10
நாதாப், அபியூ மரணம்
ஆரோனின் மகன்களான நாதாபும், அபியூவும் தங்கள் தூபகிண்ணங்களில் நெருப்பைப்போட்டு, நறுமணத்தூளை அதில் போட்டார்கள். அவர்கள் யெகோவாவின் கட்டளைக்கு முரண்பாடாக, அங்கீகரிக்கப்படாத நெருப்பை யெகோவாவுக்கு முன்பாகச் செலுத்தினார்கள். உடனே யெகோவாவின் முன்னிருந்து நெருப்பு புறப்பட்டுவந்து அவர்களை எரித்துப்போட்டது. அவர்கள் யெகோவாவுக்கு முன்பாகச் செத்தார்கள். அப்பொழுது மோசே ஆரோனிடம் சொன்னது:
“ ‘என்னை நெருங்கி வருகிறவர்களிடையே
நான் என்னைப் பரிசுத்தராகக் காண்பிப்பேன்.
எல்லா மக்களின் பார்வையிலும்
நான் மகிமைப்படுவேன்’ என்று யெகோவா சொன்னபோது அவர் குறிப்பிட்டது இதுவே.”
ஆரோனோ ஒன்றும் பேசாமல் இருந்தான்.
பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான ஊசியேலின் மகன்களான மீசயேலையும், எல்சாபானையும் அழைத்து, “இங்கே வாருங்கள்; உங்கள் சகோதரர்களின் உடல்களை முகாமுக்கு வெளியே பரிசுத்த இடத்திலிருந்து கொண்டுபோங்கள்” என்றான். மோசே உத்தரவிட்டபடியே அவர்கள் வந்து, இறந்தவர்களை அவர்களின் அங்கிகளுடன் தூக்கி, முகாமுக்கு வெளியே கொண்டுபோனார்கள்.
மோசே ஆரோனிடமும், அவனுடைய மகன்களான எலெயாசார், இத்தாமார் என்பவர்களிடமும், “நீங்கள் துக்கம் அநுசரிப்பதற்காக உங்கள் தலைமயிரைக் குலையவிடவும், உடைகளைக் கிழித்துக்கொள்ளவும் வேண்டாம். அப்படிச் செய்தால் நீங்கள் சாவீர்கள். யெகோவா முழு சமுதாயத்தின்மேலும் கோபங்கொள்வார். ஆனால் உங்கள் உறவினரான இஸ்ரயேல் குடும்பத்தார் அனைவரும், யெகோவா நெருப்பினால் அழித்தவர்களுக்காக துக்கம் அநுசரிக்கலாம். நீங்கள் சபைக்கூடார வாசலைவிட்டுப் புறப்படவேண்டாம். அப்படிப் புறப்பட்டால் யெகோவாவினுடைய அபிஷேக எண்ணெய் உங்கள்மேல் இருப்பதால் நீங்கள் சாவீர்கள்” என்றான். மோசே சொன்னபடியே அவர்கள் செய்தார்கள்.
யெகோவா ஆரோனுக்குச் சொன்னதாவது: “நீயும் உன் மகன்களும் சபைக் கூடாரத்திற்குள் போகும்பொழுது, திராட்சை இரசத்தையோ அல்லது வேறு மதுபானத்தையோ குடிக்கவேண்டாம். குடித்தால் நீங்கள் சாவீர்கள். தலைமுறைதோறும் இது ஒரு நிரந்தரமான நியமம். 10 நீ பரிசுத்தமானதற்கும், சாதாரணமானதற்கும் இடையில் வித்தியாசத்தைக் காட்டவேண்டும். சுத்தத்திற்கும், அசுத்தத்திற்கும் இடையிலும் வித்தியாசத்தைக் காட்டவேண்டும். 11 அத்துடன் யெகோவா மோசேயின் மூலமாக இஸ்ரயேலருக்குக் கொடுத்திருக்கிற விதிமுறைகள் எல்லாவற்றையும் நீ அவர்களுக்குப் போதிக்கவேண்டும்” என்றார்.
