் அங்கிருந்து புறப்பட்டு, பெனியேல் பட்டணத்திற்கு போய் அவர்களிடமும் அவ்வாறே கேட்டான். அவர்களும் சுக்கோத் மனிதர் பதிலளித்ததுபோலவே சொன்னார்கள். எனவே அவன் பெனியேலின் மனிதர்களிடமும், “நான் வெற்றியுடன் திரும்பி வரும்போது இந்த கோபுரத்தை* இடித்து வீழ்த்துவேன்” என்றான்.
10 இப்பொழுது சேபாவும், சல்முனாவும் பதினைந்தாயிரம் இராணுவவீரரைக் கொண்ட படையுடன் கார்கோரில் இருந்தனர். இவர்கள் மட்டுமே கிழக்குத்திசை படையில் எஞ்சியிருந்தவர்கள். ஒரு இலட்சத்து இருபதாயிரம் வாள் வீரர்கள் ஏற்கெனவே செத்துவிட்டனர். 11 கிதியோன் நாடோடிகள் செல்லும் குறுக்கு வழியாக நோபாவுக்கும், யொகிபெயாவுக்கும் கிழக்கே சென்று, மீதியானியரின் படையை எதிர்பாராத வேளையில் தாக்கினான். 12 மீதியானியரின் அரசர்களான சேபாவும், சல்முனாவும் தப்பி ஓடினார்கள். ஆனால் கிதியோன் அவர்களுடைய படை முழுவதையும் முறியடித்து, அந்த இரண்டு அரசர்களையும் துரத்திச்சென்று சிறைப்பிடித்தான்.
13 யோவாசின் மகன் கிதியோன் போர் முனையிலிருந்து ஏரேஸ் மேடு வழியாகத் திரும்பிவந்தான். 14 அவன் சுக்கோத்தின் ஒரு வாலிபனைப் பிடித்து அவனை விசாரித்தான். அந்த வாலிபன் சுக்கோத் பட்டணத்தின் எழுபத்தேழு தலைவர்களான அதிகாரிகளின் பெயர்களை எழுதிக்கொடுத்தான். 15 அதன்பின் கிதியோன் திரும்பிவந்து சுக்கோத்தின் மனிதர்களிடம், “சேபாவும், சல்முனாவும் இங்கே இருக்கிறார்கள். ‘நாங்கள் ஏன் உன் வீரர்களுக்கு உணவு கொடுக்கவேண்டும். சேபாவும், சல்முனாவும் உன்னுடைய கைகளில் இருக்கிறார்களா?’ என்று இவர்களைப்பற்றிக் கேட்டு என்னை ஏளனம் செய்தீர்கள்” என்றான். 16 பின்பு அவன் அந்தப் பட்டணத்தின் தலைவர்களைப் பிடித்து, பாலைவனத்து முட்களாலும், முட்செடிகளாலும் அவர்களைத் தண்டித்து சுக்கோத்தின் மனிதருக்குப் பாடம் புகட்டினான். 17 அத்துடன் பெனியேலின் கோபுரத்தையும் இடித்து வீழ்த்தி, அந்தப் பட்டணத்து மனிதரையும் கொலைசெய்தான்.
18 பின்பு அவன் சேபா, சல்முனா ஆகியோரிடம், “நீங்கள் தாபோரில் கொலைசெய்தவர்கள் எப்படியான மனிதர்கள்?” என்று கேட்டான்.
“அவர்கள் உன்னைப்போன்ற மனிதர்களே! ஒவ்வொருவரும் பிரபுவின் தோற்றமுடையவர்கள்” என்று சொன்னார்கள்.
19 அதற்கு கிதியோன், “அவர்கள் எல்லோரும் என் சகோதரர்கள். என் தாயின் பிள்ளைகள். அவர்களை நீங்கள் கொலைசெய்யாதிருந்தால், யெகோவா இருக்கிறது நிச்சயம்போல, நானும் உங்களைக் கொலைசெய்யமாட்டேன் என்பதும் நிச்சயம்” என்றான். 20 அதன்பின் அவன் தனது மூத்த மகன் யெத்தேரைத் திரும்பிப்பார்த்து, “அவர்களைக் கொலைசெய்” என்றான். யெத்யேர் சிறுவனாயிருந்ததால் பயந்தான். அதனால் வாளை எடுக்கவில்லை.
21 அப்பொழுது சேபாவும், சல்முனாவும் கிதியோனிடம், “நீயே எழுந்துவந்து எங்களைக் கொலைசெய்; ஒரு மனிதனைப் போலவே அவனுடைய பெலனும் இருக்கும்” என்று சொன்னார்கள். அப்படியே கிதியோன் எழுந்து அவர்களைக் கொன்று, அவர்கள் ஒட்டகங்களிலிருந்து விலைமதிப்பான அவர்களுடைய கழுத்து அணிகலன்களைக் கழற்றி எடுத்துக்கொண்டான்.
