13
மென்பட்டு இடைப்பட்டி
யெகோவா என்னிடம், “நீ போய், ஒரு மென்பட்டுக் இடைப்பட்டியை வாங்கி, உன் இடுப்பைச் சுற்றிக் கட்டிக்கொள். ஆனால் அதில் தண்ணீர்பட விடாதே” என்றார். எனவே நான் யெகோவா அறிவுறுத்தியபடி, ஒரு இடைப்பட்டியை வாங்கி, என்னுடைய இடுப்பில் கட்டிக்கொண்டேன்.
அப்பொழுது யெகோவாவின் வார்த்தை இரண்டாம்முறை எனக்கு வந்தது: “நீ வாங்கி உன் இடுப்பில் கட்டியுள்ள இடைப்பட்டியை எடுத்துக்கொண்டு, இப்பொழுது யூப்ரட்டீஸ் நதியண்டைக்குப் போய், அங்கே கற்பாறைகளின் வெடிப்பில் அதை ஒளித்து வை” என்றார். எனவே நான் போய் யெகோவா கட்டளையிட்டபடியே யூப்ரட்டீஸ் நதியண்டையில் அதை ஒளித்து வைத்தேன்.
அநேக நாட்களுக்குப்பின்பு யெகோவா என்னிடம், “நீ யூப்ரட்டீஸ் நதியண்டைக்குப் போய், நான் உன்னிடம் மறைத்துவைக்கும்படி சொன்ன அந்த இடைப்பட்டியை அங்கிருந்து எடு” என்றார். அப்பொழுது நான் யூப்ரட்டீஸ் நதிக்குப் போய், அதை மறைத்துவைத்த இடத்திலிருந்து தோண்டி எடுத்தேன். அந்த இடைப்பட்டியோ மக்கிப்போய் முற்றிலும் பயனற்றதாகி விட்டது.
அதன்பின் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. அவர் என்னிடம், “யெகோவா சொல்வது இதுவே: ‘இவ்வாறே யூதாவின் பெருமையையும், எருசலேமின் மிகுந்த பெருமையையும் அழிப்பேன். 10 இக்கொடிய மக்கள் என் வார்த்தைகளைக் கேட்க மறுத்து, தங்கள் இருதயங்களின் பிடிவாதத்தில் நடக்கிறார்கள். அவர்கள் பிற தெய்வங்களுக்குப் பணிசெய்து அவைகளின் பின்னாலேயே சென்று அவைகளை வணங்குகிறார்கள். இக்கொடிய மனிதர் முற்றிலும் பயனற்றுப்போன இந்த இடைப்பட்டியைப்போல் இருப்பார்கள். 11 ஒரு மனிதனின் இடுப்பைச் சுற்றி இடைப்பட்டி கட்டப்படுவதுபோல் இஸ்ரயேலின் முழுக் குடும்பத்தையும் யூதாவின் முழுக் குடும்பத்தையும் என்னுடன் சேர்த்துக் கட்டினேன்’ என்று யெகோவா அறிவிக்கிறார். ‘அவர்கள் எனக்குப் புகழும், துதியும், கனமும் உடைய எனது மக்களாய் இருக்கும்படி இப்படிச் செய்தேன். ஆனால் அவர்களோ எனக்குச் செவிகொடுக்கவில்லை.’
திராட்சை இரச ஜாடி
12 “நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ஒவ்வொரு ஜாடியும் திராட்சரசத்தால் நிரப்பப்பட வேண்டும்.’ அதற்கு அவர்கள் ஒவ்வொரு ஜாடியும் திராட்சரசத்தால் நிரப்பப்பட வேண்டுமென்று எங்களுக்குத் தெரியாதா? என்று உன்னிடம் சொன்னால், 13 அப்பொழுது நீ அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘யெகோவா சொல்வது இதுவே: தாவீதின் அரியணையிலிருக்கும் அரசர்கள், ஆசாரியர்கள், இறைவாக்கு உரைப்போர், எருசலேமின் வழிப்போக்கர் உட்பட இந்த நாட்டில் வாழும் யாவரையும் குடிபோதையில் நிரப்புவேன். 14 நான் தகப்பன்மார், மகன்கள் என்ற வித்தியாசமின்றி ஒரேவிதமாக ஒருவருக்கு எதிராக ஒருவரை மோதியடிப்பேன் என்று யெகோவா அறிவிக்கிறார். அவர்கள்மீது எந்தவித அனுதாபத்தையோ, இரக்கத்தையோ, பரிவையோ காட்டாமல் அவர்களை அழித்துப்போடுவேன்’ ” என்கிறார்.
சிறையிருப்பைப் பற்றிய அச்சுறுத்தல்
15 நன்றாகக் கவனித்துக் கேளுங்கள்;
அகந்தையாயிராதீர்கள்.
ஏனெனில் யெகோவா பேசியிருக்கிறார்.
16 அவர் இருளைக் கொண்டுவருவதற்கு முன்னும்,
இருண்ட மலைகளில்
உங்கள் பாதங்கள் இடறுவதற்கு முன்னும்,
உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு மகிமையைக் கொடுங்கள்.
நீங்கள் வெளிச்சத்தை எதிர்ப்பார்க்கிறீர்கள்.
ஆனால் அவர் அதைக் காரிருளாக்கி
மப்பும் மந்தாரமுமாக மாற்றிப்போடுவார்.
17 ஆனால் இதற்கு நீங்கள்
செவிகொடாவிட்டால்,
உங்கள் பெருமையின் நிமித்தம்
நான் எனக்குள்ளே துக்கித்துப் புலம்புவேன்.
யெகோவாவின் மந்தை சிறைப்பிடிக்கப்பட்டுப்போகும் என்பதால்,
என் கண்கள் கண்ணீர் சிந்தி மனங்கசந்து அழும்.
 
