24
யோயாக்கீமின் ஆட்சியின் காலத்தில் பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சார் யூதா நாட்டுக்கு எதிராகப் படையெடுத்தான்; அதனால் யோயாக்கீம் மூன்று வருடங்களுக்கு அவனுக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தான். ஆனால் பின்பு தன் மனதை மாற்றி நேபுகாத்நேச்சாருக்கு எதிராகக் கலகம் செய்தான். யெகோவா யூதாவுக்கு எதிராக, கல்தேயா, சீரியா, மோவாப், அம்மோன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கொள்ளைக்கூட்டங்களை அனுப்பினார். இறைவனாகிய யெகோவா தனது அடியவனாகிய இறைவாக்கினன் மூலம் அனுப்பிய வார்த்தையின்படி, அவர் யூதாவை அழிப்பதற்காகவே இவர்களை அனுப்பினார். நிச்சயமாகவே மனாசேயின் பாவங்களுக்காகவும், அவன் செய்த எல்லாவற்றிற்காகவும் யெகோவாவின் கட்டளைப்படியே, யூதாவை தமது சமுகத்தைவிட்டு அகற்றுவதற்காக இவை யாவும் நடந்தன. அவன் எருசலேம் முழுவதையும் குற்றமற்ற இரத்தத்தினால் நிரப்பியபடியாலும் யெகோவா மன்னிக்க மனதில்லாதிருந்தார்.
யோயாக்கீமின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. யோயாக்கீம் தன் முற்பிதாக்களைப்போல இறந்துபோனான். அவனுக்குப்பின் அவனுடைய மகன் யோயாக்கீன் அரசனானான்.
பாபிலோனிய அரசன் எகிப்தின் நீரோடையிலிருந்து யூப்ரட்டீஸ் ஆறுவரை எகிப்திய அரசனின் பிரதேசம் முழுவதையும் கைப்பற்றியபடியால், எகிப்து அரசன் தன் சொந்த நாட்டிலிருந்து மீண்டும் படையெடுக்கவில்லை.
யூதாவின் அரசனான யோயாக்கீன்
யோயாக்கீன் அரசனாக வந்தபோது பதினெட்டு வயதுள்ளவனாயிருந்தான். அவன் எருசலேமில் மூன்று மாதங்கள் ஆட்சிசெய்தான். இவனுடைய தாய் எருசலேமைச் சேர்ந்த எல்நாத்தானின் மகளான நெகுஸ்தாள் என்பவள். தன் தந்தை செய்ததுபோலவே இவனும் யெகோவாவின் பார்வையில் தீமையையே செய்தான்.
10 அந்த வேளையில் பாபிலோனிய அரசனான நேபுகாத்நேச்சாரின் இராணுவ அதிகாரிகள் எருசலேம் நகரத்திற்கு எதிராக அணிவகுத்து அதை முற்றுகையிட்டனர். 11 அவனுடைய படைகள் முற்றுகையிட்டுக் கொண்டிருக்கும்போது அரசனாகிய நேபுகாத்நேச்சாரும் பட்டணத்திற்கு வந்தான். 12 அப்பொழுது யூதாவின் அரசன் யோயாக்கீன், அவன் தாய், ஏவலாளர்கள், அதிகாரிகள், உயர்குடி மக்கள் யாவரும் அவனிடம் சரணடைந்தார்கள்.
அவன் யோயாக்கீனைச் சிறைப்பிடித்தான். பாபிலோனிய அரசனின் ஆட்சியின் எட்டாம் வருடத்தில் இது நடந்தது. 13 யெகோவா முன்பாக அறிவித்தபடியே நேபுகாத்நேச்சார் யெகோவாவின் ஆலயத்திலிருந்தும், அரண்மனையிலிருந்தும் எல்லா திரவியங்களையும் எடுத்ததோடு, இஸ்ரயேலின் அரசனாகிய சாலொமோன் யெகோவாவின் ஆலயத்துக்கெனச் செய்து வைத்த தங்கத்தினாலான எல்லா பொருட்களையும் சூறையாடிக் கொண்டுபோனான். 14 அத்துடன் எருசலேம் முழுவதிலும் இருந்த எல்லா அதிகாரிகளையும், படைவீரரையும், சிற்பிகளையும், ஓவியர்களையும் மொத்தமாக பத்தாயிரம்பேரை நாடுகடத்திக் கொண்டுபோனான். மிகவும் ஏழையான மக்கள் மாத்திரமே மீதியாக விடப்பட்டு இருந்தனர்.
15 நேபுகாத்நேச்சார் யோயாக்கீனை பாபிலோனுக்கு சிறைபிடித்துக் கொண்டுபோனான். அத்துடன் அவன் எருசலேமிலிருந்து அரசனின் தாய், அவனுடைய மனைவியர், அதிகாரிகள், நாட்டின் தலைவர்கள் ஆகியோரையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனான். 16 பாபிலோனிய அரசன் இவற்றோடுகூட பலமும், போருக்குத் தகுதியுமுள்ளவர்களான ஏழாயிரம் வீரரைக்கொண்ட முழு இராணுவத்தையும் சிற்பிகளிலும், ஓவியர்களிலும் ஆயிரம்பேரையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனான். 17 பாபிலோன் அரசன் யோயாக்கீனுடைய சிறிய தகப்பன் மத்தனியாவை அவனுடைய இடத்தில் அரசனாக்கி, அவனுடைய பெயரை சிதேக்கியா என்று மாற்றினான்.
யூதாவின் அரசன் சிதேக்கியா
18 சிதேக்கியா அரசனானபோது இருபத்தொரு வயதுள்ளவனாயிருந்தான். அவன் எருசலேமில் பதினோரு வருடங்கள் ஆட்சிசெய்தான். அவனுடைய தாயின் பெயர் அமூத்தாள். அவள் லிப்னா ஊரைச்சேர்ந்த எரேமியாவின் மகள். 19 யோயாக்கீம் செய்ததுபோல இவன் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான். 20 யெகோவாவின் கோபத்தினாலேயே எருசலேமுக்கும் யூதாவுக்கும் இவையெல்லாம் நடந்தன. முடிவில் அவர்களை தமது சமுகத்திலிருந்து அகற்றிவிட்டார்.
எருசலேம் வீழ்ச்சி
இந்த நேரத்தில் சிதேக்கியா பாபிலோன் அரசனுக்கு எதிராக கலகம் செய்தான்.