கிதியோனின் ஏபோத்
22 அதன்பின் இஸ்ரயேலர் கிதியோனிடம், “நீர் எங்களை ஆட்சிசெய்யும். உமக்குப்பின் உமது மகனும், உமது பேரன்மாருமே எங்களை ஆட்சி செய்யட்டும். ஏனெனில் நீரே மீதியானியரின் கையிலிருந்து எங்களைக் காப்பாற்றினீர்” என்றனர்.
23 ஆனால் கிதியோன் அவர்களிடம், “நான் உங்களை ஆட்சி செய்யமாட்டேன், என் மகனும் உங்களை ஆட்சி செய்யமாட்டான். யெகோவாவே உங்களை ஆட்சி செய்வார்” என்றான். 24 அத்துடன் அவன் அவர்களிடம், “நான் உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும்; அதாவது நீங்கள் ஒவ்வொருவரும் கொள்ளையிட்ட உங்கள் பங்கிலிருந்து ஒரு கடுக்கனை எனக்குத் தாருங்கள்” என்று கேட்டான். ஏனெனில் போரில் இறந்த இஸ்மயேல் மனிதருக்கு கடுக்கன்கள் அணியும் வழக்கம் இருந்தது.
25 அதற்கு அவர்கள், “நாங்கள் அவற்றைக் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைவோம்” என்று சொல்லி தரையிலே ஒரு துணியை விரித்து ஒவ்வொருவரும் தாம் கொள்ளையிட்ட பொருட்களில் இருந்து ஒரு கடுக்கனை அதில் போட்டனர். 26 அவர்கள் கொடுத்த தங்க கடுக்கன்களின் நிறை ஆயிரத்து எழுநூறு சேக்கலாயிருந்தது. அதைவிட அணிகலன்களும், பதக்கங்களும் மீதியானிய அரசர் அணியும் ஊதாநிற உடைகளும், அவர்களின் ஒட்டகங்களின் கழுத்திலிருந்த அணிகலன்களும் அவனுக்குக் கிடைத்தன. 27 அவர்கள் கொடுத்த தங்கத்தைக் கொண்டு கிதியோன் ஒரு ஏபோத்தைச் செய்து தனது பட்டணமான ஒப்ராவிலே வைத்தான். ஆனால் மிகவிரைவில் இஸ்ரயேலர் எல்லோரும் ஏபோத்தை வணங்கி வேசித்தனம் பண்ணினார்கள். இது கிதியோனுக்கும், அவன் குடும்பத்திற்கும் கண்ணியாய் இருந்தது.
கிதியோனின் மரணம்
28 இவ்வாறு இஸ்ரயேலருக்கு முன்பாக மீதியானியர் திரும்பவும் தலைதூக்காதபடி கீழ்படுத்தப்பட்டிருந்தனர். கிதியோன் உயிரோடிருக்கும்வரை நாடு நாற்பதுவருடம் சமாதானத்தை அனுபவித்தது.
29 யோவாசின் மகன் யெருபாகால் என்னும் கிதியோன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போய் அங்கே வாழ்ந்தான். 30 அவனுக்குப் பல மனைவிகள் இருந்தார்கள். அவனுக்கு எழுபது மகன்களும் இருந்தனர். 31 சீகேமிலிருந்த அவனுடைய வைப்பாட்டியும் அவனுக்கு ஒரு மகனைப் பெற்றாள். அவனுக்கு அவன் அபிமெலேக்கு என்று பெயரிட்டிருந்தான். 32 யோவாசின் மகன் கிதியோன் முதிர்வயதில் இறந்தான்; அவனுடைய உடல் ஒப்ராவிலுள்ள அபியேஸ்ரியரின் நாட்டில் அவனுடைய தகப்பன் யோவாசின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
33 கிதியோன் இறந்த உடனேயே இஸ்ரயேலர் திரும்பவும் பாகால் தெய்வங்களை வணங்கி வேசித்தனம் பண்ணினார்கள். அதோடு பாகால் பேரீத்தை தங்கள் தெய்வமாக ஏற்படுத்தினார்கள். 34 தங்களைச் சூழ்ந்துள்ள எல்லா எதிரிகளின் கையினின்றும் தங்களைத் தப்புவித்த தங்கள் இறைவனாகிய யெகோவாவை இஸ்ரயேலர் நினைக்கவில்லை. 35 யெருபாகால் என்று அழைக்கப்பட்ட கிதியோன் இஸ்ரயேலருக்குச் செய்த எல்லா நன்மைகளுக்கும் பதிலாக, அவனுடைய குடும்பத்தார்களுக்கு அவர்கள் தயவு காட்டவும் தவறிவிட்டனர்.
* 8:9 8:9 இஸ்ரேலில் நகர சுவர்களில் கோபுரங்கள் கட்டப்பட்டிருந்தன. 8:33 8:33 பாகால் பேரீத்தை என்பது கானானிய புயல் கடவுளின் உள்ளூர் வெளிப்பாடாகும். இந்த பெயரின் அர்த்தம் உடன்படிக்கையின் பாகால் என்பதாகும்.