18 நீ அரசனிடமும் அவரின் தாய் அரசியிடமும்,
உங்கள் அரியணையை விட்டுக் கீழே இறங்குங்கள்.
ஏனெனில் மகிமையான மகுடங்கள்
உங்கள் தலைகளிலிருந்து விழுந்துவிடும் என்று சொல்.
19 தெற்கிலுள்ள பட்டணங்கள்* அடைக்கப்பட்டுவிடும்.
அவைகளைத் திறக்க ஒருவரும் இருக்கமாட்டார்கள்.
யூதாவில் உள்ள மக்கள் எல்லோரும்
முழுவதுமாக நாடுகடத்தப்படுவார்கள்.
 
20 உன் கண்களை உயர்த்தி
வடக்கிலிருந்து வருகிறவர்களைப் பார்.
உன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த மந்தை எங்கே?
நீ மேன்மைபாராட்டிய உன் செம்மறியாடு எங்கே?
21 நீ விசேஷ கூட்டாளிகளாக நட்பு பாராட்டியவர்களை
யெகோவா உன்மேல் ஆளுகை செலுத்த வைக்கும்போது நீ என்ன சொல்வாய்?
ஒரு பெண்ணின் பிரசவ வேதனையைப்போன்ற
ஒரு வேதனை உன்னைப் பற்றிக்கொள்ளாதோ?
22 “இது ஏன் எனக்கு நடந்தது”
என்று நீ உன்னையே கேட்பாயானால்,
அது உன் அநேக பாவங்களினாலேயே.
அதனால்தான் உன் உடைகள் கிழிக்கப்பட்டு,
உனது உடல் கேவலமாய் அவமானப்படுத்தப்பட்டது.
23 எத்தியோப்பியன் தன் தோலை மாற்ற முடியுமோ?
சிறுத்தை தன் புள்ளிகளை மாற்ற முடியுமோ?
அதுபோலவே தீமைசெய்யப் பழகிய
உங்களாலும் நன்மை செய்யமுடியாது.
 
24 ஆகையினால் பாலைவனக் காற்றினால் பறக்கடிக்கப்படும் பதரைப்போல்,
நானும் உங்களைச் சிதறடிப்பேன்.
25 நீங்கள் என்னை மறந்து,
பொய் தெய்வங்களை நம்பியிருந்தபடியால்,
இதுவே உங்கள் பங்கும்
நான் உங்களுக்கென நியமித்த பாகமுமாகும் என யெகோவா அறிவிக்கிறார்.
26 உங்கள் நிர்வாணம் காணப்பட்டு வெட்கப்படும்படியாக
நான் உங்கள் உடைகளை உங்கள் முகத்துக்கு மேலாகத் தூக்கிப் பிடிப்பேன்.
27 உங்கள் விபசாரங்களும், காமத்தின் கனைப்புகளும்,
உங்கள் வெட்கம் கெட்ட வேசித்தனமும் வெளிப்படும்.
நீங்கள் குன்றுகளின்மேலும்,
வயல்களின்மேலும் செய்த அருவருப்பான செயல்களை நான் கண்டிருக்கிறேன்.
எருசலேமே! ஐயோ உனக்குக் கேடு.
எவ்வளவு காலத்துக்கு நீ அசுத்தமாயிருப்பாய்?
* 13:19 தெற்கிலுள்ள பட்டணங்கள் அல்லது நெகேப்