இராஜாக்களின் இரண்டாம் புத்தகம்
1
எலியாவும் அகசியா அரசனும்
1 ஆகாப் அரசன் இறந்தபின்பு மோவாபியர் இஸ்ரயேலுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள்.
2 அப்பொழுது அரசன் அகசியா, சமாரியாவிலுள்ள அவனுடைய மேல்மாடியின் ஜன்னலின் வழியாய் கீழே விழுந்து காயப்பட்டிருந்தான். எனவே அவன் தனது ஆட்களை அனுப்பி, “எக்ரோனின் தெய்வமாகிய பாகால் சேபூபிடம் போய், நான் இந்த காயத்திலிருந்து சுகமாவேனா?” என்று கேட்டுவரும்படி சொன்னான்.
3 ஆனால் யெகோவாவின் தூதன் திஸ்பிய ஊரைச்சேர்ந்த எலியாவை நோக்கி, “நீ சமாரியா அரசனின் தூதுவரைச் சந்தித்து அவர்களிடம், ‘இஸ்ரயேலில் இறைவன் இல்லையென்றா எக்ரோனின் தெய்வமாகிய பாகால் சேபூபிடம் ஆலோசனை கேட்கப்போகிறீர்கள்?’ என்று கேள்.
4 அதனால் யெகோவா சொல்வதாவது: ‘நீ படுத்திருக்கும் படுக்கையை விட்டு எழும்பவே மாட்டாய். நீ நிச்சயமாய் சாவாய்’ என்றும் சொல் என்றான்.” அப்படியே எலியா போனான்.
5 தூதுவர்கள் அரசனிடம் திரும்பிவந்தபோது, அரசன் அவர்களிடம், “ஏன் திரும்பி வந்தீர்கள்?” என்று கேட்டான்.
6 அதற்கு அவர்கள், “ஒரு மனிதன் எங்களைச் சந்திக்க வந்தான். அவன் எங்களைப் பார்த்து, ‘உங்களை அனுப்பிய அரசனிடம் நீங்கள் திரும்பிப்போய், யெகோவா சொல்வது இதுவே: இஸ்ரயேலில் இறைவன் இல்லையென்றா எக்ரோனின் தெய்வமான பாகால் சேபூபிடம் விசாரிப்பதற்கு மனிதரை அனுப்புகிறாய்? எனவே நீ படுக்கும் படுக்கையை விட்டு எழும்பமாட்டாய். நிச்சயமாகவே நீ சாவாய்’ என்று சொல்லுங்கள் என்கிறான்” என்றார்கள்.
7 அரசன் அவர்களிடம், “உங்களைச் சந்திக்க வந்து இதை உங்களிடம் கூறிய மனிதன் எப்படிப்பட்டவன்?” என்று கேட்டான்.
8 அப்பொழுது அவர்கள், “அவன் கம்பளி உடையை அணிந்து, இடுப்பைச் சுற்றி தோல் பட்டியை கட்டியிருந்தான்” என்றார்கள்.
அதற்கு அரசன், “அவன் திஸ்பியனாகிய எலியாதான்” என்றான்.
9 அதன்பின் அவன் ஒரு இராணுவத் தளபதியையும், அவனுடைய ஐம்பது மனிதரைக்கொண்ட ஒரு குழுவையும் எலியாவிடம் அனுப்பினான். தளபதி மலையின் உச்சியில் உட்கார்ந்துகொண்டிருந்த எலியாவிடம் போய், “இறைவனுடைய மனிதனே, ‘கீழே வா’ என்று அரசன் கூறுகிறார்” என்றான்.
10 எலியா அதற்குப் பதிலாக தளபதியிடம், “நான் இறைவனுடைய மனிதனாயிருந்தால் பரலோகத்திலிருந்து நெருப்பு இறங்கி உன்னையும் உன் ஐம்பது மனிதரையும் சுட்டெரிக்கட்டும்” என்றான். அப்படியே பரலோகத்திலிருந்து நெருப்பு விழுந்து தளபதியையும் அவன் மனிதரையும் சுட்டெரித்துப்போட்டது.
11 அப்பொழுது அரசன் மற்றொரு தளபதியை ஐம்பது மனிதருடன் எலியாவிடம் அனுப்பினான். தளபதி அவனிடம், “இறைவனுடைய மனிதனே, உடனே கீழே வா என்று அரசன் சொல்கிறார்” என்றான்.
12 எலியா அதற்குப் பதிலாக, “நான் ஒரு இறைவனுடைய மனிதனாயிருந்தால், பரலோகத்திலிருந்து நெருப்பு இறங்கி உன்னையும் உன் ஐம்பது மனிதரையும் சுட்டெரிக்கட்டும்” என்றான். அப்படியே பரலோகத்திலிருந்து இறைவனுடைய நெருப்பு விழுந்து அவனையும் அவனுடைய ஐம்பது மனிதரையும் சுட்டெரித்துப்போட்டது.
13 அப்பொழுது அரசன் மூன்றாம் தளபதியையும் ஐம்பது மனிதருடன் சேர்த்து அனுப்பினான். இந்த மூன்றாம் தளபதி மேலே ஏறிப்போய் எலியாவின்முன் முழங்காற்படியிட்டு, “இறைவனுடைய மனிதனே, என்னுடைய உயிருக்கும் உமது பணியாட்களான இந்த ஐம்பது மனிதருடைய உயிர்களுக்கும் சற்று இரக்கம் காட்டும்.
14 இதோ பாரும், பரலோகத்திலிருந்து நெருப்பு விழுந்து முந்திய இரு தளபதிகளையும், அவர்களுடைய மனிதரையும் சுட்டெரித்துப்போட்டது. ஆனால் இப்போதோ என்னுடைய உயிருக்கு இரக்கம் காட்டும்” என்று கெஞ்சிக்கேட்டான்.
15 அப்பொழுது யெகோவாவின் தூதன் எலியாவிடம், “அவனோடே கீழே இறங்கிப்போ. அவனுக்குப் பயப்படாதே” என்றான். எலியா உடனே எழுந்து அவனோடுகூட கீழே இறங்கி அரசனிடம் போனான்.
16 அவன் அரசனிடம், “யெகோவா சொல்வது இதுவே: இஸ்ரயேலில் இறைவன் இல்லையென்றா, எக்ரோனின் தெய்வமாகிய பாகால் சேபூபிடம் விசாரிப்பதற்கு தூதுவரை அனுப்பினாய்? நீ இதைச் செய்தபடியினால், படுத்திருக்கும் படுக்கையை விட்டு எழும்பவே மாட்டாய். நீ நிச்சயமாய் சாவாய் என்கிறார்” என்றான்.
17 எலியா கூறிய யெகோவாவின் வார்த்தையின்படியே அகசியா இறந்தான்.
அகசியாவுக்கு ஒரு மகனும் இல்லாதிருந்தபடியினால் அவன் சகோதரன் யோராம் அவனுக்குப்பின் அரசனானான். யூதா அரசன் யோசபாத்தின் மகனான யெகோராம் யூதாவை அரசாண்ட இரண்டாம் வருடத்திலே யோராம் இஸ்ரயேலின் அரசனானான்.
18 அகசியா அரசனின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும், இஸ்ரயேல் அரசர்களின் வம்ச வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.