12 அப்பொழுது மோசே, ஆரோனிடமும் அவனுடைய தப்பியிருந்த மகன்களான எலெயாசாரிடமும், இத்தாமாரிடமும் சொன்னதாவது: “யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்பட்ட காணிக்கையிலிருந்து மீதியாய் விடப்பட்ட தானியக் காணிக்கையை எடுத்துக்கொள்ளுங்கள். அதைப் பலிபீடத்திற்கு அருகே புளிப்பில்லாமல் தயாரித்துச் சாப்பிடுங்கள். ஏனெனில், அது மகா பரிசுத்தமானது. 13 யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படுகிற காணிக்கைகளில் இது உனக்கும் உன் மகன்களுக்கும் உரிய பங்காக இருப்பதால், அதை ஒரு பரிசுத்த இடத்தில் சாப்பிடுங்கள். இப்படியாக நான் கட்டளை பெற்றிருக்கிறேன். 14 ஆனாலும் அசைவாட்டப்பட்ட நெஞ்சுப்பகுதியையும், படைக்கப்பட்ட தொடையையும் நீயும் உன் மகன்களும், மகள்களும் சாப்பிடலாம். அவற்றை சம்பிரதாய முறைப்படி சுத்தமானது என எண்ணப்பட்ட இடத்திலேயே சாப்பிடலாம். இஸ்ரயேலரின் சமாதான காணிக்கைகளில் ஏற்படுத்தப்பட்ட உங்கள் பங்காக அவை உனக்கும், உன் பிள்ளைகளுக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 15 படைக்கப்பட்ட தொடையும், அசைவாட்டப்பட்ட நெஞ்சுப்பகுதியும் நெருப்பினால் செலுத்தப்பட்ட காணிக்கைகளின் கொழுப்பான பாகங்களுடன், அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டும்படி கொண்டுவர வேண்டும். யெகோவா கட்டளையிட்டபடியே இது உனக்கும், உன் பிள்ளைகளுக்கும் நிரந்தர பங்காயிருக்கும்” என்றான்.
16 பிறகு பாவநிவாரண காணிக்கைக்கான வெள்ளாட்டுக் கடாவைப்பற்றி மோசே தேடிப்பார்த்தபோது, அது ஏற்கெனவே எரிக்கப்பட்டிருப்பதைக் கண்டான். அப்பொழுது அவன் ஆரோனின் மற்ற மகன்களான எலெயாசார்மேலும், இத்தாமார்மேலும் கோபங்கொண்டான். 17 ஆகவே மோசே அவர்களிடம், “நீங்கள் ஏன் பாவநிவாரண காணிக்கையை பரிசுத்த இடத்தில் சாப்பிடவில்லை? அது மகா பரிசுத்தமானது. யெகோவா முன்னிலையில் இஸ்ரயேல் சமுதாயத்தினருக்காக பாவநிவர்த்தி செய்வதின்மூலம் அவர்களுடைய குற்றத்தை நீக்கும்படி அது உங்களுக்குக் கொடுக்கப்பட்டதே. 18 அதன் இரத்தம் பரிசுத்த இடத்திற்குள் கொண்டுவரப்படாதபடியால், உங்களுக்கு நான் கட்டளையிட்டபடி நீங்கள் அந்த வெள்ளாட்டைப் பரிசுத்த இடத்தில் சாப்பிட்டிருக்க வேண்டுமே” என்றான்.
19 அதற்கு ஆரோன் மோசேயிடம், “இன்றுதானே அவர்கள் பாவநிவாரண காணிக்கையையும், தகன காணிக்கையையும் யெகோவா முன்னிலையில் பலியிட்டார்கள். ஆனாலும் இப்படிப்பட்ட வேதனையான நிகழ்வுகள் எனக்கு நேரிட்டிருக்கிறதே. இன்று நான் பாவநிவாரண காணிக்கையைச் சாப்பிட்டிருந்தால் யெகோவா மகிழ்ச்சியடைந்திருப்பாரோ?” என்று கேட்டான். 20 அந்தப் பதில் மோசேக்குத் திருப்தியைக் கொடுத்தது.